Must Watch
பரிவார் குடும்ப உறவுகள் சார்ந்த படங்களை விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத ஒரு படம் , ‘பரிவார்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது இந்த மலையாளப் படம்.
மரணப் படுக்கையில் கிடக்கிறார் பாஸ்கர பிள்ளை. அவருக்கு வயது 99. தந்தை மீது உண்மையான அக்கறையுடன் அருகில் இருக்கிறான் பீமன். அவருக்குத் தந்தை மட்டுமே முக்கியம்.
பாஸ்கர பிள்ளையின் மற்ற இரண்டு மகன்களுக்கு தந்தையை விட, மற்ற விஷயங்கள்தான் முக்கியமானவை. பீமனின் தம்பியான ஜெகதீஷுக்கு தந்தையின் விரலில் இருக்கும் பழைய வைர மோதிரத்தின் மீதுதான் கண். அப்பா எப்போது இறப்பார், அந்த வைர மோதிரத்தை எப்படி தன்வசப்படுத்தலாம் என்பதிலேயே குறியாக இருக்கிறான் ஜெகதீஷ்.
பாஸ்கர பிள்ளையின் கடைசி மகனான நகுலனோ மனைவியின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். மனைவி சொல்லே மந்திரம் என இயங்கும் அவனுக்கு தந்தையைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
பாஸ்கர பிள்ளை மரணம் அடைந்தாரா? வைர மோதிரத்தை ஜெகதீஷ் அடைந்தானா? பீமனின் உண்மையான பாசம் என்னவாகிறது? மனைவி சொல்படி நடக்கும் நகுலனால் தந்தையைப் புரிந்து கொள்ள முடிந்ததா என்ற கேள்விகளுக்கு நெகிழ்வாகப் பதில் தருகிறது திரைக்கதை. உல்சவ் ராஜீவ் மற்றும் பஹத் நந்து இணைந்து படத்தை இயக்கியிருக்கின்றனர். டேக் கவர்
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளி வரும் ஆங்கிலப் படம் ‘ டேக் கவர்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. பணத்துக்காக கொலை செய்பவன் சாம். அவனது உதவியாளன் கென். உயர் இடத்தில் இருக்கும் ஒருவனை கொலை செய்ய வேண்டும் என்ற வேலை சாமுக்கு கொடுக்கப்படுகிறது.
கொலை செய்யப்பட வேண்டியவனுடன் காதலியும் இருக்கிறாள். அந்த நபரைக் கொல்வதற்காக குறி பார்க்கிறான் சாம். ஆனால், சுடும்போது காதலி குறுக்கே வர, குண்டு காதலியின் மீது பாய்ந்துவிடுகிறது. கொலை செய்யப்பட வேண்டியவன் தப்பித்துவிடுகிறான். சாமின் குறி தப்பியது இதுவே முதல் முறை.
சம்பந்தமே இல்லாத ஓர் அப்பாவிப் பெண்ணைக் கொன்று விட்டோம் என்ற குற்றவுணர்வுக்கு ஆளாகிறான் சாம். பணத்துக்காக கொலை செய்யும் வேலையை உதறுகிறான்.
ஆனால், சாமின் பாஸோ அவனிடம் ‘ஒரேயொரு வேலையை மட்டுமே செய்துவிட்டு, உன் விருப்பம் போல இருந்துகொள்’ என்கிறார். சாமின் கடைசி வேலை அவனது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்கிறது திரைக்கதை. இந்தப் படத்தின் இயக்குநர் நிக் மெக்கின்லெஸ்.
கிங்டம்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தெலுங்குப் படம் ‘கிங்டம்’. தமிழ் டப்பிங்கில் ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஓர் இடத்தில், 1920களில் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள் தங்கத்துக்காக பழங்குடிகளின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இதை தடுப்பதற்காக பழங்குடிகளும், அவர்களது தலைவனும் இணைந்து எதிர் தாக்குதல் நடத்துகின்றனர்.
பிரிட்டிஷ்காரர்களின் பலத்தின் முன்பு எதுவும் நடப்பதில்லை. பழங்குடிகளின் தலைவன் இறந்துபோகிறான். ஆனால், சிலர் உயிர்பிழைக்கின்றனர். அடுத்து கதை 1991க்கு நகர்கிறது. ஆக்ரோஷமான, அதே நேரத்தில் நேர்மையான கான்ஸ்டபிள் சூர்யா. குழந்தைப்பருவத்திலேயே தனது அண்ணன் சிவாவைப் பிரிந்து விடுகிறான் சூர்யா.
பிரிட்டிஷ்காரர்களின் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவர்களின் சந்ததிகள் இப்போது என்ன செய்கிறார்கள்? குழந்தைப் பருவத்திலேயே பிரிந்துபோன சிவா என்ன செய்கிறான்? சிவாவும் சூர்யாவும் இணைந்தார்களா? இந்தக் கதைக்குள் இலங்கை எப்படி உள்ளே வருகிறது என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது திரைக்கதை. இலங்கைத் தமிழர்களை கொச்சைப்படுத்தும் இந்தப் படத்தை கௌதம் தின்னனுரி இயக்கியிருக்கிறார்.
அபிகெய்ல்
ஒரு வித்தியாசமான திகிலும், நகைச்சுவையும் கலந்த படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது, ‘அபிகெய்ல்’ எனும் ஆங்கிலப்படம். இளம் பாலே டான்ஸர், அபிகெய்ல். லாம்பெர்ட் தலைமையில் ஆறு தேர்ந்த கிரிமினல்கள் சேர்ந்து அபிகெய்லைக் கடத்துகின்றனர். ஓர் இடத்தில் 24 மணி நேரத்துக்கு அபிகெய்லைப் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவு இடுகிறார் லாம்பெர்ட்.
அபிகெய்லின் அப்பா கொடுக்கும் பணயத்தொகையான 50 மில்லியன் டாலரை லாம்பெர்ட்டும், ஆறு கிரிமினல்களும் பிரித்துக்கொள்வதாக திட்டம். அதனால் அந்த ஆறு கிரிமினல்களும் தங்களின் அடையாளத்தை மறைத்து, புது அடையாளத்தை உருவாக்குகின்றனர். இந்த விஷயம் அபிகெய்லுக்குத் தெரிய வருகிறது.
‘என்னோட அப்பாவுக்கு என்னைப் பற்றி எந்த கவலையும் இல்லை. அதனால் நீங்கள் கேட்கும் பணத்தை அவர் கொடுக்க மாட்டார்’ என்கிறாள் அபிகெய்ல். கடத்தல்காரர்களில் ஒருவன் அபிகெய்லிடம் வன்முறையாக நடந்து கொள்கிறான்.
அபிகெய்லின் தந்தை ஒரு பெரிய டான் என்று தெரிய வர, சூடுபிடிக்கிறது திரைக்கதை. விறுவிறுப்பாகச் செல்லும் இப்படத்தை மேட் பெட்டிநெல்லி ஆல்பினும், டைலர் கில்லட்டும் இணைந்து இயக்கியிருக்கின்றனர்.
தொகுப்பு:த.சக்திவேல்
|