துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டும் 72 வயது டிரைவர் அம்மா!
அட என வாயைப் பிளக்க வைக்கிறார் மணியம்மா.பின்னே... 72 வயதான இவர், துபாயில் அசால்ட்டாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வைரலானால் வியக்காமல் இருக்க முடியுமா?!
 வைரலாகும் வீடியோவின் படி, சேலை அணிந்து சொகுசு காரை ஓட்டுகிறார் அந்தப் பெண்மணி. தனது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை அந்த வீடியோவில் காண்பிக்கிறார். பின்னர் உயர் ரக வாகனத்தை அவர் இயக்குகிறார்.மணியம்மா என்றழைக்கப்படும் இவர், இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருவதால் இவருக்கு ஃபாலோயர்ஸ் அதிகம். இவரது இன்ஸ்டாகிராம் பயோவின் படி, சொகுசு கார்கள் முதல் கனக ரக வாகனங்கள் வரை குத்துமதிப்பாக 11 வகையான வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளார். டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருவதாகவும் அதில் தெரிவித்து இருக்கிறார். முன்பே சொன்னபடி இவரது வயது 72. ஆனால், ஓட்டுநர் அனுபவமோ 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. தசாப்தங்களாகத் தொடரும் இவரது டிரைவிங் ஆர்வம் உண்மையிலேயே மற்றவர்களுக்கு இன்ஸ்பையரிங் வைட்டமின்.ஏனெனில் இந்தியாவில் மிகக் குறைவாக பெண்கள் கார்கள் ஓட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் தனது திறன்களை வெளிப்படுத்தி வந்துள்ளார்.
யெஸ். 1978ம் ஆண்டு கேரளா, எர்ணாகுளத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்கிய தனது கணவரின் ஊக்கத்தால் இவரும் ஸ்டியரிங்கை பிடிக்கத் தொடங்கியுள்ளார்.
அப்படியாக கார்கள் மட்டுமல்லாமல் கிரேன்கள், கனரக வாகனங்களையும் இயக்க கற்றுக் கொண்டுள்ளார்.
கணவரின் மறைவிற்குப் பின்னர் மணியம்மா தனது குடும்பத்திற்காக ஓட்டுநர் பள்ளியின் பொறுப்பை, தானே ஏற்று அதனை வழி நடத்த ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பயணம் இன்றும் தொடர்கிறது!அம்மா... டிரைவர் அம்மா... அம்மம்மா!
என்.ஆனந்தி
|