இன்னொரு கோலாகலமான சங்கீத நாட்டிய உற்சவத்துக்கு சென்னை நகரம் கம்பளியுடன் தயாராகிவிட்டது. கல்யாணி, காம்போதிக்கு நடுவே அழுத்தமான சலங்கை ஒலியும் ஜோராகக் கேட்க ஆரம்பித்துவிட்டது. பத்மா சுப்ரமணியம், மாளவிகா சருக்கை, அலர்மேல்வள்ளி, ஊர்மிளா சத்யநாராயணன் போன்ற சீனியர்களுக்கு மத்தியில் இந்த வருடம் ஏராளமான இளைய தலைமுறைப் பெண்களும் சலங்கையுடன் கோதாவில் இறங்கியுள்ளனர். சிலர் புதிய தீம்களில் கலக்கப் போகிறார்கள் என்பது இதமான விஷயம். பழம்பெரும் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் காலத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை சில பாடல்களுக்கு தனது குழுவினரை ஆட்டுவிக்கப் போகிறார் நடன ஆசிரியை ராதிகா சூரஜித். ஆக, முதல்முறையாக இசைப்புயலின் சில மெலடிகளும் நடன வடிவமாகி சென்னை சபாக்களில் ஒலிக்கப் போகிறது.
‘‘பாரம்பரியத்தை நாம் விட்டுவிடக்கூடாதுதான். அதே நேரம் புதுமையான கற்பனைகளும் அதில் சேரும்போது பாரம்பரிய பரதக் கலைக்கு மேலும் மெருகு கூடும். இது என் இரண்டு வருடகால உழைப்பு’’ என்று பெருமிதத்துடன் பேசினார் ‘விபஞ்சி’ அமைப்பின் டாக்டர் சரஸ்வதி. ரவீந்திரநாத் தாகூரின் அற்புதமான கவிதைகளை எடுத்து நாட்டிய வடிவம் தந்து அசத்திய அவரது முயற்சி இந்த டிசம்பர் சீசனின் அழகான தொடக்கம்.
பெத்தாச்சி ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் தாகூரின் ரவீந்திர சங்கீதத்துடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், நம் தியாகராஜர், பாரதி மற்றும் சங்கீத மேதை பால முரளி கிருஷ்ணாவின் படைப்புகளையும் அருமையாகக் கோர்த்துத் தந்தார் சரஸ்வதி. புஷ்பாஞ்சலியிலிருந்து இறுதியில் வந்த தேஷ் தில்லானா வரை இரண்டு மணிநேரம் யாரும் எழுந்திருக்கவில்லை.
தியாகராஜரின் அபூர்வ கீர்த்தனையான ‘லாவண்ய ராமா’வுக்கு சுமிதா மாதவ் காட்டிய அபிநயமும் அடவுகளும், சிம்பு பட ஸ்டைலில் சொன்னால், ‘ரொம்ப ஒஸ்தி!’ இந்தக் கீர்த்தனையில் ஸ்ரீராமரின் பராக்கிரமத்தையும், லாவண்யத்தையும் அற்புதமாகச் சொல்கிறார் தியாகராஜர்! லாவண்ய ராமரை பரவசத்துடன் வர்ணித்த சுமிதாவின் ஒவ்வொரு அசைவும், ஆடியன்ஸை கட்டிப்போட்டது நிஜம். இந்த பூர்ண சட்ஜம கீர்த்தனை தாகூரையும் சுண்டியிருக்க இதேபோன்றதொரு பாடலை இயற்றியுள்ளார். அந்த பெங்காலி பாடலுக்கு ஆடினார்கள் விபஞ்சி நாட்டியப் பெண்கள். இரு பாடல்களுக்கும் உள்ள இதமான ராக ஒற்றுமை வியப்பை ஏற்படுத்தியது.
நடராஜர் தாண்டவமாடும் சிதம்பரம் பற்றி பாலமுரளி கிருஷ்ணா கம்போஸ் செய்த பக்திப் பரவசமூட்டும் பாடல், நிகழ்ச்சியின் இன்னொரு ஹைலைட்! கலாக்ஷேத்ராவின் ஆசிரியர் சூரியநாராயணன் இதற்கு மிகச்சிறப்பாக ஆடினார். அரை மண்டி சுத்தம், அடவு சுத்தம், அங்க சுத்தம் எல்லாமே நேர்த்தியாக அமைந்த முழுமையான நடனக் கலைஞர். இதற்குச் சவாலாக பிரபஞ்ச சக்தியை வெளிப்படுத்தும் பெங்காலி பாடலுக்கு இளம் கலைஞர் ராகுல் ஆடியபோது செம கரவொலி!
‘புஷ்பாஞ்சலி’ யில் மோகினியாட்டம் ஸ்டைலில் அகல் விளக்குடன் ஒய்யாரமாக அபிநயம் பிடித்த ஷோபனா ரமேஷ், கொள்ளை அழகுடன் மதுரை மீனாட்சியாக வந்த சுப்ரியா, விறுவிறுப்பான தில்லானா ஆடிய தினேஷ் மகாதேவன் குழுவினர் அனைவருமே கவனிக்கத்தக்கவர்கள். ராஜ்குமார் பாரதியின் தேஷ் ராக தில்லானாவுக்கு நிச்சயமாக ஒரு சபாஷ் போடலாம்.
பெங்காலி பாடல்களை அந்த ஊர் கலைஞர்களையே பாடவைத்து ரெக்கார்டு செய்வதற்காகவே கொல்கத்தா சென்று வந்ததாகச் சொன்னார், இந்த நடன நிகழ்ச்சியை உருவாக்கிய சரஸ்வதி. அதைவிட சவாலான விஷயம், சென்னையிலுள்ள வெவ்வேறு பிரசித்தி பெற்ற நடனக் குழுக்களை ஒருங்கிணைத்தது. ‘சுவாமி, நான் உந்தன் அடிமை’ என்று பழைய பஞ்சாங்கத்தையே திரும்பத் திரும்ப அரங்கேற்றாமல், தாகூரை நம்மூர் மேடையில் ஏற்றி அழகு பார்த்து புதிய பாதை போட்டிருக்கிறார் சரஸ்வதி.
பாலக்காடு பரணி