‘மிஸ் சின்னத்திரை’ பட்டமே கொடுக்கலாம் ஷமீதாவுக்கு. சக நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு சின்னத்திரையின் பேரழகி. சன் டி.வியில் ‘வசந்தம்’ தொடரின் கவன ஈர்ப்பு நாயகி. சினிமாவில் பெரிய ரவுண்டு வந்திருக்க வேண்டியவர், இப்போது சின்னத்திரையில்!
‘‘அக்கா ராஜேஸ்வரி, ‘பொற்காலம்’ படத்துல நடிச்சாங்க. அப்ப நான் பிளஸ் டூ படிச்சிட்டிருந்தேன். அக்காவோட மைசூருக்கு ஷூட்டிங் போனேன். அப்ப என்னைப் பார்த்துட்டு, பிரசாந்த் ஜோடியா ஒரு படத்துக்குக் கேட்டாங்க. நடிப்பு ஜாலியா இருந்தது. ஆனா, அந்தப் படம் பாதிலயே நின்னு போச்சு. அப்புறம் வந்ததுதான் ‘பாண்டவர் பூமி’. அதுல எனக்கு ரொம்ப நல்ல பேர்... எஸ்.ஐ.ஈ.டி. காலேஜ்ல சைக்காலஜி படிப்பை பாதியோட நிறுத்திட்டு, முழு மூச்சா சினிமால இறங்கினேன். தெலுங்கு, தமிழ்னு நாலஞ்சு படங்கள் பண்ணினேன். என்னவோ தெரியலை... எந்தப் படமும் ரிலீசாகலை.
ஒரு கட்டத்துல எனக்கு சினிமா ஆசையே விட்டுப் போச்சு. அப்பதான் சீரியல் வாய்ப்பு வந்தது. சினிமாவை விட, சீரியல் பெட்டர் சாய்ஸ்னு பலரும் அட்வைஸ் பண்ணினாங்க. சன் டி.வில ‘சிவசக்தி’ சீரியல் மூலமா டி.வி. பக்கம் வந்தேன். சொன்ன மாதிரியே சீரியல் உலகம் வித்தியாசமா, சந்தோஷமா இருந்தது. நிறைய ஃப்ரெண்ட்ஸ்... ஒரு மாசம்தான் நடிகைங்கிற நினைப்பெல்லாம்... அப்புறம் எல்லாரும் ஒரே குடும்பம் மாதிரி சேர்ந்து சாப்பிடறது, சிரிக்கிறதுனு ஐக்கியமாயிடுவோம்... இதோ இப்ப ரெண்டாவது சீரியல் ‘வசந்தம்’. சரியான நேரத்துல, சரியான முடிவெடுத்திருக்கேங்கிறதுல திருப்தி...’’
‘வசந்தம்’ தொடரில் இவரது கேரக்டர் பெயர் நந்தினி. ஷமீதாவாக இவரைத் தெரியாத பலருக்கும் இப்போது இவர் நந்தினிதான்!
‘‘சீரியலோட மிகப்பெரிய பிளஸ் அதுதாங்க... மக்கள் நம்மை அந்த கேரக்டராவே பார்த்து, அவங்கள்ல ஒருத்தரா ஏத்துக்குவாங்க. மதிய நேரத்துல வர்ற சீரியலாச்சே... எத்தனை பேருக்கு ரீச் ஆகும், இதுல அவசியம் நடிக்கணுமானு முதல்ல நான் தயங்கினேன். ஆனா, சன் டி.வில எந்த நேரத்துல சீரியல் பண்ணினாலும் பிரபலமாயிடுவோம்ங்கிறது அப்புறம்தான் புரிஞ்சுது. இதைப் பார்த்துட்டு, வேற வேற சீரியலுக்குக் கேட்கறாங்க. ஒரு நேரத்துல ஒரு சீரியல் மட்டுமே பண்றதுங்கிறது என் கொள்கை...’’ & ஸ்வீட்டாக சொல்பவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள்.
‘‘நிறைய படங்கள் வருது. ஆனா, நான் இப்ப ரேணாங்கிற குட்டி தேவதைக்கு அம்மா. அவளுக்கு ஒண்ணே முக்கால் வயசாகுது. சீரியல்னா காலைல போயிட்டு, சாயந்திரம் வீட்டுக்கு வந்துடலாம். சினிமான்னா அவுட்டோர் இருக்கும். என் ரேணாவை விட்டுட்டுப் போக முடியாது...’’ & பாசம் பொங்கப் பேசும் ஷமீதா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனும், சின்னத்திரை நடிகருமான ஸ்ரீயை காதலித்துக் கரம் பிடித்தவர்.
எப்படிப் போகுது கல்யாண வாழ்க்கை?
‘‘ஹோ... காரசாரமா போயிட்டிருக்கு. எனக்கு ஸ்வீட் பிடிக்காது. காரம்தான் பிடிக்கும். அதான் அப்படிச் சொன்னேன். மத்தபடி லைஃப் இஸ் வெரி பியூட்டிஃபுல்!’’
டாக்டர் ஆக்டர்!‘தென்றல்’ தொடரில் அப்பாவாக நடிக்கிற கிரிதரைச் சுற்றி எப்போதும் கூட்டம். சார் ஹோமியோபதி டாக்டராம்... அதான்!
‘‘அடிப்படைல நான் ஒரு இசைக்கலைஞன். ஒரு டி.வி. ஷோவுல கலந்துக்க, நார்த்லேருந்து சென்னை வந்தப்ப, இசையமைப்பாளர் ரைஹானா கண்ல பட்டு, அவங்க ட்ரூப்ல கொஞ்ச நாள் இருந்தேன். அதுலேருந்து ஆக்டிங்... ‘சிவமயம்’, ‘மேகலா’, ‘செல்வி’, ‘திருமதி செல்வம்’னு வரிசையா வாய்ப்புகள்... ‘தென்றல்’ல நான் பண்ற அப்பா கேரக்டர், இதுவரை இல்லாத பேரையும் புகழையும் சம்பாதிச்சுக் கொடுத்திருக்கு. நடிக்க வந்துட்டதால மியூசிக்கையோ, மருத்துவத்தையோ விட்டுக் கொடுக்கலை’’ என்கிற கிரிதர், ‘ராம்’ படத்தில் தலைகாட்டியதை அடுத்து, சாருஹாசனுடன் ஒரு டெலிஃபிலிமில் நடிக்கிறாராம்.
ஆர்.வைதேகி