ஆசியா கண்டத்தின் தென்கிழக்கில் இருக்கிறது மியான்மர். பழைய பெயர் பர்மா. பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சிதான் என்றாலும் விரைவில் அங்கு ஜனநாயகம் மலரும் என்ற நம்பிக்கை தருகிறார், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூ கியி. அந்த நம்பிக்கைதான், 150 ஆண்டுகளுக்கு முன் அங்கு விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு, தாயகம் திரும்பிவிட்ட செட்டிநாட்டு நகரத்தார்கள் அங்கே விட்டுவந்த சொத்துகளை மீட்கும் வேலைகளைத் தொடங்க வைத்திருக்கிறது. திரை கடலோடி திரவியம் தேட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து அந்தக் காலத்தில் பர்மாவுக்கு பாய்மரக் கப்பலேறியவர்கள் இவர்கள்.
‘‘எங்க தாத்தா இங்கிருந்து பர்மாவுல தவாய்ங்கிற இடத்துக்குப் போயிருக்கார். ஆரம்பத்துல ‘லேவாதேவி’ங்கிற வட்டிக்கு கடன் தர்ற தொழில். கொஞ்சம் வளர்ந்ததும், விவசாயம், மத்த வேலைகள்லயும் ஈடுபட்டிருக்கு எங்க குடும்பம். அப்பா பொறந்தது அங்கதான். அப்பா காலத்துல மேலும் வளர்ச்சி. அப்போ இருந்த பிரிட்டிஷ்&பர்மா அரசாங்கத்துகிட்ட ஈயம் வெட்டி எடுக்கிற சுரங்க கான்ட்ராக்ட் எடுத்து நடத்தியிருக்கார் அப்பா. நிலபுலங்களை ஏகபோகமா வாங்கற அளவுக்கு வசதிகள் வந்திருக்கு. தோராயமா ஆயிரம் ஏக்கர் நிலம் எங்களுக்கு மட்டுமே இருந்திருக்கு.
இந்த நிலையிலதான் இரண்டாம் உலகப்போர் வர, ஜப்பானோட பிடிக்குள்ள சிக்கிக்கிடுச்சு பர்மா. உடனடியா, ‘இங்க இருக்கிற மத்த நாட்டுக்காரங்க எல்லாம் வெளியேறலாம்’னு வாய்ப்பு தந்திருக்கு ஜப்பான். வேறென்ன பண்றது? வீடுகள், விளைநிலங்கள், வியாபார நிறுவனங்கள் எல்லாமே ஒருநாள் ராத்திரியில எங்களோடது இல்லைனு ஆயிடுச்சு.
பர்மாவுல ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்திட்டிருந்தாங்க நகரத்தார். பெரும்பாலானவங்க அங்கிருந்து கிளம்பி இந்தியாவுக்குள்ள நுழைந்ததும், சிம்லாவுல செயல்பட்ட பிரிட்டிஷ்&பர்மா முகாம்லயும் எல்லோரையும் பதிவு பண்ணி, சொத்து விபரங்களுக்கும் ஒப்புகைச்சீட்டு தந்திருக்காங்க. போர் முடிஞ்சாலும் அங்க புரட்சி மேல புரட்சி. நிலையான ஆட்சி அமையலை. அதனால மேற்கொண்டு யாரும் அங்க போக விரும்பாம இங்கயே பொழைப்ப பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க’’ என்கிற நாராயணன், இப்போது அரியலூர் டால்மியா சிமென்ட் நிறுவனத்தில் ஆலோசகர். தாத்தா, அப்பா பெயரில் பர்மாவில் இருந்த நிலங்களுக்கான பத்திரங்களை பத்திரமாக வைத்திருக்கிறார் அவர்.
நகரத்தார்கள் நிலபுலன்களோடு வசதியாக வாழ்ந்த காலம் போல் இல்லை இன்றைய மியான்மர். 1950வாக்கில் அங்கு விவசாய நிலங்களை முழுமையாக தேசியமயமாக்கி விட்டார்கள். அதோடு, இவ்வளவு காலம் கழித்து ‘அப்போதைய எங்கள் சொத்துகள்’ என்று சொல்லி அவற்றை மீட்பதென்பது சாத்தியமா? அதுவும் ராணுவ ஆட்சியாளர்களிடமிருந்து?
