‘‘தண்ணீருக்காக இதுவரை கர்நாடகாவுடன்தான் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். முல்லைப்பெரியாறு இன்னொரு காவிரி விவகாரம் ஆகிவிடும் போல இருக்கிறது. தமிழனுக்குத் தண்ணீர் தர மலையாள சகோதரர்களுக்கும் மனசில்லையே. நாம் அடுத்த கட்டத்தை யோசிக்க வேண்டும்’’ என்கிறார் கே.எம்.அப்பாஸ். முல்லைப்பெரியாறு நீரால் வளம் கொழிக்கும் தேனி, கம்பம் சுற்றுவட்டாரப் பகுதியின் விவசாயிகள் சங்கத் தலைவரான இவர், அணை பிரச்னை கிளம்பும்போதெல்லாம் ஆதாரங்களாக கையில் வைத்துள்ள ஆவணங்களுடன் பேச வருபவர்!
‘‘ரெண்டு ஆத்துத் தண்ணீர் வீணாப் போய் கடல்ல கலக்குதே... தடுத்து எதிர்த்திசையில திருப்புனா, அந்தப் பக்கம் காய்ஞ்சு கிடக்கிற ஒரு பகுதி பயன் பெறுமேன்னு யோசிச்சிருக்கான் பிரிட்டிஷ்காரன். நதியின் போக்கை மாத்தி வேறு திசைக்குத் திருப்பி விட்டது, உலகத்துலயே முதன்முதல்ல அப்பத்தான்னு சொல்றாங்க. ஒரு நல்லெண்ணத்துல பென்னி குக் என்கிற ஒரு புண்ணியவான் கட்டிட்டான். ஒரு ஒப்பந்தமும் போடப்படுது. அதோட பயனை மழை கருணை காட்டாத தமிழகத்தோட சில தென் மாவட்டங்களும் அனுபவிச்சிட்டிருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகுதான் ஆரம்பிக்குது பிரச்னை.
பாசனத்துக்குக் கிடைக்கிறது கிடைக்கட்டும்... இன்னொருபுறம், அதே தண்ணீரை மின்சாரம் எடுக்கவும் பயன்படுத்தலாமேன்னு 58வாக்கில் தமிழ்நாடு அரசு முடிவு பண்ணுச்சு. அதுவரை கேரளா அப்படியொரு முயற்சியை ஆரம்பிக்காததாலேயே தமிழ்நாடு அந்த முயற்சியில இறங்குச்சு. உடனே அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சது கேரளா. பிரச்னையில மத்திய அரசு தலையிட... ஓர் உடன்பாடு கிடைச்சது. அப்பகூட, ‘ஏன், நாங்க பண்ண மாட்டோமா’னு கேரளாவேகூட அந்த முயற்சியில இறங்கியிருக்கலாம். அவங்களோ, ‘கரன்ட் தயாரிச்சா அதுக்குத் தனியா பணம் கட்டணும்’னாங்க. ஏற்கனவே, அணை நீரால் பயன்பெறுகிற விவசாய நிலங்களுக்காகவும், அணை பாதுகாப்புக்குன்னும் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கேரள அரசுக்குக் கட்டிவந்த தமிழ்நாடு இதுக்கும் சரின்னு சொல்ல, மின்சார உற்பத்தியும் ஆரம்பிச்சது.
152 அடி உயர நீர்மட்ட அளவுல தண்ணீர் கிடைச்சிட்டிருந்ததுல, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்ல நல்ல விளைச்சல் கிடைச்சிட்டிருந்திச்சு. 30 வருஷத்துக்கு முன்னாலதான் இந்த ‘அணை வீக்’ பிரச்னை முளைச்சது. மலையாளப் பத்திரிகை ஒண்ணு ஆதாரமில்லாம கிளப்பிவிட்ட சேதிதான் அதைத் தொடங்கி வச்சது. அதைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு கோர்ட்டுக்குப் போனாங்க. ஆனா, ‘அணை பலவீனம்’ புகாரையெல்லாம் புறந்தள்ளிவிட்ட உச்ச நீதிமன்றம், ‘இருந்தாலும் அவங்க திருப்திக்கு கொஞ்சம் மராமத்து வேலைகளைச் செய்யுங்களேன்’ என தமிழ்நாட்டுக்கு உத்தரவிட்டது. அந்தப் பணி முடியறவரை வேணும்னா தண்ணீரோட அளவைக் கொஞ்சம் குறைச்சுக்கலாம்னும் ஒரு வரியை அப்ப சேர்த்துட்டாங்க. உடனே 152லிருந்து 136 அடியாக நீர் மட்டத்தைக் குறைச்சிட்டாங்க. நமக்கு தண்ணீர் வரத்தோடு, மின் உற்பத்தியும் குறைஞ்சிடுச்சு.
