கணவர்களுக்கான பள்ளி!



உலகிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களும், அடக்குமுறைகளும் அதிகமாக நடக்கும் நாடுகளில் ஒன்று, செனகல். குழந்தைத் திருமணமும் அதிகமாக நடக்கும் நாடும் இதுவே. திருமணத்துக்கு முன்பு பெண்கள் அனுபவிக்கும் பாலின ரீதியான துன்புறுத்தல்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 
இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், அடக்குமுறைகளையும் குறைத்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக செனகல் நாட்டில் கணவர்களுக்காக பிரத்யேகமாக ஒரு பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்தக் கணவர்களுக்கான பள்ளி நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதாகவும் சொல்கின்றனர். 

அதென்ன கணவர்களுக்கான பள்ளி?

செனகல் நாட்டின் பெண்கள், குடும்பம், பாலினம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகமும், ஐநா சபையும் இணைந்து, கடந்த 2011ம் வருடம் செனகலில் கணவர்களுக்கான பள்ளியை உருவாக்கியுள்ளது. செனகல் நாட்டில் காலம் காலமாக ஆண்கள் உருவாக்கி வைத்திருக்கும் கலாசாரத்தின் மீதான பார்வையை மாற்றியமைப்பதும், குடும்பத்தில் ஆண்களுக்கான பொறுப்பை அதிகரிப்பதும் இந்தப் பள்ளியின் முதன்மையான நோக்கம். 

அதாவது, மனைவி மட்டுமே செய்து வந்த வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதையும், எல்லா வகையிலும் மனைவிக்கு உறுதுணையாக இருப்பதையும், குடும்ப உறவை ஆரோக்கியமானதாக மாற்றுவதையும், குடும்ப வன்முறையைத் தவிர்ப்பதையும் இந்தப் பள்ளி கற்றுக்கொடுக்கிறது. இதுபோக குழந்தைத் திருமணத்தையும் தடுக்கிறது இந்தப் பள்ளி. திருமணத்துக்கு முன்பு பெண்கள் அனுபவிக்கும் பாலின ரீதியான துன்புறுத்தலையும், வன்முறையையும் முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளையும் இப்பள்ளி முன்னெடுத்து வருகின்றது.

செனகல் நாட்டின் குக்கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் பெண்களைக் கொடுமைப் படுத்தும் கணவர்களை அடையாளம் கண்டுகொண்டு, இந்தப் பள்ளிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்து, அவர்களுக்கான பாடத்தைக் கற்பிக்கின்றனர். சில கணவர்கள் பள்ளியை விட்டு ஓடிவிடுவதும், தலைமறைவாகும் சம்பவங்களும் நடக்கின்றன.

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் இருப்பதுபோல செனகலில் கணவர்களுக்கு இந்தப் பள்ளி இருப்பதாகச் சொல்கின்றனர். இதுவரையில் கணவர்களுக்கான பள்ளியில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் படித்துவிட்டு, தங்களின் குடும்பத்தினருடன் இணைந்துவிட்டனர். 

அவர்களின் குடும்ப வாழ்க்கை எப்படிச் செல்கிறது என்பதை கண்காணிப்பதையும் இந்தப் பள்ளி தொடர்ந்து செய்கிறது. செனகலைத் தொடர்ந்து மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் கணவர்களுக்கான பள்ளிகளைத் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. காரணம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் கண்டமே, ஆப்பிரிக்காதான்.

த.சக்திவேல்