ஆந்திர குக்கிராமம் ஒன்றில் அழுக்கு உடையோடு நின்று கொண்டிருந்த விஜயமாலாவை அழைத்து வந்து, நடிப்பு பயிற்றுவித்து ‘சிலுக்கு’ ஸ்மிதாவாக மாற்றி தமிழ் சினிமாவின் பிசினஸ் டிரெண்டை மாற்றியவர் வினு சக்கரவர்த்தி. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த இவர், கதை, திரைக்கதை, வசனம் என பல தளங்களிலும் பயணித்தவர். இப்போது 65 வயதில் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஸ்பெஷல் போலீஸ் ஆபீசராக வாழ்க்கையைத் தொடங்கி, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து திரையுலகத்துக்கு வந்தவர் வினு.
‘‘காமாட்சி புண்ணியத்தில 6 வயசிலேயே உசிலம்பட்டி ஒச்சாயித் தேவர் கூத்துக்குழுவில வேஷம் கட்டின ஆளு நான். நடிப்பும் படிப்புமாவே வாழ்க்கை ஓடுச்சு. பி.காம் படிச்சப்பவே போலீஸ் வேலை கிடைச்சிருச்சு. 6 மாசம் வேலை செஞ்சேன். ரயில்வே வேலை வந்துருச்சு. சம்பளம் அதிகமா கிடைச்சதால அதுக்குப் போயிட்டேன். ரயில்வே ஆண்டு விழாவுல ‘தெய்வநாயகி’ன்னு ஒரு கதையெழுதி நாடகம் போட்டேன். அதைப் பாத்த கன்னட டைரக்டர் புட்டண்ணா கனகல், ‘நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்ல... என்கூட வந்துரு’ன்னு கூப்பிட்டாரு.
நம்பிக்கையோட கிளம்பிட்டேன். புட்டண்ணா என்னை ஆஸ்தான கதாசிரியரா வச்சுக்கிட்டார். பல படங்களுக்குக் கதை, வசனம் எழுதுனேன். புட்டண்ணாவுக்கு நான் வலதுகரம்னா, ஆலநல்லிக் கிருஷ்ணா இடதுகரம். ‘பிரசங்கதே கண்டதிம்மா’ன்னு ஆலநல்லி கதையில புட்டண்ணா ஒரு படம் பண்ணினாரு. அதை ‘ரோஜாப்பூ ரவிக்கைக்காரி’ன்னு தமிழ்ல எடுத்தாங்க. புரட்யூசர் திருப்பூர் மணி. அந்தப் படத்துக்கு உதவி பண்றதுக்காக என்னை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வச்சார் புட்டண்ணா. அதுல ஆல்&இன்&ஆலா இருந்து வேலை செஞ்சேன். ஒரு நாட்டாமை கேரக்டரை என்னையே செய்யச் சொன்னார் மணி. அதுதான் நான் நடிச்ச முதல் படம்.
அதுக்குப் பிறகு ‘வண்டிச்சக்கரம்’, ‘இமைகள்’னு சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குனராவும் இருந்தேன். நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்ததால, எழுத்து வேலைகளை நிறுத்தி க்கிட்டு நடிப்புல இறங்கிட்டேன். அன்னைக்கு தொடங்கினது தான். ‘காஞ்சனா’ எனக்கு 1001வது படம்!’’
அடுத்து?‘‘டைரக்டராகணும்னு சினிமாவுக்கு வந்த ஆளு நான். இன்னும் அந்தக் கனவு நிறைவேறலையே... காமாட்சி புண்ணியத்தில, ரஜினி, கமல்ல இருந்து, தனுஷ், சிம்பு வரைக்கும் சூட்டாகுற மாதிரி 30 ஸ்கிரிப்ட் வச்சுருக்கேன். முதல்ல, ‘வேலிகாத்தான்’னு ஒரு ஸ்கிரிப்ட் கையில எடுத்துருக்கேன். இளையராஜாகிட்ட கதையச் சொன்னேன். ‘வண்டிச்சக்கரம் பண்றப்போ என்ன வீரியம் இருந்துச்சோ, அதே வீரியம் இப்பவும் இருக்கு. நிச்சயம் இது வெற்றிப் படம்தான்’னு வாழ்த்தி அனுப்பினார். அவர்தான் இசையமைக்கிறார். நானே தயாரிக்கிறேன். 3 கோடி ரூபா செலவுல 45 நாள்ல முடிக்கப்போறேன்...’’
