விஜயா டீச்சர்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine

          ‘‘என்ன டீச்சர்... ஒரு மணி நேரம் பர்மிஷன் கேட்டிருந்தீங்க. ஆனா, பிரேயருக்கே வந்துட்டீங்களே..?’’ என்று கிசுகிசுப்பாகக் கேட்டார் கலைச்செல்வன். பள்ளிக்கூடத்தின் பிசிக்கல் மாஸ்டர். ‘ஜன கண மன...’ பாடிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

‘‘பிடிச்சிருக்குனு சொல்லியிருந்தாதானே பர்மிஷனுக்கு தேவை... இந்த 31வது மாப்பிள்ளையும் புடிக்கலைன்னுட்டு போயிட்டான். உங்க சச்சினுக்கு 100வது செஞ்சுரியும் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்ற மாப்பிள்ளையும் அமைய ரொம்ப நாளாகும் போலிருக்கு!’’ என்ற விஜயாவின் முகத்தில் சிரிப்பு மட்டுமே இருந்தது.

‘‘ஸாரி டீச்சர்... ஒரு விஷயம் மட்டும் சொல்றேன். உங்களுக்குனு இனி ஒருத்தர் பொறக்கப் போறதில்லை. வேணா பாருங்க, உங்களைப் புரிஞ்சுகிட்டவரா... உங்களுக்குப் புடிச்சவரா ஒரு மனுஷன் திடும்னு உங்க முன்னாடி வந்து நிக்கத்தான் போறாரு. அன்னிக்கு நீங்க, அவரு சொன்னாருன்னு இந்த வேலையை விட்டுட்டுக்கூட போயிடுவீங்க.’’

‘‘இல்லை சார்... அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க. என் உயிரே போனாலும் இந்த வேலையை மட்டும் விடமாட்டேன்...’’ என்றாள் விஜயா படபடப்பாக.

‘‘அதுக்கில்லை டீச்சர்... எங்களை மாதிரி ஆம்பளைங்க எல்லாம் சம்பாதிச்சுக் கொண்டாந்து கொட்டணும்னும், உங்களை மாதிரி பொம்பளைங்க வீட்டுக்குள்ள முடங்கி சாயங்காலமா வீட்டுக்கு வரப் போற ஆம்பளைக்காக மத்தியானமே பவுடர் அடிச்சு வாசல்ல நிக்கணும்னும்தான் காலங்காலமா சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க. நாம ஆசைப்பட்டா மட்டும் எல்லாத்தையும் மாத்திட முடியுமா என்ன..? இப்பவும் அப்பா & அம்மா விளையாடுற பிள்ளைகளில் ஆம்பளைப் பசங்க வாயிலேயே வண்டி ஓட்டிக்கிட்டு ஆபீஸுக்கும், பொம்பளைப் புள்ளைங்க இல்லாத சட்டிப் பானையை வச்சு சமைச்சுக்கிட்டும்தானே இருக்குதுங்க!’’

‘‘நல்லா பேசறீங்க சார்... நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் ஆனா, பொண்டாட்டி தன் விருப்பத்துக்கு இருக்கலாமா, இல்லை மிஸஸ் கலைச்செல்வன்னு புது பட்டத்தைக் கொடுத்து உங்க சாயத்தை அவங்க மேல பூசிடுவீங்களா..?’’ என்ற விஜயாவை தயக்கத்தோடு இடைமறித்தார் கலைச்செல்வன்.

‘‘அது நான் மட்டும் முடிவு செய்யற விஷயமில்லை... எங்க குடும்பம் கூடி முடிவு செய்யும். ஆனா ஒரு விஷயம் டீச்சர்... என் மனைவி வேலைக்குப் போயிட்டிருந்தா நிச்சயம் நிறுத்த மாட்டேன்...’’ என்றார்.

‘‘கரெக்ட்... எப்பவுமே மாற்றம் தன்னில் இருந்து வரணும். ஆணும் பெண்ணும் சமம்னு பேசுறதுக்கு பாரதி மேடையெல்லாம் போடலை... தன் செல்ல மனைவி செல்லம்மா தோளில் கைபோட்டு கம்பீரமா நடந்தார். சொல்லைவிட செயல் முக்கியம்... நீங்களும் அப்படி இருப்பீங்கனு சொன்னது சந்தோஷம்...’’ என்று சொல்லிவிட்டு டீச்சர்களுக்கான அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

விஜயாவுக்குள் காலையில் நடந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக ஓடின.

