கார் சீட் குஷனில் கணிசமான லாபம்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly 
magazine

                  கார் பயணம் சொகுசானது...
-வெளியில் இருந்து பார்ப்பவரின் பொதுவான அபிப்ராயம் இது! 

ஓட்டுபவர்களைக் கேட்டால்தான் தெரியும் அவர்களது சிரமம். நீண்ட நேரம் உட்கார்ந்தபடி ஓட்டும்போது, முதுகு வலிக்கும். முதுகு முழுக்க வியர்த்து, உடை நனையும். உடல் சூடாகும். அதைத் தவிர்க்கத்தான் கார் ஓட்டும் பலரும், இருக்கையின் மேல் மணிகளால் ஆன சீட் குஷன் பயன்படுத்துகிறார்கள். முதுகுப்பக்கம் காற்றோட்டம் இருக்கும். உட்காரவும் வசதி. உடல் சூடும் தணியும். முக்கியமாக முதுகு வலிக்கு இதமாக இருக்கும்.

சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, விதம்விதமான கார் சீட் குஷன் செய்வதில் நிபுணி.

‘‘சின்ன வயசுலேருந்து மணிகள்லயும் ஒயர்லயும் கைவினைப் பொருள்கள் செய்வேன். புதுசா எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை செய்து பார்க்க முயற்சிப்பேன். எங்க வீட்ல கார் வாங்கினப்ப, சீட் குஷன் வாங்க பேச்சு வந்தது. மணிகள்ல இத்தனை பொருள்கள் செய்யத் தெரிஞ்சதால, நானே சீட் அளவெடுத்து பின்னிப் பார்த்தேன். நல்லா வந்தது. அக்கம்பக்கம், தெரிஞ்சவங்கன்னு கார் வச்சிருக்கிற பலருக்கும் அது தெரிஞ்சு ஆர்டர் கொடுக்க, இன்னிக்கு நான் அந்த பிசினஸ்ல பிசி’’ என்கிற ராஜேஸ்வரி, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘மரத்தால் ஆன மணிகள் அல்லது பிளாஸ்டிக் மணிகள் ( உருண்டை, நீளம்னு வேற வேற ஷேப் மற்றும் அளவு களில்), ஒயர்னு ரெண்டே பொருட்கள்தான் மூலதனம். 3 ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டுத் தொடங்கலாம்.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?

‘‘பத்துக்கும் மேலான டிசைன்கள்ல பண்ணலாம். மணிகளைக் கோர்க்கிற விதத்துலதான் கற்பனையையும் வித்தியாசத்தையும் காட்ட முடியும். மத்தபடி சீட்ல உட்காரும் இடத்துக்கு மட்டுமா, முதுகுப்பக்கத்துக்கும் சேர்த்தாங்கிறதைப் பொறுத்து மொத்தம் ரெண்டே மாடல்கள்தான். மரத்தாலான மணிகள்ல செய்யறது பார்வைக்கும் அழகு. சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. கொஞ்சம் விலை அதிகம். விலை மலிவா வேணும்னா பிளாஸ்டிக் மணிகள் போதும்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘காரை அழகுபடுத்தற பொருள்கள் விற்கற கடைகள்ல பேசி மொத்தமா ஆர்டர் எடுக்கலாம். அன்பளிப்பா கொடுக்கவும் ஏற்றது. முதலீடா போட்ட 3 ஆயிரம் ரூபாய்ல 7 குஷன் பண்ணலாம். ஒரு குஷனோட விலை 450 ரூபாய்லேருந்து 700 வரைக்கும். வெறும் 4 மணி நேரத்துல 1 குஷன் பின்னி முடிச்சிடலாம்.  கணிசமான லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?

‘‘ஒரே நாள் பயிற்சி... கட்டணம் 500 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்