அப்ப குறைச்சதுதான். இன்னிக்கு வரைக்கும் நீர்மட்டத்தை உயர்த்தவே முடியலை. ‘அணை இடியப்போகுது... ஆபத்து வரப்போகுது’ன்னு அப்பப்ப பீதியை கிளப்பி விடுறது கேரளாவுக்கு வாடிக்கையாப் போயிடுச்சு. உச்ச நீதிமன்றமும் இதையெல்லாம் நிராகரிச்சு 146 அடியாவது உயர்த்தியே ஆகணும்னு ஆர்டர் போட்டது. அதுக்கும் அங்க மதிப்பில்லை. கேரள சட்டசபையில தீர்மானம் நிறைவேத்தி, அதை செல்ல விடாம பண்ணிட்டாங்க. திடீர் திடீர்னு அணைப்பக்கம் போய் பார்த்துட்டு, மக்கள் மத்தியில பீதியைக் கிளப்புற வேலையை மட்டும் எல்லா கட்சிகளும் விடாமச் செய்திட்டிருக்காங்க.
அணை விவகாரத்துல தமிழக விவசாயிகளா நாங்க சொல்ல விரும்பற கருத்தைத்தான் சமீபத்துல கேரள உயர் நீதிமன்றத்துல அந்த மாநில அட்வகேட் ஜெனரலே சொல்லியிருந்தார். அதுதான் உண்மை. ‘உடைய வாய்ப்பே இல்லை. அப்படியே ஏதாச்சும் ஆனாலும் அதனால பாதிப்பு பெரிசா இருக்காது’ன்ன பிறகும் பிடிவாதம் பண்றாங்கன்னா, ரெண்டு காரணம் இருக்கலாம். முதல்ல மலிவான அரசியல்.
இன்னொண்ணு, ‘எதுக்கு தரணும்’ங்கிற மனப்பான்மை. அரசியல் காரணம்னா அது பத்து நாள் பரபரப்புக்குப் பிறகு அடங்கிடும். ரெண்டாவது காரணமா இருந்தா அது துரதிர்ஷ்டம்தான். அப்படி இருக்கும் பட்சத்துல ‘நதிநீர் இணைப்பு’ங்கிறதைத்தான் நாம கையில எடுக்க வேண்டியிருக்கும்’’ என்கிற அப்பாஸ், இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார்.
‘‘முல்லைப் பெரியாறுக்கு முரண்டு பிடிச்சாங்கன்னா, எங்களைப் போன்ற ஆட்கள் கேரளாவுக்கு மட்டுமல்ல... நம்ம அரசுக்கும் ஞாபகப்படுத்த வேண்டிய ஒரு விஷயம் பத்மநாபபுரம் அரண்மனை. தமிழ்நாட்டுக்குள்ள இருக்கிற அந்த இடம் கேரள நிர்வாகத்துல எதுக்கு இருக்கணும்? அரண்மனைக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சாரம், தண்ணீர், வரிச்சலுகைன்னு எதுக்கு தரணும்?’’ என்கிற அப்பாஸ், ‘‘பக்கத்து மாநிலத்தைச் செழிக்க வைக்கிற இந்த அணையால நமக்கென்ன பிரயோஜனம்னு நினைக்கறாங்களோ என்னவோ? தமிழகத்துல முல்லைப் பெரியாறு தண்ணீர் பாய்கிற பாதையில கிட்டத்தட்ட 26 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வச்சிருக்கிறது கேரள மக்கள்தான்.
வருசநாடு, திருமாலிருஞ்சோலை, சிவகங்கை, உசிலம்பட்டி வரைக்கும் இருக்கு அவங்களோட நிலங்கள். அரபு நாடுகள்ல இருந்தபடியே குத்தகைக்கு விட்டு விவசாயம் பார்த்திட்டிருக்காங்க. கேரள அரசுக்கு தமிழ்நாடு பணம் கட்டும்போது இந்த நிலங்களுக்கும் சேர்த்துத்தான் கட்டிட்டிருக்கு’’ என்கிறார்!
அய்யனார் ராஜன்
படம்: செல்லபாண்டியன்