கவிதைகாரர்கள் வீதி





சுமை


அம்மா இறக்கிவைத்த சுமை
இடுப்பில் தூக்கி சுமக்கிறாள்
பத்து வயது பாப்பா
- மா.கண்ணன்,
ராஜபாளையம்.


எழுதாதது...

ரசித்தலில் லயித்துவிடுவதால்
எப்பொழுதும்
எழுத முடிவதில்லை...
மழையைப் பற்றிய
ஒரு நல்ல கவிதை!
- கு.வைரச்சந்திரன், திருச்சி.

ஞாபகம்


வருடங்கள் பல கடந்தும்
அம்மாவின் இறந்த நாளை
நினைவூட்டிக் கொண்டிருக்கிறது,
அம்மா நட்டு
அடைமழையில் முறிந்துவிழுந்த
வேப்ப மரம்!
- ஜி.வி.மனோ,
தூத்துக்குடி.

தொலைந்தது...

குறுந்தகவல்கள்
கொண்டு வருவதேயில்லை
அவரவர் கையெழுத்தின்
அழகினை!
- பெ.பாண்டியன், காரைக்குடி.

கற்பனை

வானவில்லைப் பற்றி
குறிப்பெழுதுகிறது
ஒரு குழந்தை...
‘வானவில்
கடவுள் விளையாடும்
ஸ்கிப்பிங் கயிறு!’
- தஞ்சை கமருதீன், தஞ்சாவூர்.

தண்டனை


தவறு செய்யாமலேயே
தினமும் சக்கரங்களால்
நசுக்கப்படுகிறது
எலுமிச்சம்பழம்!
- இரா.வசந்தராசன், கல்லாவி.