தமிழர் வாழ்வு... ஓடவிட்டுக் கொல்லும் என்கவுன்ட்டர்



Kungumam 
magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil 
magazine, Tamil weekly magazine, Weekly magazine
 
                   காலைப் பொழுதுக்கு எப்போதும் சிரிக்கும் புத்தரைப் போல ஒரு முகம். ஆசை கொண்டவர்களைப் பார்த்து புத்தர் சிரிப்பதைப் போல, நகரத்தில் ‘ஃபாஸ்ட் லைஃப்’ மனிதர்களைப் பார்த்துக் காலைப் பொழுது சிரிக்கிறது.

கோழி கூவும் சத்தம், சிட்டுக்குருவிகளின் சத்தம், வாசல் தெளிக்கும் சத்தம், அம்மா பால் ஆற்றும் சத்தம் & இவற்றையெல்லாம் கேட்டபடி மெல்ல மெல்லக் கண்விழித்த என் குழந்தைப் பருவம் நினைவுக்கு வருகிறது. இன்றைய குழந்தைகளுக்கு அப்படி ஒரு காலைப்பொழுதே இல்லை. குக்கர் சத்தத்தில்தான் திடுக்கிட்டு விழிக்கிறார்கள். பல் துலக்கி, குளித்து, சாப்பிட்டுத் தூக்கக் கலக்கத்தோடு பள்ளிக்கூட வாகனங்களில் போய்க் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளைத் துரத்திவிட்டு பெரியவர்கள் துரித வாழ்க்கைக்குள் தங்களைத் திணித்துக் கொள்கிறார்கள்.
அளவோடு உண்டு, அளவோடு உழைத்து, அளவோடு உறங்கி... வாழ்க்கையை இயற்கையாக அனுபவித்தவர்கள் நம் மூதாதையர். இன்று நாம் துரித வாழ்க்கை, அதிவேக வாழ்க்கை, இரவு வாழ்க்கை என்று வேறுவேறு வாழ்க்கையை இயற்கைக்கு விரோதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

துரித வாழ்க்கை என்றால் வேகமாகக் குளிப்பது, வேகமாகச் சமைப்பது, வேகமாகச் சாப்பிடுவது, வேகவேகமாக ஓடிப்போய் பேருந்தில் ஏறுவது என்கிற அர்த்தத்தில்தான் உணர்ந்து வைத்திருக்கிறோம்.

உண்மையில் அது அப்படியல்ல! நாம் செய்ய வேண்டிய வேலைகளை எந்திரங்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டதுதான் அது. மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவை நமக்காக உழைக்கின்றன. அம்மியில் அரைத்துக் குழம்பு வைத்துச் சாப்பிடுவதற்கு நேரம் இல்லை. சாம்பார் பொடி, ரசப்பொடி, வத்தல் குழம்புத் தொக்கு, புளிசாதத் தொக்கு, பதப்படுத்தப்பட்ட மாமிசம், அப்படியே சுட்டுச் சாப்பிடும்படியான சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ், நறுக்கி வைத்து விற்கப்படும் காய்கறிகள் & துரித வாழ்க்கை நமக்கு விதவிதமான துரித உணவையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. துரித உணவுகளைக் கெடாமல் பதப்படுத்துவதற்காக சேர்க்கப்படும் ரசாயனப் பொருட்கள் நமக்கு விதவிதமான நோய்களை அறிமுகப்
படுத்தியிருக்கின்றன. துரித உணவு என்பதே இயற்கைக்கு எதிரான உணவு முறைதான்.

பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப அதிக உணவு வேண்டும் என்பதற்காக ஏற்கனவே நமது காய்கறிகளும் கனிகளும் தானியங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உரங்களால் மெல்லக் கொல்லும் விஷமாக மாற்றப்பட்டிருக்கின்றன. மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளும் கனிகளும் நமது மரபணுக்களையும் மாற்றியமைக்கும். எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாகத் தெளிக்கப்பட்ட கேரளாவில் எப்படி ஊனமான&விநோதமான குழந்தைகள் பிறந்தனவோ, அதன் தொடர்ச்சிக்கு வழிவகுப்பதாக ஆகிவிடக்கூடாது நமது துரித வாழ்க்கையும் துரித உணவுகளும்.

சமீபத்தில் அகில உலக கண்நோய் மருத்துவர்களின் கருத்தரங்கத்தில் ஒரு விஷயம் கவனப்படுத்தப்பட்டிருக்கிறது. துரித வாழ்க்கையின் அங்கமான இன்டர்நெட்டினாலும், துரித உணவுகளாலும் ஏராளமான பேருக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது.

இன்டர்நெட் முன்னால் அமரும் அசையாத உடல்கள் ஏகப்பட்ட நோய்களை வாங்கி வைத்துக் கொள்கின்றன. கணையத்தில் இன்சுலின் சுரப்பதில்லை. உணவு ஜீரணம் ஆவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாக விளங்கும் பெங்களூருவில் தகவல்தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களில் பாதிப்பேர் மன அழுத்தத்தாலும், பாலியல் ரீதியான உடல் அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பாலின உயிராற்றல் ஆண்களுக்குக் குறைகிறது. குழந்தைகளைத் தாங்கக்கூடிய வலிமை பெண்களின் கருப்பைகளுக்கும் இல்லை. இவையெல்லாம் துரித வாழ்க்கையின் பாதிப்புகள்தாம்.

