தகுதி : டி.மூர்த்தி சரண்





‘‘முதலிடத்துல பிரதாப்... அடுத்த இடத்துல பாஸ்கர். இவங்கதான் ஃபைனல் இன்டர் வியூல செலக்ட் ஆன வங்க சார்! இவங்கள்ல ஒருத்தரை நாம தேர்ந்தெடுத்துக்கலாம்...’’ என்றார் பி.ஏ. பழனியப்பன்.

‘‘ஓகே! ஐ வில் கால் யு லேட்டர்’’ என்றபடி இருவர் பைல்களையும் வாங்கிக் கொண்ட எம்.டி., சற்று நேரத்திலேயே பழனியப்பனை மீண்டும் அழைத்தார்.
‘‘பாஸ்கருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அனுப்பிடுங்க...’’
‘‘ஓகே ஸார்! ஆனா, அவரைவிட முதலிடத்துல இருக்கறது பிரதாப்தானே..?’’

‘‘உண்மைதான். அது குவாலிஃபிகேஷன் அடிப்
படையில! இது சைக்கலாஜிகல் முடிவு. பிரதாப் இதுக்கு முன்னாடி ஒவ்வொரு கம்பெனிலயும் ஒரு வருஷம், 8 மாசம், 6 மாசம்னு இருந்திருக்காரு. எதுலயும் திருப்தி இல்ல அவருக்கு. இங்கே வந்தாலும் எவ்ளோ மாசம் இருப்பார்னு சொல்ல முடியாது.

ஆனா, பாஸ்கர் நாலு வருஷமா ஒரே கம்பெனியில இருந்திருக்காரு. அவரால அந்தக் கம்பெனியும் ஓரளவு வளர்ந்திருக்கு. அவர் கேட்ட சம்பளத்தை மட்டும் நாம சேங்ஷன் பண்ணிட்டா மனுஷன் இதை விட்டு அசைய மாட்டாரு... எல்லாத்துக்கும் மேல...’’

‘‘சொல்லுங்க ஸார்!’’
‘‘நல்ல கம்பெனில சேர்ந்து நாம வளரலாம்னு நினைக்கிற பிரதாப்பை விட, நாம இருக்குற கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு நினைக்கிற பாஸ்கர்தான் என்னோட சாய்ஸ்!’’