புயல் மழை ஓய்ந்து சென்னை இயல்புக்கு வந்ததும் தொடங்கிவிட்டது இசை மழை. சிலிர்க்க வைக்கும் பனிக்காற்று இதமாகத் தாலாட்ட, பாரதிய வித்யா பவன் இசை விழா முதலில் ஆரம்பம். இந்த ஆண்டு விழாவில் டாக்டர் பால முரளிகிருஷ்ணா, நித்யஸ்ரீ ஆகியோரோடு மிகப்பெரிய வயலின் வித்வான் எம்.எஸ்.அனந்தராமனுக்கும் விருது வழங்கி கௌரவித்தார்கள். இந்த இசை விழாவில் சிக்கில் குருசரண் கச்சேரி.
சரண் என்று அழைக்கப்படும் இவரது பாட்டிகள்தான் சிக்கில் சகோதரிகள். புல்லாங்குழல் இசைக்கு மகுடம் சேர்த்தவர்கள். குருசரண் முதலில் வைகல் ஞானஸ்கந்தனிடம் இசை பயின்று, தற்போது வித்வான் பி.கிருஷ்ணமூர்த்தியிடம் சிக்ஷை. அன்று கச்சேரியில் சஞ்சீவ் வயலின், நெய்வேலி வெங்கடேஷ் மிருதங்கம். பி.எஸ்.புருஷோத்தம் கஞ்சிரா.
சரண் குரல்வளத்தில் ரசிகர்கள் சொக்கிப் போயிருந்தது உண்மை. லால்குடி ஜெயராமன் இயற்றிய கந்நட ராக வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பித்தது. சங்கீத உலகிற்கு லால்குடி அளித்த இசைப் படைப்புகள் மகத்தானவை. பிறகு ஆபோகி ராகத்தில் ‘ஸ்ரீமஹா கணபதி’ கீர்த்தனை. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய ‘கிரிப்ரியம்’ பாட்டு களை கட்டியது. அன்றைக்கு சரண் பாடிய வாகதீச்வரி ராகம் அவருக்கு வாகாக அமைந்தது. சஞ்சீவின் வில் குறி தவறாமல், பாடகரோடு ஒத்துப்போனது. வெங்கடேஷ் கையில் நல்ல விசேஷமான நாதம். புருஷோத்தம் கஞ்சிரா கெஞ்சியது.
காலம் காலமாக நம் இசை உலகில் பல சாகித்ய கர்த்தாக்கள் சிறந்த இசைப்படைப்புகளை நமக்கு அளித்து விட்டுப் போயிருக்கிறார்கள். புரந்தரதாசரில் ஆரம்பித்து சங்கீத மும்மூர்த்திகள், ஸ்வாதி திருநாள் பாபனாசம் சிவன் கோபால கிருஷ்ண பாரதி என்று பலர் படைத்து வைத்திருக்கும் பொக்கிஷங்கள் அவை. அவர்கள் பாட்டைப் பாடுவதற்கே நமக்கு ஆயுட்காலம் போதாது.
கல்லிடைக்குறிச்சி டாக்டர் இ.எஸ்.சங்கர நாராயண ஐயர் கீர்த்தனைகள் பல இயற்றியுள்ளார். மருத்துவம் படித்த டாக்டர் அவர். ஆனால், சங்கீதத்தின் மீது அபார காதல். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். கதா காலட்சேபம் பண்ணுவதிலும் வல்லவர். ‘வள்ளி திருமணம்’ போன்றவற்றை கீர்த்தனைகளாக அவரே இயற்றி கதா காலட்சேபம் செய்தவர். அவருடைய பாடல்களைத் தொகுத்து புத்தக வடிவில் கொண்டு வந்தவர் அவருடைய வாரிசான சரஸ்வதி சங்கரன். ‘மரகதம் சங்கரநாராயணன் ட்ரஸ்ட்’ என்று ஆரம்பித்து, வருடா வருடம் இசை விழாவில் சங்கரநாராயண ஐயர் இயற்றிய கீர்த்தனைகளைக் கொண்டு கச்சேரி நடத்துகிறார்கள்.
இந்த ஆண்டு டிசம்பர் 2 அன்று காயத்ரி கிரீஷ் கச்சேரி. சங்கர நாராயண ஐயரின் பாடல்களை சிரத்தையோடு, அருமையாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் காயத்ரி. அதில் அவர் பாடிய வராளி கீர்த்தனை மிக அருமை. வயலின், எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி; மிருதங்கம், மனோஜ் சிவா; கஞ்சிரா, அனிருத்.