இந்திய விஞ்ஞானக் கழகத்தின் ஒரு மூத்த அதிகாரி சொன்னது இங்கே கவனிக்கத்தக்கது... ‘‘விஞ்ஞானத்தாலும் அதைச் சார்ந்த கண்டுபிடிப்புகளாலும்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் இருக்கும். அந்த வகையில் சீனாவும் தென் கொரியாவும் முன்னணியில் நிற்கின்றன. இந்தியா அத்தகைய விஞ்ஞானத்தைச் சார்ந்த கண்டுபிடிப்புகளில் பங்களிப்பதைவிட, பயன்படுத்திக் கொள்வதில்தான் அதிக கவனம் செலுத்துகிறது. அதையும் தாண்டி இந்தியா முன்னேறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதன் ஆன்மாவும் அறிவின் ஆளுமையும் குறைந்துகொண்டே இருக்கின்றன...’’

ஒரு நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு அதன் சாலைகளைக் கொண்டுதான் அளவிடப்படும். அப்படி ஒப்பிடும் பொழுது நமது சாலைகள் தரம் குறைந்தவைகளாகத்தான் இருக்கின்றன. ஆனால், இங்கே இரவு விடுதிகளும் உல்லாச விடுதிகளும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இயற்கையின் பாதையிலிருந்து விலகி நாம் வேறெங்கோ போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. மூளை மரத்துப்போக மதுவையும் போதைப்பொருட்களையும் பயன்படுத்துவது, உல்லாச விடுதிகளில் விழுந்து கிடப்பது... இவைதாம் ‘ஃபாஸ்ட் லைஃப்’ நமக்குத் தந்த பரிசுகள்.

துரித வாழ்க்கையை மக்களுக்குத் தந்து துரத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் கழுகுக் கண்களில் இன்று நம் கிராமங்களும் குறி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவகையில் நம்மை ஓடவிட்டுக் கொல்லும் வேட்டைதான் இந்த துரித வாழ்க்கை.

‘மெழுகுவர்த்தியின் சுடர் வரை
விட்டில்பூச்சி
சென்றதை மட்டும் பார்க்க முடிந்தது
அதன்பின் பார்ப்பதற்கு
ஒன்றும் மிஞ்சவில்லை’
துரிதவாழ்க்கை எனக்கு நினைவுபடுத்தும் ஓர் உருதுக் கவிதை இது. தப்பிக்க முடியாமல் கால்களில் சக்கரம் கட்டியபடி ஓடிக்கொண்டே இருக்கும் நானும் நீங்களும்கூட விட்டில்பூச்சிகள்தானே?

தகப்பன்சாமி பிரிந்துபோன அப்பாவையும் மகளையும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சேர்த்து வைத்திருக்கிறது ஒரு கவிதைத் தொகுப்பு. வார்த்தைகளில் பாசத்தின் வலியை அப்படி ஊற்றி எழுதியிருப்பவர் சுமதிஸ்ரீ.

இந்த ‘தகப்பன்சாமி’ கவிதைத் தொகுப்பு & கவிதைமயமான அழகழகான சம்பவங்களாலேயே நிறைந்திருக்கிறது. அதனாலேயே இயக்குநர்கள் கே.பாக்யராஜுக்கும் லிங்குசாமிக்கும் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அழகாக முன்னுரைத்து வாழ்த்தியிருக்கிறார்கள்.

ஒரு சராசரி தமிழ்ப்பெண்ணின் குடும்பம், காதல், மாதவிலக்கு, தனிமை, ஏக்கம் என எல்லாவற்றையும் சுமதிஸ்ரீ அந்தந்த உணர்வுத்தளங்களிலிருந்து வெளிப்படுத்துகிறார். அதைத் தாண்டிய சமூகக் கோபங்களும் இருக்கின்றன. ‘முகவரி எழுத மறந்த கடிதம்’ & ஈழத்தமிழர்களின் ரத்தத்தை, கண்ணீரை, கொல்லப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்ட ஆண், பெண் உடல்களைக் காட்டி, அவர்களைக் கைவிட்டுவிட்ட நமது மனசாட்சியை உலுக்குகிறது. ஈழப் பிரச்னையை முன்வைத்து மாலதி மைத்ரி, சுகிர்தராணி, தமிழ்நதி, தாமரை எழுதிய கவிதைகளைப் படித்திருக்கிறேன். சுமதிஸ்ரீயின் பதிவும் மிக முக்கியமானதாக இருக்கிறது.

‘திருவிளையாடல்’, ‘புண்ணியம் தேடி’ & இரண்டு கவிதைகளையும் குறும்படங்களாக எடுக்கலாம். அத்தனை அழுத்தமான காட்சிகள்.

‘‘பிரசவத்துக்காக கல்லூரி விரிவுரையாளர் பணியை விட்டபின், கணவர் பணி நிமித்தம் வெளியூரில் வசிக்க, கைக்குழந்தையோடு தனிமையில் கழிந்த பொழுதுகளில் கவிதைதான் எனக்கு ஆறுதலாக இருந்தது’’ என்கிறார் சுமதிஸ்ரீ. கவிதைக்கான உணர்ச்சிகள் அவரிடம் ததும்பி வழிகின்றன. அதை வெளிப்படுத்தும் மொழிக்குள் அவர் மூழ்க வேண்டும்.
 (சலசலக்கும்)
பழநிபாரதி