கடைகளில் கொள்ளை விலை வைத்து விற்கிற ஃப்ரென்ச் ஃப்ரைஸை வீட்டில் செய்ய முடியாதா? வீட்டில் செய்தால் அதே சுவையில் வருமா? சி.ரேணு, சென்னை-78.
பதில் சொல்கிறார் சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத்.ஃப்ரென்ச் ஃப்ரைஸ் செய்வதொன்றும் பிரமாதமான விஷயமே இல்லை. இப்போது கடைகளில் குளிரூட்டப்பட்ட ஃப்ரென்ச் ஃப்ரைஸ் துண்டுகள் ரெடிமேடாக கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பொரித்தால் ரெடி. ஆனால், அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். நல்ல உருளைக்கிழங்காக வாங்கி, தோல் நீக்கி, விரல் நீளத் தடிமனான துண்டுகளாக வெட்டவும். அதிலுள்ள ஸ்டார்ச் நீங்கும்படி, தண்ணீரில் நன்கு அலசவும். ஸ்டார்ச் இருந்தால் எண்ணெய் அதிகம் குடிக்கும். கிழங்கின் நிறம் மாறாமலிருக்க எலுமிச்சைச்சாறு சேர்த்த தண்ணீரில் அலசலாம். ஒரு துணியில் சில நிமிடங்கள் பரத்தி வைக்கவும். ஈரம் வற்றியதும் சூடான எண்ணெயில் டீப் ஃப்ரை செய்தெடுத்து, உப்பு, மிளகுத்தூள் தூவினால் ஃப்ரென்ச் ஃப்ரைஸ் தயார்.
அப்பளம், சிப்ஸ் மாதிரி, அதை ரொம்பவும் கரகரப்பாகப் பொரிக்கக் கூடாது. லேசாக மெத்தென இருப்பதுதான் ஃப்ரென்ச் ஃப்ரைஸின் சிறப்பே! ஈரத்துடன் பொரித்தால் கிழங்கிலுள்ள தண்ணீரின் சலசலப்பு அடங்கி, பொரிய சற்று நேரமெடுக்கும் என்பதால் ஈரம் போக உலர்த்திவிட்டுப் பொரிக்கவும்.
இதையே பேக்கிங் முறையிலும் செய்யலாம். ஓடிஜி (அவன் & டோஸ்டர் & கிரில்லர்)யை முதலில் ப்ரீ ஹீட் செய்யவும். பிறகு நறுக்கி வைத்துள்ள கிழங்கின் மேல் லேசாக எண்ணெய் தடவி, அலுமினியம் ஃபாயில் வைத்த பேக்கிங் ட்ரேயில் வைத்து, 20 நிமிடங்களுக்கு பேக் செய்யலாம்.
இந்த முறையில் செய்யும்போது, கிழங்கு வெந்திருக்குமே தவிர, எண்ணெயில் பொரித்த ருசி இருக்காது.
பெருநகரப் போக்குவரத்து நெருக்கடியில் கிளட்ச் அழுத்தி, கியர் மாற்றி மாற்றி கார் ஓட்டுவது எரிச்சலூட்டுகிறது. இப்போது ஆட்டோமேட்டிக் கார்கள் அதிக அளவில் வருவதாகப் படித்தேன். இவை என்ன விலை? ஆர்.ராஜு, சென்னை-40.
பதில் சொல்கின்றனர் ஆட்டோமொபைல் அசோசியேஷன் ஆஃப் சதர்ன் இந்தியா அமைப்பினர்ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்ட கார்கள் இப்போது சென்னை உள்பட பெருநகரங்களில் பரவலாக ஓடிக்கொண்டிருக்கின்றன. கிளட்ச், கியர் இல்லாமலே ஆக்ஸிலரேட்டரை மட்டுமே பயன்படுத்தி, எளிதாக இயக்க முடியும் என்பதே இதன் சிறப்பு.
இவை சாதாரண கார்களைவிட குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் விலை அதிகமானவை. எரிபொருள் சிக்கனமும் சற்று குறைவுதான். மறுவிற்பனை மதிப்பும் அதிகமில்லை. ஆனால், பொம்மை கார் ஓட்டுவது போல அவ்வளவு ஈஸி!
இந்திய மார்க்கெட்டில் ரூ. 10 லட்சத்துக்கும் குறைவான விலையிலேயே பல மாடல்கள் கிடைக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் நாக்கில் கருப்புப்புள்ளி தென்பட்டது. ‘நாக்கு மச்சம் அதிர்ஷ்டம்’ என்று பலரும் சொன்னதால் அப்படியே விட்டுவிட்டேன். இப்போது நாக்கு முழுக்கவே கறுப்பாகி விட்டது. உதடுகளும் கறுக்கின்றன. என்ன காரணம்? என்ன செய்வது?சோ.காமராஜ், தூத்துக்குடி.
பதில் சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் லதாபொதுவாக நாக்கு கறுக்கிற பிரச்னைக்கு க்ளிசரின் மற்றும் எலுமிச்சைச் சாற்றை தொடர்ச்சி யாகத் தடவி வந்தாலே போதும். தேனும் தடவலாம். ஆனால், உங்களுக்கு இந்தப் பிரச்னை பல ஆண்டுகளாக இருப்பதால் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருத்துவ சிகிச்சை எடுப்பதே நிரந்தரத் தீர்வு தரும்.