பிரம்ம கான சபையின் இசை விழா தொடக்கமாக, ‘நாடக பத்மம்’ விருது கே.பாலசந்தருக்கும், ‘நாட்டிய பத்மம்’ லக்ஷ்மி விசுவநாதனுக்கும், ‘கான பத்மம்’ விருது வயலின் வித்வான் நாகை முரளிதரனுக்கும் கவிஞர் வாலி கரங்களால் வழங்கப்பட்டது. அந்த சபையில் மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரி.
அரியக்குடியிடம் ஒரு ரசிகர் சென்று, ‘‘உங்க தோடி, தோடு மாதிரி அழகாகவும் அலங்காரமாகவும் இருக்கு’’ என்றாராம். அதற்கு அரியக்குடி, ‘‘காதுல போட்டுண்டா சரி’’ என்றாராம் சிலேடையாக! சேஷகோபாலன் கச்சேரியைக் ‘காதுல போட்டுண்டா’ ஞானம் கிடைக்கும். ஐந்து வயதிலேயே நாமாவளிகள், பஜன்கள் என்று பாட ஆரம்பித்த அவருக்குத் தெரியாத கலைகளே கிடையாது எனலாம். பாட்டு, வீணை, கதா காலட்சேபம் என்று பல பரிமாணங்கள் எடுத்தவர்.
கம்ப ராமாயணம் முதல் காவடிச் சிந்து வரை பல்லாயிரக் கணக்கான பாடல்கள் இவர் விரல் நுனியில். அபார கற்பனை, பிருகாக்கள், லய பிடிப்பாடு என்று பல விசேஷங்கள் இவர் பாட்டில் உண்டு.
அந்தக் காலத்திலிருந்தே மதுரை மணி ஐயர் பாணி, ஜிஎன்பி பாணி, விச்வநாதய்யர் பாணி, அரியக்குடி பாணி, செம்மங்குடி பாணி என்று பலவிதங்களில் பாடல்கள் வித்தியாசமாக ஜொலித்தன. அந்த வரிசையில் சேஷகோபாலன் பாணி என்று ஒன்று நிச்சயமாக உண்டு. கச்சேரிக்கு கச்சேரி வித்தியாசம்... புதுமை! ஒவ்வொரு மேடையையும் புதிதாகக் கையாளும் திறமை என சொல்லிக்கொண்டே போகலாம். டிசம்பர் 4ம் தேதி கச்சேரியில் அவர் பாடிய பந்துவராளி ராகமும், ‘ராமநாதம்’ தீட்சிதர் கீர்த்தனையும் தேன்தான்.
முத்தையா பாகவதரின் சிஷ்யரான ராமநாதபுரம் சங்கர சிவம்தான் சேஷகோபாலனுக்கு குரு. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் பல அபூர்வ ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அதில் குஹரஞ்சனி ராகத்தையும் கீர்த்தனையையும் அநாயாசமாகப் பாடினார். தோடி ராகம் சேஷகோபாலனின் சொத்து. அந்த ராகத்தின் பெயரில் வந்த படத்தில் நடித்ததினால் இல்லை. நிஜமாகவே தோடிக்கு சொந்தக்காரர்தான் அவர். கோடி கொடுக்க முடியாவிட்டாலும் ஓடிப்போய் அவரது தோடியை நாடிக் கேட்டு மகிழலாம்.
‘எந்துகு தயராதுரா’ கீர்த்தனை. தியாகராஜர், ‘ஸ்ரீராமச்சந்தரா! உன் தயை வராத காரணமேன்’ என்று கேட்கிறார். ‘எனக்கு வேறு யார் கதி? உன்னைத் தவிர புகல் யாரும் இலர்!’ என்று இந்தப் பாடலில் மருகுகிறார். சேஷகோபாலன் கச்சேரியைக் கேட்டால், அவருடைய பாட்டுக்குப் பொருத்தமாக அமைவது போல இருக்கும் இந்தப் பாடலின் பொருள். வி.வி.ரவி வயலினில் அவ்வளவு குளுமை. ரமேஷ் மிருதங்கம் பேஷாக இருந்தது. மதுரைக்கு பெருமை சேர்த்தவர்களில் மதுரை மணி ஐயர், மதுரை சோமு போல, மதுரை டி.என்.சேஷகோபாலனும் முக்கியமானவர்!
பாபனாசம் அசோக் ரமணி
படங்கள்: புதூர் சரவணன்