காரணம் : ஜே.செல்லம் ஜெரினா





ஜானகிக்கு கோபம் கொப்பளித்தது... ‘‘அடிப்பாவி... அடிபட்டு ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு வந்தப்போ ‘எக்ஸாமுக்கு படிக்கணும்... எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க’ன்னு துடிச்சவ, இப்ப ‘ஒரு வாரம் ஆனாலும் பரவாயில்ல... நிதானமாவே வீட்டுக்குப் போலாம்’ங்கிறாளே. எல்லாத்துக்கும் பக்கத்து பெட்ல புதுசா சேர்ந்த வாட்டசாட்டமான அந்தப் பையன்தான் காரணம்! அவன் இவளையே முறைக்கறதும், இவ அவனைப் பார்க்கறதும்...’’ என்று புலம்பிப் புலம்பி மாய்ந்து போனாள்.

ஜானகியின் மகள் சந்தியா பத்தாம் வகுப்பு மாணவி. பத்து நாளில் பரீட்சை ஆரம்பம். திடீரென்று பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் நல்லவேளையாக தசைப் பிறழ்வு மட்டுமே நேர்ந்திருந்தது.

‘‘பரவாயில்ல டாக்டர்... நாங்க வீட்லயே பார்த்துக்கறோம்’’ என்று வாதாடி, அன்றைக்கே டிஸ்சார்ஜ் செய்தாள் ஜானகி.
வீட்டுக்கு வந்ததும் சந்தியா படுக்கையிலேயே சாய்ந்தபடி புத்தகத்தை எடுத்தாள். முதல் பக்கத்தைத் திறந்ததும், பட்டென்று மின்சாரம் போய்விட்டது.

‘‘ச்சே... இந்தத் தொல்லைக்குத்தான் இன்னும் ஒரு வாரம் ஹாஸ்பிட்டல்லயே இருக்கலாம்னு சொன்னேன். அங்க பவர்கட் அப்போ ஜெனரேட்டர் ஓடும். மிச்ச பாடங்களையும் ரிவைஸ் பண்ணிடலாம்னு நினைச்சேன்’’ - சந்தியா இருட்டில் புலம்புவது ஜானகிக்குக் கேட்டது. தன் முட்டாள்தனத்தை எண்ணி அவள் தலையில் அடித்துக் கொண்டாள். இருட்டு அவளைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தது!