சும்மா சாமியார்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   ‘சும்மா இருப்பது வெகு கஷ்டமான காரியம்’ என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. தங்கள் கருத்து நிரூபணத்துக்காக ஒரு குட்டிக் கதையும் சிலர் சொல்வார்கள்.ஒரு கோயிலில் சாமியார் ஒருத்தர் காலையிலிருந்து இரவு கோயில் நடை சாத்தும் வரை வெறுமே உட்கார்ந்திருப்பார். ஆள் நல்ல வாட்டசாட்டமாக இருப்பார். திடமான சாமியார் சும்மா உட்கார்ந்திருந்ததால் அவருக்கு ‘சும்மா சாமியார்’ என்று பெயர்.

புதிதாக வந்த கோயில் அர்ச்சகருக்கு ஒரு பிரச்னை. கோயில் பிரசாதமான ‘உண்டக் கட்டி’ எனப்படும் பட்டை சோற்றை இறைவனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு, கோயில் சிப்பந்திகளுக்குப் பிரித்துத் தருவது அங்கு வழக்கம். அங்கு பத்து பேர் வேலை செய்தனர்.

பழைய அர்ச்சகர் பதினொரு பட்டையாகத் தயார் செய்து, அந்தப் பதினொன்றாவதை சும்மா சாமியாருக்குத் தருவார். சிப்பந்திகளில் சிலருக்கு இந்த சாமியாரைப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கும் சேர்த்து உருண்டை பிடிப்பதால் தங்கள் பங்கில் சிறிது குறைகிறதே என்ற சுய நலமே காரணம்.

‘‘நாங்க வேலை செய்கிறோம், எங்களுக்குச் சோறு கொடுப்பது நியாயம். தடிக் கடா மாதிரி உட்கார்ந்து கிடக்கான் அவன். அந்த ஆளுக்கு ஏன் சோறு?’’ என்பது அவர்கள் கட்சி.
கோயில் தர்மகர்த்தாவின் காதுக்கு இது மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள் சீக்கிரம் எட்டிவிடும். அவரும் இது மாதிரி விஷயங்களை சீக்கிரம் விசாரித்து முடிவெடுத்து விடுவார். (எவன் வயிற்றிலாவது அடிப்பதைப் போன்ற வேலை அதிகாரிகளுக்கு அல்வா மாதிரி அல்லவா!)

வந்தார்; விசாரித்தார்; தானே விசாரணைக் கமிஷனரானார்.

‘‘‘என்ன சாமியாரே, என்ன வேலை செய்யறே..?’’

‘‘சும்மா இருக்கேன்’’ & இது சாமியார் பதில்.

‘‘சும்மாவா... அதெப்படி சும்மா இருக்கலாம்? ஏதாவது வேலை செய்யணும். சாப்பிடுகிறீர் இல்லையா?’’

‘‘சும்மா இருப்பதும் ஒரு வேலைதான். சொல்லப் போனால் முழுநேர வேலை, கஷ்டமான வேலை. சும்மா இருப்பதற்கு உடம்பு சும்மா இருந்தால் போதாது. மனசும் சும்மா இருக்க வேண்டும். மனசை சும்மா இருக்கச் செய்து பாருங்கள். அந்த சுகமே அலாதி. உங்களுக்கு ஐந்து வாசல்கள் இருக்கிறதில்லையா? மெய், வாய், கண், மூக்கு, செவி.’’

‘‘எதற்கு என்னைப் போட்டு அறுக்கிறீர்?’’

‘‘உங்கள் செவி சும்மா இருந்தால் உங்களுக்கு இப்படி எரிச்சல் ஏற்படாது.’’

‘‘புரியவில்லையே...’’

‘‘நான் கூறிய விஷயங்களை உங்கள் செவி கேட்காமல் சும்மா இருந்திருந்தால் நீங்கள் எரிச்சலடைய மாட்டீர்கள்.’’

‘‘காதிலே விழுதே... எப்படிய்யா நான் சும்மா இருப்பது?’’

‘‘காது இருந்தும் கேட்காமல், கண் இருந்தும் பார்க்காமல், நாசி இருந்தும் நுகராமல், வாய் இருந்தும் சுவைக்காமல், மேனி இருந்தும் உணர்வு இல்லாமல் சும்மா இருக்கப் பழகிக் கொண்டிருக்கிறேன். இதுவும் பெரிய உழைப்புதானே? ஐந்து குதிரைகளைப் பூட்டிய ரதத்தைச் செலுத்துவது போன்ற கடின உழைப்பைச் செய்து கொண்டிருக்கிறேன். நானா சும்மா இருக்கிறேன்?’’

கோயில் அதிகாரி ஆடிப் போய்விட்டார். பிறகு சமாளித்தார். ‘‘இப்படி நீ இருக்கிறதாலே உலகுக்கு என்ன பிரயோசனம்? நீ தண்டச்சோறுதான். மத்த பத்துப் பேரும் உழைக்கிறாங்க. நீ ஒருத்தன்தான் உழைக்காமல் தின்றே. நாளையிலிருந்து உனக்குப் பட்டை கிடையாது.’’

சும்மா சாமியார் சிரித்தார். ‘‘ஒரு சவால். உங்களால் என்னைப் போல ஒருநாள் பூரா சும்மா இருக்க முடியுமா? அப்படி இருக்க முடியுமானால் இதோ என் கழுத்திலுள்ள தங்க உருத்திராட்சத்தை கழற்றி உங்கள் கழுத்தில் போட்டு விடுகிறேன்...’’

அதிகாரி பிரமித்தார். சாமியார் கழுத்தில் பளபளவென தங்க உருத்திராட்சம்!

‘‘அடப்பாவி மனிதா! லட்ச ரூபாய் பெறுமே. இவ்வளவு சொத்து வைத்துக்கொண்டா பிச்சை சோறுக்கு இங்கே உட்கார்ந்திருக்கே?’’

‘‘கோடி ரூபாய் சொத்து நீங்கள் கொடுத்தாலும் என்னால் சும்மா இருக்க முடியும். இதை நீங்கள் அபகரித்துக் கொண்டாலும் சும்மா இருக்க முடியும். புரிகிறதா மகனே!’’
அதிகாரிக்கு வியர்த்தது. என்னென்னவோ புரிந்தது. ‘‘சாமி, அறியாமல் பேசின என்னை மன்னிச்சிடுங்க’’ என்றார்.

சட்டையைக் கழற்றினார். மேல் வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டார். சும்மா சாமியாரின் பக்கத்தில் இன்னொரு சும்மா சாமியாராக அமர்ந்துவிட்டார், பட்டினத்தார் அருகே பத்திரகிரியார் அமர்ந்த மாதிரி!
(சிந்திப்போம்)
பாக்கியம் ராமசாமி