சிலுக்கு படம் பாத்துட்டீங்களா? ‘‘எது... டர்ட்டி பிக்சரை சொல்றீங்களா..? லண்டன்ல இருந்தப்போ, நண்பர்கள் பாத்துட்டு போன் பண்ணினாங்க. எதிர்பார்த்த அளவுக்கு இந்தப் படம் இல்லைன்னு கேள்விப்பட்டப்போ மனசார அழுதேன். ஏன்னா, சிலுக்கு என் மாணவி. இந்தப்படம் எடுத்தவங்களை என் மாணவியின் ஆத்மா நிச்சயமா மன்னிக்காது. ‘சிலுக்கு’ங்கிற வார்த்தைக்கு சொந்தக்காரனே நான்தான்.
‘வண்டிச்சக்கரம்’ படத்துக்கு சாராயக்கடையில வேலை செய்றதுக்கு மதமதப்பான உடம்பும், வளைவு நெளிவான வாலிபமும் கொண்ட ஒரு பொண்ணு தேவைப்பட்டுச்சு. புதுசா தேடலாம்னு ஆந்திரா, கர்நாடகான்னு அலைஞ்சோம். ஏலூர் கிராமத்தில ஒரு மாவு மில்லுல ஒரு பொண்ணைப் பாத்தேன். எதிர்பார்த்த மாதிரி உடல்வாகு இல்லாட்டியும், எதிர்பார்க்காத மாதிரி கண்ணுக்குள்ள ரெண்டு கள்ளுக் கடைகளே ஒளிஞ்சிருந்துச்சு. அந்தப் பொண்ணை அழைச்சுக்கிட்டு வந்து, 6 மாதம் என் மனைவி, மாமியார் கூட தங்கவச்சு, நடிப்பு கத்துக் குடுத்து குடும்பத்தில ஒருத்தியா பாத்துக்கிட்டேன். மாணவியா மட்டுமில்லாம மகளாவும் இருந்தா. ‘வண்டிச்சக்கர’த்துக்குப் பிறகு அதோட லெவல் மாறிடுச்சு; வாழ்க்கையும் மாறிடுச்சு.
சிலுக்கைப் பத்தி முழுசா தெரிஞ்ச ஒரே ஆள் நான்தான். அது மனசும், அதுக்குள்ள இருந்த வலியும் எனக்குத்தான் தெரியும். சிலுக்கு கதையை ஏக்தா கபூர் எடுக்கிறதை கேள்வி\ப்பட்ட வுடனே நான் பேசினேன்... ‘ஒரிஜினல் தெரியாம பண்ணினா அது சிலுக்கு படமா இருக்காது. செக்ஸ் படமாத்தான் இருக்கும். ஒரிஜினல் கதையை நான் தர்றேன்.
கோ&டைரக்டராவும் வேலை செய்றேன். ஒத்தை பைசா சம்பளம் வேணாம்’னு சொன்னேன். அவங்ககிட்ட இருந்து பதிலே இல்லை. எனக்கு அவங்க கொடுத்த மரியாதை அவ்வளவுதான்.
சரி... நடந்தது நடந்து போச்சு. சிலுக்கோட அப்பழுக்கு இல்லாத உண்மைக்கதையை ‘சிலுக்கு’ங்கிற பேர்லயே எடுப்பேன். அந்தப்படத்தோட வடமாநில டிஸ்டிரிபியூஷனை ஏக்தா கபூருக்கே கொடுப்பேன். அதுக்கு அவங்க ஒரு பைசா பணம் தரத் தேவையில்லை. ஒரு சொட்டு கண்ணீர் உதிர்த்தா அது போதும். சிலுக்கோட ஆத்மா சாந்தியடைஞ்சிரும்...’’
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்