வாழைப்பழம் சாப்பிட்டதால் ஒரு குழந்தை செத்துப் போகுமா? ‘இப்படியுமா நடக்கும்’ என அதிர வைத்திருக்கிறது இந்த சம்பவம். சென்னை, கீழ்கட்டளை அம்பாள் நகரில் இருக்கும் அந்த வீடு இருள் சூழ்ந்து கிடக்கிறது. இழப்பின் வலியில் முடங்கிக்கிடக்கும் பாக்கியலட்சுமியையும் கிருஷ்ணகுமாரையும் உறவுகளும் நட்புகளும் தேற்றுகிறார்கள்.
அழகுற உதடு சுழித்து ‘டாடா’ காட்டிவிட்டுப் போன ஹரீஷ் சாய்நாதனின் வாசனை இன்னும் அந்த வீட்டை விட்டுப் போகவில்லை. பல்லாவரம் வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளியில் யூ.கே.ஜி படித்த ஹரீஷ், பள்ளியில் வாழைப்பழம் சாப்பிட்டபோது மூச்சுக்குழலில் சிக்கி இறந்து விட்டான்.
ஹரீஷின் தாத்தா சீனிவாசனிடம் பேசினோம்... ‘‘ஸ்கூல் வாசல்ல புள்ளைய இறக்கிவிட்டா பெத்தவங்க கடமை முடிஞ்சிருது. உள்ளே நடக்குறது நமக்குத் தெரியாது. திரும்பவும் பெத்தவங்ககிட்ட ஒப்படைக்கிற வரைக்கும் அவங்கதானே பொறுப்பு? காலை 9.30 மணிக்கு சம்பவம் நடந்திருக்கு. ஆம்புலன்ஸுக்குக்கூட சொல்லலே. அட அவங்ககிட்ட எவ்ளோ வண்டி இருக்கு... அதைக்கூட எடுக்காம, ஒரு ஆட்டோவைப் புடிச்சு ஆஸ்பத்திரிக்கு அனுப்பியிருக்காங்க. ஸ்கூல்லயே புள்ளைக்கு உயிர் போயிருச்சு. என் வயசுக்கு வாழைப்பழம் சாப்பிட்டு இறந்துபோனதைக் கேள்விப்பட்டதே இல்லே...’’ என்று விசும்புகிறார் சீனிவாசன்.
ஹரீஷ் சாய்நாதனின் மரணம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஏராளமான குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளியில் முதலுதவி செய்யக்கூட யாருமில்லை. பள்ளிகளில் முதலுதவிப் பெட்டிகள் கட்டாயம் என்பது அரசு விதி. ஆனால், தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் இந்த விதி காற்றில் பறக்கிறது.
இதுபற்றி நம்மிடம் பேசிய ‘குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பின்’ தலைவர் தேவநேயன், ‘‘ஆண்டுக்கு பல ஆயிரங்களை கட்டணமாக வசூலிக்கும் பள்ளிகள், குழந்தைகள் நலனுக்கான சிறிய ஏற்பாடுகளைக் கூட செய்வதில்லை’’ என்று குற்றம் சாட்டுகிறார்.
‘‘சம்பவங்கள் நடந்த பிறகு அதைப்பற்றி ஓரிரு நாட்கள் விவாதித்து விட்டு மறந்துபோவது நம் இயல்பாக மாறிவிட்டது. கும்பகோணம் விபத்துக்குப் பிறகு நியமிக்கப்பட்ட சம்பத் கமிஷன், பல தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லை என்று அறிக்கை அளித்தது. ஒரு நடவடிக்கையும் இல்லை. அதேபோல கத்திரிபுலத்தில் வேன் கவிழ்ந்து குழந்தைகள் இறந்தார்கள். பதிவுபெறாத பள்ளி, லைசன்ஸ் இல்லாத ஓட்டுனர்... இதுபோன்ற பள்ளிகளை அடையாளம் காணக்கூட நடவடிக்கை இல்லை.
சர்வதேச ஆராய்ச்சிகள்படி 7 வயதில்தான் குழந்தைகள் கல்விக்குத் தயாராகின்றன. ஆனால், இங்கு நர்ஸ் கையில் இருந்து குழந்தையை வாங்கியவுடனே நர்சரி பள்ளியைத் தேடுகிறார்கள். குழந்தைத்தொழிலாளர்கள் எப்படி தொழிலகங்களில் முடக்கப்படுகிறார்களோ, அதைப்போல பள்ளிகளில் குழந்தைகள் முடக்கப்படுகிறார்கள்.
90 சதவீதம் தனியார் பள்ளிகளில் குழந்தைகளின் உளவியல் புரிந்த ஆசிரியர்கள் இல்லை. நிர்வாகம் விதிக்கும் விதிகளின்படி குழந்தைகளை இயக்குகிறார்கள். விதிகளும் குழந்தைகளை மையப்படுத்தி இல்லாமல் நிர்வாகத்தை மையப்படுத்தி இருக்கிறது. 10 நிமிடத்துக்குள் சாப்பாடு, 5 நிமிடத்துக்குள் ரீசஸ்... இந்த வரையறைக்குள் குழந்தைகளை சுருக்கித் திணிக்கிறார்கள். ஹரீஷ் மரணத்துக்குக் கூட அப்படி அவசரத்தில் திணிக்கப்பட்ட வாழைப்பழம் காரணமாக இருக்கலாம். ஆசிரியர்கள் குழந்தைகளை இயக்கக்கூடாது. குழந்தைகளோடு சேர்ந்து இயங்க வேண்டும்’’ என்கிறார் தேவநேயன்.
டிசம்பர் 26 அன்று ஹரீஷின் 4வது பிறந்த நாள். அதற்காக வாங்கிய உடைகளும், பரிசுகளும் பத்திரமாக இருக்கின்றன. ஹரீஷ் மட்டும் இல்லை. மழலையை இழந்து தவிக்கும்
பெற்றோரின் ரணத்தை காலம்தான் ஆற்ற வேண்டும்.
வெ.நீலகண்டன்
படங்கள்: ரமேஷ், ஆர்.சந்திரசேகர்