‘‘சனியன்... இன்னும் என்னவெல்லாம் பண்ணக் காத்திருக்கோ... சாப்பாட்டை கடைக்குக் கொடுத்து அனுப்பு...’’ என்றபடி அப்பா புறப்பட்டுச் சென்றுவிட, அம்மா அமைதியாகத் தலையசைத்தாள்.

‘‘என்ன ஐஸ்... உன் அபிஷேக் பச்சன் எங்கே இருக்கான்னு தெரியலையே! வந்தவன் டிகிரி முடிக்கலை... ஒரு பிரைவேட் கம்பெனியில் ஆபீஸ் அசிஸ்டென்ட்டா இருக்கான். உன் வேலை அவனுக்குப் புடிக்கும்னு நினைச்சேன்... ஆனா, மிஸ் ஆகிடுச்சே. யாரையாவது லவ் பண்ணுன்னு சொல்லிடலாம்... ஆனா, யாராவது உன்னை பண்ணணுமேனு நினைக்கும்போதுதான் அதுக்காக வாய்ப்பு இல்லைனு புரியுது...’’ -அத்தான் சொல்லிக் கொண்டே போக, மங்கை அக்கா அமைதியாக இருந்தாள்.

‘‘ரத்னா... இன்னிக்கு எனக்கு புதுக்கோட்டை ரூட்தான் டியூட்டி. ரெண்டரை வண்டிக்கு வரும்போது சாப்பாடு குடுத்து விட்டுரு. ஏய்... என்னடி உம்முனு இருக்க..? தலையை கிலையை வலிக்குதா..?’’ என்று அண்ணன் அண்ணிக்கு பக்கத்தில் பாயில் உட்கார்ந்துவிட்டான்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘அதெல்லாம் ஒண்ணு மில்லை... இந்த இடமாவது உங்க தங்கச்சிக்கு முடிஞ்சுரும்னு நினைச்சேன். இப்படி ஆகிடுச்சே. இப்ப நாகராஜுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை...’’ என்று சலித்துக் கொண்டாள் அண்ணி.

‘‘அது யாருடி நாகராஜ்... நம்ம வீட்டு விஷயத்தை அவனுக்கு ஏண்டி சொல்லப் போறே..?’’ - வேலையை மறந்து ஆர்வமாகக் கேட்டான்.

‘‘என்ன, தெரியாத மாதிரி கேட்கறீங்க... நம்ம கல்யாணத்தப்போகூட வந்திருந்த எல்லாருக்கும் விசிறி அச்சடிச்சுக் குடுத்தாரே... எங்க சித்தப்பா. சிவகாசியிலே இருக்காரே... அவரு பையன்தான். எங்க வீட்டு ஆளுகளை ஞாபகம் இருக்காதே..?’’ - கம்மிய குரலில் ரத்னா ஆரம்பிக்க...

‘‘இல்லை ரத்னா... நான் பேரைக் குழப்பிக்கிட்டேன். சரி, அதைவிடு... அந்த நாகராஜுக்கு எதுக்கு நீ பதில் சொல்லணும்..?’’ என்றான்.

‘‘இல்லை... விஜயாவுக்கு இந்த இடம் முடிஞ்சுட்டா அடுத்து ராதாவை நம்ம நாகராஜுக்கு கேட்கலாம்னு நினைச்சிருந்தேன்... அதை ஒரு தடவை அவன்கிட்டே சொல்லவும் செய்திருந்தேன். அவனும் ஒரு தடவை நம்ம பிரேமா மகளுக்கு தண்ணீர் ஊற்றும் ஃபங்ஷனுக்கு வந்திருந்தப்போ ராதாவைப் பார்த்துட்டுப் போனான். அதிலேருந்து எப்போ விஜயாவுக்கு முடியும்னு கேட்டுக்கிட்டே இருந்தான்... இன்னிக்கு மாப்பிள்ளை வீடு வர்ற விஷயம் அவனுக்குத் தெரியும்... கேட்பான், என்ன சொல்றதோ..?’’ என்றாள்.

