உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான
ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு மே மாதம் லண்டனில் நடைபெற உள்ளன. உலகமே
அப்போட்டிக்கு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்தியாவை மிகப்பெரும்
தர்மசங்கடத்தில் தள்ளியிருக்கிறது லண்டன் ஒலிம்பிக் கமிட்டி. அப்படியென்ன
தர்மசங்கடம்?
அதை அறிந்துகொள்ள 32 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணிக்க வேண்டும்...
1979ல்
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மக்கள்நெருக்கம் மிகுந்த
பகுதியில் யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க நிறுவனம் ஒரு பூச்சிக்கொல்லி
ஆலையை நிறுவியது. 1984ம் ஆண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட
குளறுபடியால் இந்த ஆலையில் இருந்து கொடூர விஷத்தன்மை பொருந்திய ‘மீத்தைல்
ஐசோ சயனைட்’ என்ற வாயு கசியத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை
விபத்தான இதில், (இன்றுவரை) சுமார் 25 ஆயிரம் பேர் பலியாகியுள்ளார்கள். 6
லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த பாதிப்பின் கொடூரத்
தொடர்ச்சியாக... காது இல்லாமல், மூக்கு இல்லாமல், மூளை வளர்ச்சி இல்லாமல்
இன்றும் குழந்தைகள் பிறக்கின்றன. இவ்வளவு பேரழிவை உருவாக்கிய
அந்நிறுவனத்தின் உரிமையாளர் வாரன் ஆண்டர்சன் சில அதிகாரிகள் உதவியோடு
அமெரிக்காவுக்குத் தப்பியோடி விட்டார். இது தொடர்பான வழக்குகள் இன்னும்
நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
அமெரிக்க
நிறுவனமான டௌ கெமிக்கல், கடந்த 2001ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை
மொத்தமாக விலைக்கு வாங்கியது. அந்நிறுவனத்தின் மீதான கிரிமினல் வழக்குகள்,
விசாரணைகள் எதிலும் பங்கேற்காமல், உலகெங்கும் உள்ள யூனியன் கார்பைடு
ஆலைகளில் தயாராகும் பொருட்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்து விற்பனையும்
செய்கிறது.
இந்த டௌ கெமிக்கல் நிறுவனத்தைத்தான் லண்டன் ஒலிம்பிக்
போட்டியின் பிரதான ஸ்பான்சராக நியமித்துள்ளது ஒலிம்பிக் கமிட்டி. இதுதான்
இந்தியாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்.
‘‘போபாலில் ஆயிரக்கணக்கான
மக்களின் மரணத்துக்கும் பேரிழப்புக்கும் காரணமான யூனியன் கார்பைடு
நிறுவனத்தை வாங்கியதால் டௌ கெமிக்கல் நிறுவனமும் குற்றவாளிதான். விபத்தின்
விளைவுகளுக்கு டௌ கெமிக்கல்தான் பொறுப்பேற்க வேண்டும். அங்கு இன்னும்
பாதிப்புகள் குறையவில்லை.
ஆண்டர்சனையும் யூனியன் கார்பைடு
அதிகாரிகளையும் தலைமறைவு குற்றவாளிகளாக கோர்ட் அறிவித்திருக்கிறது. ஆனால்,
அந்நிறுவனத்தை வாங்கிய டௌ கெமிக்கல் நிறுவனமோ, ‘எங்களுக்கும் அதற்கும்
சம்பந்தமில்லை. நாங்கள் வழக்கில் ஆஜராக மாட்டோம்’ என்கிறது. தைரியமாக
இந்தியாவுக்குள் வந்து தொழிலும் செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள்
நிவாரணத்துக்கு ஏங்கும் நிலையில், 500 கோடி ரூபாயை ஒலிம்பிக் போட்டி
விளம்பரத்துக்காக செலவு செய்கிறது அந்நிறுவனம்.
சர்வதேச
ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் இதற்கு எந்த
எதிர்ப்பும் தெரிவிக்க வில்லை. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து
எம்.பி கீத்வாஜ் குரல் எழுப்பிய பிறகு தான் இது இந்தியாவுக்கு
உறைத்திருக்கிறது. இங்கிலாந்து எம்.பிக்கள் குழு இதுகுறித்து விசாரணை
நடத்தி லண்டன் ஒலிம்பிக் கமிட்டியிடம் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். ‘டௌ
கெமிக்கல் வந்தால் லண்டன் நகருக்கே களங்கம் ஏற்படும்’ என்று லண்டன் மேயரும்
குரல் கொடுத்திருக்கிறார்.
ஆனால், இந்தியாவில் இப்போதுதான்
எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன’’ என்று வருந்தும்
சமூகவியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், ‘‘டௌ கெமிக்கல் நிறுவனத்தை ஒலிம்பிக்
கமிட்டி உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில் இந்தியா
ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும். இதற்காக அரசியல் தலைவர்கள், சமூக
அமைப்புகள், விளையாட்டு வீரர்கள், மனித உரிமையாளர்களை ஒருங்கிணைத்து
வருகிறோம்’’ என்கிறார்.
இச்சூழலில் தன்ராஜ் பிள்ளை, பாஸ்கரன்,
சார்லஸ் கார்னலியஸ் உள்ளிட்ட 22 ஒலிம்பிக் வீரர்கள், டௌ கெமிக்கலை நீக்காத
பட்சத்தில் போட்டிகளை புறக்கணிக்க நேரிடும் என்று லண்டன் ஒலிம்பிக்
கமிட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். மத்தியப் பிரதேச முதல்வர் சௌகானும்
எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம்
எதிர்ப்பைப் பதிவுசெய்யுமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு
உத்தரவிட்டுள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.
ஆயிரக்கணக்கான
மக்களைக் கொன்று குவித்து, தண்டனையில் இருந்து தப்பிய ஒரு கிரிமினல்
நிறுவனத்தை விலைக்கு வாங்கி, அந்த கொடூரத்தின் காயங்கள் ஆறும் முன்பாக அதன்
தயாரிப்புகளை இங்கேயே வந்து சந்தைப்படுத்துகிறது ஒரு நிறுவனம்.
அந்நிறுவனத்தின் தயவில் நடக்கும் போட்டியில் இந்தியா விளையாட வேண்டுமாம்.
என்ன விளையாட்டு இது?
வெ.நீலகண்டன்