88 வயது யூத் ஹீரோ!



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
                      யாருடைய மரணத்துக்கும் இறுதி அஞ்சலி செலுத்தப் போகிற பழக்கம் இல்லை தேவ் ஆனந்துக்கு. ‘‘மூக்கில் பஞ்சு அடைத்த உயிரற்ற முகமாக யாரையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. வாழும்போது எப்படி இருந்தார்களோ, அப்படியே அவர்களை மரணத்துக்குப் பிறகும் நினைவுகூர வேண்டும்’’ என்பார். 80 வயதைத் தாண்டிய பிறகும் மரத்தைச் சுற்றி டூயட் பாடும் அதிர்ஷ்டம் வாய்க்கப்பெற்ற ஹீரோக்கள் உலக சினிமாவில் குறைவு. அப்படியான ஒரு ரொமான்டிக் ஹீரோ தேவ் ஆனந்த். இரண்டு தலைமுறை இந்திய இளைஞர்களுக்கு அவர் ‘ஸ்டைல் ஐகான்’ ஆக இருந்தார்.

88 வயதில் அவர் நடித்த ‘சார்ஜ்ஷீட்’ படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ‘‘உயிரோடு இருந்திருந்தால் அடுத்த ஆண்டும் ஒரு படம் கொடுத்திருப்பார். கடுமையாக உழைக்கத் தயங்காதவர்களுக்கு ரிட்டயர்மென்ட் என்பது மரணமாகத்தான் இருக்கும். தேவ் ஆனந்தும் மரணம் வரை உழைத்தார். மனசளவில் இளைஞனாகவே இருந்த அவர், மிக இளம் வயதில் மறைந்திருக்கிறார்’’ என்கிறார் கமல்ஹாசன்.

1946ம் ஆண்டு நடிக்க ஆரம்பித்தவர் தேவ். அசோக் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த் மூவரும் இந்தி சினிமாவின் பிதாமகர்களாக கருதப்படுகிறவர்கள். சொந்த தயாரிப்பு நிறுவனம் துவக்கி, தேவை ஏற்பட்டபோது டைரக்டராகவும் ஆகி, அவர் எடுத்த பல படங்கள், காலத்தால் அழியாத காதல் சித்திரங்கள். ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள். புதிய நடிகர்களை அறிமுகம் செய்யவும் அவர் தயக்கம் காட்டியதில்லை.

‘காதல் இளவரசனாக’ அறியப்பட்டாலும் எளிமை அவரது தாரக மந்திரமாக இருந்தது. தனக்கு சமமானவர்களிடமும் மேலானவர்களிடமும் ஒருவர் எப்படிப் பழகுகிறார் என்பதை வைத்து அவரை உலகம் தீர்மானிப்பதில்லை. தனக்கும் கீழே இருப்பவர்களை அவர் எப்படி அணுகுகிறார் என்பதில் இருக்கிறது அவருக்கான இடம்! ஒரு படம் ஹிட் கொடுத்தாலே வானத்தில் நடக்கிற இன்றைய நடிகர்கள் பலரும் தேவ் ஆனந்திடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

வீட்டில் இருக்கும் நேரங்களில் போன் வந்தால் அவரே எடுப்பார். மேக்கப் மேன் மற்றும் உதவி யாளர்களிடம் ஒரு வார்த்தை கடிந்து பேசியது கிடையாது. தவறு செய்தால், ‘‘ அடுத்த முறை இப்படி நடக்காம பார்த்துக்கோ’’ என்பது மட்டுமே அதற்கான தண்டனையாக இருக்கும். திரையில் எப்படி புன்னகையுடன் வலம் வந்தாரோ, அதே புன்னகையுடன்தான் இயல்பிலும் இருந்தார். வயதும் முதுமையும் அவரிடம் தோற்றோட இதுவே காரணமாக இருந்திருக்கிறது.
அகஸ்டஸ்