தமிழர் இசை மூவாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதிகாலை துயில் எழுப்புவதில் தொடங்கி, நள்ளிரவு உறங்குகாலம் வரை தளும்பத்தளும்ப இசையூற்றி இறைவனை வணங்குவது தமிழர் மரபு. காலத்துக்கும் பருவத்துக்கும் ஏற்ற கருவிகளை உருவாக்கி, உடல் வருத்தி, உயிர் பகிர்ந்து இசைத்து இறைவனை வணங்கினர் தொல்தமிழர்கள். அவற்றில் முதன்மையானது நாதஸ்வரம்.ஆதி இசைக்கருவியான இந்த நாதஸ்வரம், இப்போது ஆச்சா என்ற மரத்தில் செய்யப்படுகிறது. வெட்டிவைத்து பல்லாண்டுகள் ஆன ஆச்சா மரமே நாதஸ்வரம் செய்யத் தகுந்தது. மரத்தின் உடலில் உள்ள ஈரம் உலர்ந்தால் மட்டுமே ஆச்சா மரம் உறுதிப்படும். மரத்தில் செய்வதற்கும் முந்தைய ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. இதற்குச் சான்றாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கல் நாதஸ்வரங்கள் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோயில்களில் இப்போதும் காணக் கிடைக்கின்றன.
உலவும் அனசும் நாதஸ்வரத்தின் பாகங்கள். முகப்பில் உள்ள முக்கிய பாகமான சீவாளி, காவிரிக்கரையில் விளையும் ஒரு நாணல் புல்லில் செய்யப்படுகிறது. கல் நாதஸ்வரத்தில், உலவுப்பகுதி மூன்று உறுதியான கருங்கற்களால் தனித்தனியாகச் செய்யப்பட்டு வெண்கலப்பூணால் இணைக்கப் பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள கல் நாதஸ்வரம், ராஜராஜன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. ‘‘எனக்கு விபரம் தெரிந்த காலத்தில்,
இங்குள்ள நாகேஸ்வரன் சந்நதியில் பூஜைக்காலத்தில் நாதஸ்வர மேதை மன்னார்குடி பத்திரியா பிள்ளை இந்த கல் நாதஸ்வரத்தை வாசிப்பார். அதில் இருந்து ஒலிக்கும் கணீர் இசை நெடுந்தூரம் கேட்கும்’’ என நினைவுகளை தூசிதட்டுகிறார் கலை விமர்சகர் தேனுகா. கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் பத்திரமாக பாதுகாக்கப்படும் ஓரடி நீளமுள்ள இந்த கல் நாதஸ்வரம் சுமார் 12 கிலோ எடை கொண்டது. ஆச்சா மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரம் ஒன்றரை கிலோ எடைதான். ‘‘கல் நாதஸ்வரம் வாசிக்க மர நாதஸ்வரத்துக்கு தேவைப்படும் சக்தியைப் போல இருமடங்கு தேவை’’ என்கிறார் ஆதி கும்பேஸ்வரர் கோயில் நாதஸ்வரக் கலைஞர் சாமிநாதன். கோயிலுக்கு வி.ஐ.பி.கள் வருகை தரும்போது இவர்தான் இந்த கல் நாதஸ்வரத்தை அதன் பேழையிலிருந்து எடுத்து வாசிக்கிறார்.
‘‘மரத்தால் செய்யப்படும் நாதஸ்வரத்தில் 7 ஸ்வரங்கள். கல் நாதஸ்வரத்தில் 6 ஸ்வரங்கள் மட்டுமே இருக்கும். சண்முகப்ரியா, கல்யாணி போன்ற பிரதி மத்திம ராகங்கள் மட்டுமே வாசிக்க முடியும். சங்கராபரணம், கரகரப்பிரியா, தோடி போன்ற சுத்த மத்திம ராகங்களை இந்த நாதஸ்வரம் பேசாது. முழுமையாகவும் அடர்த்தியாகவும் மூச்சை உள்ளே செலுத்தினால்தான் இசை வெளியேறும். ஆனால் வெளியேறும் இசை மிகக் கனமாக இருக்கும். நல்ல பயிற்சி இருந்தால் மட்டுமே இதை வாசிக்க முடியும்’’ என்கிறார் சாமிநாதன்.‘‘தஞ்சைப் பகுதியில் வாழும் தனவந்தர்கள், தங்கள் இல்ல விழாக்களில் மேன்மை பொருந்திய இசைக்கருவிகளும் இசைக்கலைஞர்களும் பங்கேற்று இசைப்பதை கௌரவமாகக் கருதுவார்கள். பந்தநல்லூர் குருசாமி என்ற நாதஸ்வரக் கலைஞர் தங்கத்தால் ஆன நாதஸ்வரம் வைத்து இசைத்து வந்தார். பெரிய மனிதர்கள் அந்த நாயனக்காரரை விரும்பி அழைத்து தங்க நாதஸ்வரத்தில் இசைக்கச் செய்வார்கள்’’ என்கிறார் தேனுகா.கல் நாதஸ்வரங்களை பொக்கிஷம் போல கருதி பாதுகாக்கிறார்கள். அண்மையில் தஞ்சாவூரில் நடந்த பெரிய கோயில் 1000 ஆண்டு விழா கண்காட்சியில் இந்த கல் நாதஸ்வரம் இசைத்துக் காண்பிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோயிலிலும் ஒரு கல் நாதஸ்வரம் உண்டு. 350 ஆண்டுகளுக்கு முன் அரசாண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது இது. இந்த நாதஸ்வரம் இப்போது வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது. இசைக்கப்படுவதில்லை.