விஜயாவின் அண்ணன் சோமசுந்தரத்துக்கு அந்த நாகராஜ், பிரேமா போன்ற பெயர்களுக்கான முகங்கள் நினைவுக்கே வரவில்லை. ஆனால், எல்லாம் ரத்னாவின் சொந்தங்கள்... தெரியாது என்று சொன்னால் தொலைந்தான்.

‘‘நான் கிளம்பறேன்... நீ சாப்பாட்டை அப்பா கடையிலே குடுத்திரு...’’ என்றபடி வேகமாக வெளியேறினான். ‘விஜயாவுக்கு முந்திக் கொண்டு ராதாவுக்கு உறவுக்கார பையனை மாப்பிள்ளை பார்த்த நீ, ஏன் அந்த மாப்பிள்ளையை விஜயாவுக்கு பார்க்கவில்லை’ என்று அவன் கேட்கவில்லை. கேட்கவும் மாட்டான்... ஏனென்றால், அவன் காதுபடவே, ‘விஜயாவுக்கும் அரிசி டிரம்முக்கும் வித்தியாசம் தெரியவில்லை’ என்று கேலி பேசியிருக்கிறாள் ரத்னா.

டீச்சர்களுக்கான அறையில் இருந்த கண்ணாடியைத் தாண்டிச் செல்லும்போது வழக்கம்போல தலையைச் சரி செய்வதற்காக ஒரு கணம் நின்று பார்த்தாள் விஜயா. ‘அரிசி டிரம் மாதிரியா இருக்கிறேன் நான்...’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

‘பொண்ணைக் காட்டச் சொன்னா பொம்பளையைக் காட்டுறீங்களே...’ என்ற மாப்பிள்ளையின் குரல் உள்ளுக்குள் ஒருமுறை ஓடி மறைந்தது. நிஜமாகவே நான் பெண் என்ற கட்டத்தைத் தாண்டி பொம்பளை தோற்றத்துக்கு வந்துவிட்டேனா? முகத்தை லேசாகத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். கைகள் தானாக உடம்பைத் தடவி இடுப்பைத் தொட்டுப் பார்த்தது.

‘‘என்ன விஜயா... மிஸ் காரைக்குடி போட்டி எதுலேயாவது கலந்துக்கப் போறீயா...’’ என்றபடி உள்ளே நுழைந்தாள் ஈஸ்வரி. சட்டென்று நகர்ந்த விஜயா, தன் நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

ஈஸ்வரியும் விஜயாவும் ஒரே நாளில் அப்பாயின்ட் ஆனவர்கள். வேலை கிடைத்த மூன்றாவது மாதத்தில் ஈஸ்வரிக்கு கல்யாணம். வேலையில் இருக்கிறாள் என்ற ஒரே காரணத்துக்காக பத்து பவுன் நகை போதும் என்று கட்டிக் கொண்டார்கள்.

‘‘சொல்லு விஜயா... கல்யாணத்துக்குள்ளே இடுப்பு சதையைக் கொஞ்சம் குறைச்சுடுன்னு மாப்பிள்ளை சொல்லிட்டுப் போயிருக்காரா?’’ - கேட்டாள்.

‘‘இல்லை ஈஸ்வரி... மாப்பிள்ளைக்கு என்னைப் புடிக்கலையாம்... அதான் ‘என்ன பிடிக்கலை’ன்னு பார்த்துகிட்டிருந்தேன்... நான் ஆளு கொஞ்சம் குண்டுதான் இல்ல? கலரும் இல்லை...’’

‘‘அடிப்பாவி... நீயே அவங்களுக்கு எடுத்துக் கொடுப்பே போலிருக்கே! உன் களையான முகத்துக்கு என்னடி குறைச்சல். ரெண்டு பிள்ளை பெத்துட்டா எல்லாரும் பேரல்கணக்காதான் ஆகிடுவோம். அது ஒரு குறையா என்ன... ஆம்பளைங்க மட்டும் அப்படியே இருந்துடுவாங்களா... நாலே வருஷத்தில் முன்னந்தலை மயிரெல்லாம் கொட்டிப் போயிடும்... வயிறு தாழிகணக்கா முன்னே தள்ளிக்கிட்டு வந்திடும். இப்போ நிலைமைக்கு அவங்க பத்து பவுன் போடுறேன்னு சொன்னாக்கூட நான் என் வீட்டுக்காரரைக் கட்டிக்கிட சம்மதிக்க மாட்டேன் தெரியுமா?’’ என்று ஈஸ்வரி வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, விஜயா பிள்ளைகளின் நோட்டுகளைக் கையில் எடுத்தாள். ஈஸ்வரிக்கு இனி பேசுவது வீண் என்று தெரிந்துவிட்டது. கைப்பையில் இருந்து ஒரு நாவலை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள்.

