‘மதராசப்பட்டினம்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘அவன் இவன்’ என்று படத்துக்குப் படம் புதிய முகங்களைக் காட்டிவரும் ஆர்யாவின் அட்டகாச லைன் அப்பில் அடுத்து வரவிருப்பது அவரது ஆக்ஷன் முகம் காட்டும் திருப்பதி பிரதர்ஸின் ‘வேட்டை’. லிங்குசாமியின் இயக்கத்தில் அமலா பாலுடன் ஜோடி சேர்ந்ததில் காதல் களை கூடியிருக்க, அடுத்து ராஜமுந்திரியில் அமலாவுடன் ரவுசு கட்டக் கிளம்பிக் கொண்டிருந்தவரைப் பிடித்தோம்...
‘‘ஆக்ஷன் படங்கள் பண்றது அவ்வளவு ஈஸியில்லை. வெறும் சண்டைகள் மட்டுமே அதை நிர்ணயிக்காது. ஆக்ஷனுக்கு சரியான மீட்டர் இருக்கணும். அது டைரக்டர் லிங்குசாமி படங்கள்ல மிகச்சரியா இருக்கிறதை ‘ரன்’, ‘சண்டக்கோழி’, ‘பையா’ படங்கள்ல பார்த்திருக்கோம். அதுக்காகவே அவர் டைரக்ஷன்ல நடிக்கக் காத்திருந்து இப்பதான் எனக்குக் கை கூடியிருக்கு. ஆக்ஷன் மட்டுமில்லாம ட்ரீட்மென்ட்ல காமெடியைக் கலந்து கொடுக்கிறது தனித் திறமை. அதை இந்தப் படத்துல சரியான மிக்ஸ்ல கொடுத்த அவர்மேல ஏற்பட்ட நம்பிக்கையும், நட்பும் இன்னும் அவர் கூட பத்து படங்கள் பண்ணணும்ங்கிற ஆவலை ஏற்படுத்தியிருக்கு..!’’
‘‘அமலா பாலோட மனசைத் தவிர வேற என்ன வேட்டையாடறீங்க படத்துல..?’’
‘‘அதைச் சொன்னா முழுக் கதையும் சொல்ல வேண்டிவரும். இது ஒரு அண்ணன் தம்பியோட கதை. என்னோட அண்ணனா மாதவன் நடிக்கிறார். அவர் பொறுப்பான போலீஸ் ஆபீஸரா இருக்க, அவரோட உருப்படாத தம்பியா நான். ரசிக்க ரசிக்க ஒரு ஃபேமிலி டிராமாவா போற கதைல, ஒரு கட்டத்துக்குப் பிறகு என்ன ஆகுதுங்கிறது இந்தப் படத்துக்கே உரிய தனித்தன்மை. அது எனக்கும், ரசிகர்களுக்கும் புது அனுபவத்தைக் கொடுக்கிற விஷயம். படங்கள்ள நான் தனியா காமெடி பண்ணியிருக்கேன், ஓரளவுக்கு தனியா ஆக்ஷனும் பண்ணியிருக்கேன். ஆனா காமெடி வித் ஆக்ஷன் பண்றது இந்தப் படத்துலதான் சாத்தியமாயிருக்கு...’’
‘‘அவன் இவன்ல விஷால், இந்தப் படத்துல மேடி... ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட்ல தொடர்ந்து நடிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு..?’’‘‘சப்ஜெக்ட் கேட்டுது ன்னா நடிக்கிறதுல என்ன தப்பு..? ‘அவன் இவன்’ல இன்னொரு ஹீரோ தேவைப்பட்டப்ப நான்தான் விஷாலைக் கூட்டிப் போனேன்ங்கிறதை அவனே பல தடவை சொல்லியிருக்கான். அதனாலயே படம் பாத்தவங்க, ‘விஷால் உங்களைவிட நல்லா நடிச்சிருக்கார்’னு சொன்னப்ப அவனை விட நான் சந்தோஷப்பட்டேன். அந்தப் போட்டி இருக்கும்போது நடிப்பில நிறைய கத்துக்க முடியும். அது படத்துக்கும் ஆரோக்கியமானது.
இந்தப்படத்துல சீனியரான மேடி என்னோட நடிக்கத் தயக்கம் காட்டலை. அவருக்கு சினிமாவில 16 வருஷ அனுபவம் இருக்கு. 50 படங்கள் முந்திப் போய்க்கிட்டிருக்கார். இந்தி வரைக்கும் போனவர். கமல் மாதிரி ஜாம்பவான்கள் கூட நடிச்ச அனுபவம் உள்ள அவர்கிட்டேர்ந்து நிறைய கத்துக்கிட்டேன். நான் மட்டுமில்லை... இந்தப் படத்துல நடிக்கிற சமீரா ரெட்டி, அமலாபால்னு எல்லாருமே நிறைய கத்துக்கிட்டோம்னு சொல்லணும்.
வழக்கமா பெரிய நடிகர்கள் தங்களோட சீன் சரியா இருக்காங்கிறதுல கவனமா இருப்பாங்க. அவங்க கூட நடிக்கும்போது கவனமா இல்லைன்னா நாம மொக்கை ஆயிடுவோம்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா மேடி விஷயம் வேற. சீன்கள்ல எங்களோட பங்கு பவர் ஃபுல்லா வரணும்னு அவர் டைரக்டர் கூட சண்டையே போட்டிருக்கார். அவர்கூட நடிக்கும்போது ஒரு பாஸிட்டிவ் வைப்ரேஷனை அனுபவிச்சிருக்கேன்...’’
‘‘சமீரா, அமலான்னு ஷூட்டிங் களை கட்டியிருந்தது போல இருக்கே..?’’‘‘ஆமாமா... ‘வாரணம் ஆயிரம்’ பார்த்து சமீரா மேல க்ரேஸ் இருந்தது. எல்லாருக்குமே அப்படித்தான்னு டைரக்டரைப் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ பாடலைப் பாடித்தான் சமீராவை ஷாட்டுக்கே கூப்பிடுவார். சீனியர், ஜூனியர்னு பாகுபாடு, ஈகோ இல்லாத அற்புதமான டீம் ‘வேட்டை’ல அமைஞ்சது.
அமலாவுக்கு நல்லா தமிழ் தெரியும்ங்கிறது நல்ல விஷயமா இருந்தது. அது வழக்கமான வெளிமாநில நடிகைகள்கிட்டேர்ந்து அமலாவைப் பிரிச்சுக் காட்டி இணக்கத்தை ஏற்படுத்துச்சு. நல்ல போட்டோஜெனிக்கான நடிகை. அவங்களோட ஸ்கிரீன் ப்ரசென்ஸ் அற்புதமா இருக்கு. சின்ன வயசா இருக்கிறதால நல்ல எனர்ஜெடிக்கா இருக்காங்க. தயக்கம் இல்லாம எதையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிற இன்னசன்ஸ் இருக்கிறதால, எனக்கும் அமலாவோட நல்ல கெமிஸ்ட்ரி ஏற்பட்டுப் போச்சு..!’’
அ(மலா) ஆ(ர்யா)ன்னு அகர வரிசையில பேர்ப்பொருத்தமும் அமைஞ்ச ஆஹா கெமிஸ்ட்ரியாச்சே பாஸ், அது..!
வேணுஜி