‘‘இப்போதைக்கு ராணுவ ஆட்சின்னாலும் ஜனநாயகம் திரும்பறதுக்கான அறிகுறிகள் அங்க தெரியுது. சமீபத்துல தேர்தல் நடத்துனாங்க. ஆங் சாங் சூ கியியையும் சமீபத்துல ராணுவம் வீட்டுச்சிறையில இருந்து விடுவிச்சுடுச்சு. இதெல்லாம் நல்ல அறிகுறிதானே?
பர்மாவோட வளர்ச்சியில நகரத்தார்களோட பங்கு குறிப்பிடத்தக்கது. வியாபாரம் மற்றும் நகரத்தார் தந்த வேலைவாய்ப்புகள் மூலமா பர்மாவோட பொருளாதாரம் உயர்ந்தது. வங்கி நடைமுறைகள் இல்லாத காலத்துலயே செட்டியார்கள் அங்க விவசாயக் கடன் கொடுத்து விவசாய வளர்ச்சிக்கு உதவியிருக்காங்க. இன்னிக்கும் எங்க மக்கள்ல கொஞ்சம் பேர் அங்க நல்ல நிலையில இருக்காங்க. பழைய நிலையில அங்க தொழில் பண்ணி வாழலாம்னா, திரும்பிவந்த பலர் இப்பக்கூட கிளம்பத் தயார்.
அதுக்கு முன்னால ஏற்கனவே அங்க இருந்த சொத்துகள் பத்தித் தெரிய வேண்டாமா? கையில ஆவணங்களை வச்சிக்கிட்டு ரொம்ப காலமாவே அதுக்கான முயற்சியை பண்ணிட்டுத்தான் இருந்தோம். அதுக்காகத்தான் ‘பர்மா நகரத்தார் முதலீட்டாளர் குழு’வை அமைச்சிருக்கோம். முதல்கட்டமா தேவகோட்டை, காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்கள் தங்களுக்கு பர்மாவுல இருந்த சொத்துகள் பத்தின விவரத்தோட வந்திருக்காங்க. என்ன வழிகள்ல எப்படி முயற்சிக்கலாம்னு பேசியிருக்கோம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த கயிலை சுப்ரமணியன். ‘பர்மா நகரத்தார் முதலீட்டாளர் குழு’வின் செயலாளர் இவர்.
‘‘பர்மாவில் நகரத்தார் வாழ்ந்த வாழ்க்கையும் சாதாரணமானதில்ல. ‘பர்மா நகரத்தார் சங்கம்’ங்கிற பேர்ல கோயில்கள், சத்திரங்கள்னு நிறைய உருவாக்கித் தந்திருக்காங்க செட்டியார்கள். நிறைய முருகன் கோயில்கள் இன்னிக்கும் அங்க இருக்கு. செட்டிநாட்டுக் கட்டிடங்கள்ல பர்மியக் கலை, கலாசாரமும் அடங்கியிருக்கு. என்னோட மாமனாரே ஒரு குறிப்பிட்ட காலம் அங்க இருந்திருக்கார்’’ என்கிறார் கவிஞர் கண்ணதாசனின் அண்ணனும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஜெயந்தி கண்ணப்பன்.
செட்டிநாடான சிவகங்கையைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனும் இந்த முயற்சிக்கு ஆதரவு தந்திருக்கிறார்.
‘‘அங்க வசதி, வாய்ப்போட வாழ்ந்துட்டு இங்க தாய்நாடு திரும்பி கஷ்டப்படற நகரத்தார்களும் இருக்காங்க. இவங்க கையில டாகுமென்ட் இருக்கிறதால முயற்சி பண்றதுல தப்பில்லையே. எம்.பி.ங்கிற முறையில இங்க உள்ள மியான்மர் தூதரகம் மூலமா அங்க உள்ள அதிகாரிகள்கிட்ட பேசினேன். அங்க இப்ப உள்ள ஆட்சியாளர்களுக்கு இந்த விவகாரமே புரிய மாட்டேங்குது. அதனால நாடாளுமன்றத்துலயே இந்த விவகாரத்தை எழுப்பியிருக்கேன். இந்திய அரசு மூலமா என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதுக்கெல்லாம் முயற்சி பண்ணிட்டுத்தான் இருக்கேன். முதலீட்டாளர் குழுவும் நேரடியா மியான்மர் போய் அங்க இப்ப இருக்கற தமிழர்களையும், கூடவே ஆட்சியாளர்களையும் சந்திக்கிற திட்டமும் இருக்கு’’ என்கிறார் சுதர்சன நாச்சியப்பன்.
அய்யனார் ராஜன்
படங்கள்: லோகநாதன், செந்தில்குமார்