அந்த நிமிடத்தில் இருந்து அவள் வேறு விஜயா. அதுதான் அவளுடைய சுபாவம். பாடம் என்று வந்துவிட்டால் எல்லாவற்றையும் மறந்துவிடுவாள். காலையில் ஒருவன் பெண் பார்க்க வந்ததோ, அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றதோ அவளுக்குத் தோன்றாது. நாலாங்கிளாஸில் மூன்றாவது பெஞ்சில் இருக்கும் கணேசன் நேற்றே சுகமில்லை என்று லீவு போட்டிருந்தானே... இன்றைக்கு அவன் வந்திருப்பானா என்ற எண்ணம் மட்டும்தான் அவளுக்கு மனதில் நிற்கும்.

அதுதான் அவளின் மனக் கவலைகளுக்கு மருந்தாக இருக்கிறது.வீடு ஏக களேபரத்தில் இருந்தது. அப்பா உச்சபட்ச குரலில் கத்திக் கொண்டிருந்தார். விஜயா பின்பக்கம் போய் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள காராசேவு அள்ளிக் கொண்டு வந்தாள்.

‘‘தின்னு... இன்னமும் இப்படியே தின்னு குலுக்கை கணக்கா பெருத்துப் போ! காலையிலே இவ்வளவு நடந்திருக்கே... அந்த வருத்தம் கொஞ்சங்கூட இல்லாம சாயங்காலம் அஞ்சு ரூபாயை எடுத்துக்கிட்டு கடைக்கு வந்து நிக்கிறா, மசாலா கடலை குடுங்கனு! எனக்கு மதிய சோறே இறங்கலை... ஆனா, இவளுக்கு அந்த வாட்டமும் இல்லை, வருத்தமும் இல்லை! இப்போகூட பாரு... ஏதோ சுவரைப் பார்த்து பேசுற மாதிரி தின்னுக்கிட்டிருக்கறதை. என்ன கணக்குல எடுத்துக்கறது இந்தச் சனியனை!’’ என்று தலையில் அடித்துக் கொண்டார்.

Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘அக்கா... நிஜமாவே உனக்கு வருத்தம் இல்லையா... இல்லை, கல்யாணம் கட்டிக்கிட்டு போயிட்டா இப்படி மிக்சர் சேவு கிடைக்காதேன்னு நினைச்சுட்டிருக்கியா. இன்னிக்கும் இப்படி சாப்பிடணுமா... அப்பா கோபப்படாம என்ன செய்வார்?’’ என்று கடிந்து கொண்ட இரட்டையரில் பெரியவள் ராதா, விருட்டென்று எழுந்து உள்ளே போனாள்.

‘‘உன்னைவிட வயசு கம்மி அவளுக்கு... இந்தக் குடும்பத்து மேலே அவளுக்கு இருக்கற அக்கறையில் பத்தில் ஒரு பங்காவது இருக்கா...’’ என்று சொல்லிவிட்டு அப்பா எழுந்து போய்விட்டார்.

ராதா நடிப்பில் கெட்டி. தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் அவள் போடுகிற டிராமா முன்னால் மெகா சீரியல்கள் எல்லாம் தோற்றுப் போகும். கல்லூரிக்குப் போட்டுக் கொண்டு போக புது சுடிதார் வேண்டுமென்றால் விஜயாவில் இருந்து ஆரம்பிப்பாள். ‘‘அக்கா... நீ என்னிக்காவது சுடிதார் போட்டிருக்கியா... ஆக்சுவலி, சுடிதார் போட்டா உன் இடுப்பு சதை மறைஞ்சு இன்னும் கொஞ்சம் ஸ்லிம்மா இருப்பே... ட்ரை பண்ணிப் பாரேன்...’’ என்று ஆரம்பிப்பாள்.

விஜயா அப்பாவியாகப்போய் அம்மாவிடம் இதை ஆரம்பித்தால் போதும்... அப்பாவோ, அண்ணனோ காய்ச்சி எடுப்பார்கள். ‘‘வேலைக்குப் போறே... நாலு கழுதை வயசாச்சு... இன்னும் என்ன சுடிதார் அது இதுன்னுக்கிட்டு இருக்கே... ராதா மாதிரி காலேஜ் படிக்கிற பொண்ணு போட்டா அதுல ஒரு அழகு இருக்கும்... அதோட, உன் சைஸுக்கு சுடிதார் கடையில் இருக்குமோ என்னவோ...’’ என்று நோகடிப்பார்கள். அந்தப் புள்ளியில் இருந்து கோலம் வரையத் தொடங்கி ஒன்றுக்கு இரண்டாக சுடிதாரை வாங்கிவிடுவாள் ராதா.

அப்பாவுக்கு ஐஸ் போடுவதில் இன்றைய கோட்டா முடிந்தது அவளுக்கு!

‘‘என்னடி சீதா... இவங்களுக்காக நான் நடிக்க முடியுமா... கல்யாணங்கறது வாழ்க்கையிலே அவ்வளவு முக்கியமா என்ன... எப்போ வருவானோ வரட்டும்... அதுக்காக நான் சாப்பிடாம பட்டினி கிடந்து உயிரையா விடமுடியும்...’’ என்று இன்னொரு தங்கையிடம் அலுத்துக் கொண்டாள் விஜயா.

அடுத்த நாள் பொழுதும் அழகாகவே விடிந்தது. பரபரப்பாக புறப்பட்ட விஜயா மறக்காமல் கையில் குடையை எடுத்துக் கொண்டாள்.

‘‘நீ அந்தக் குடையை விரிச்சு நான் பார்த்ததேயில்லை... அது எதுக்கு துணைக்கா..?’’ என்று கேலி செய்தான் தம்பி ஆனந்த். அது டீச்சர் என்றால் குடையிருக்க வேண்டும் என்ற அடையாளத்துக்கா, இல்லை, சூடுபறக்கும் வெயிலைச் சமாளிக்கவா என்றால் இல்லை! ‘திடீரென்று மழை வந்துவிட்டால்..?’ என்ற முன் ஜாக்கிரதை மட்டும்தான் குடைக்கான காரணம். விஜயா அதை ஒருபோதும் விரித்ததில்லை.

வீட்டைவிட்டு கீழே இறங்கி சந்துக்குள் நடந்து தெருவில் திரும்பும்போது தற்செயலாக கவனித்தாள், வீட்டுக்கு அருகே உள்ள கிளினிக் வாசலில் உள்ள வேப்ப மரத்தடியில் மோட்டார் சைக்கிளை சரி செய்வது போல ஒருவன் நின்று கொண்டிருப்பதை! அவள் பார்க்கிறாள் என்று தெரிந்த நொடியில் கூடுதலாக வியர்த்த அந்த இளைஞன், சட்டென்று மோட்டார் சைக்கிளுக்குள் பதுங்கிக் கொண்டான்.

பள்ளிக்கூட வாசலில் நுழையும்போது ‘டீச்சர்’ என்ற குரல்வர, சட்டென்று திரும்பினாள் விஜயா. சிறுவன் ஒருவன், ‘எனக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே’ என்றபடி சாக்லெட்டை நீட்ட, கைகள் அதை வாங்கினாலும் கண்கள் அவனைத் தாண்டி நீண்டது. தூரத்தில் அந்த மோட்டார் சைக்கிள்காரன் வண்டியைத் தள்ளியபடி வந்து கொண்டிருந்தான்.

‘யாரையாவது லவ் பண்ணுனு சொல்லிடலாம்... ஆனா, யாராவது உன்னை பண்ணணுமேன்னு நினைக்கும்போதுதான் அதுக்காக வாய்ப்பு இல்லைனு புரியுது...’ என்று மங்கை வீட்டுக்காரர் சொன்னது நினைவில் வந்துபோக, சின்னதாக இதழில் சிரிப்பு ஓடியது. உடலில் சிலிர்ப்பு ஓடியது. விறுவிறுவென்று நடந்து ஆசிரியர்கள் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

அந்த மோட்டார் சைக்கிள் பள்ளிக்கூடத்தின் எதிரில் இருந்த டீக்கடை வாசலில் நின்று கொண்டிருந்தது. விஜயாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது!
(தொடரும்)
மெட்டி ஒலி  திருமுருகன்