சிறுகதை - மீண்டும் வசந்தம்
மாப்பிள்ளை வீட்டார், ரேவதியை பெண் பார்க்க வருவதாக தகவல் அனுப்பியபோதுதான், அந்த பிரச்னை விசுவரூபம் எடுத்தது.“பெண்ணோட அப்பாவ எங்கக் காணோம்...’’ என அவர்கள் கேட்டால் என்ன பதில் சொல்வது? இறந்திருந்தால், இறந்து விட்டார் என்று சொல்லிவிட்டு போய் விடலாம். உயிரோடு இருக்கும் ஒருவர், குடும்பத்தினருடன் சேராமல் தனியே பிரிந்து வாழ்கிறார் என்றால், அதை எப்படி அவர்களிடம் சொல்ல முடியும்?
 எப்படி இதை சரி செய்வது? எங்களோடு வந்து இருங்கள் என அழைத்தால் அவர் ஒப்புக் கொள்வாரா?
கல்யாணமான நாளிலிருந்து அம்மாவிற்கும், அவருக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள். எப்போது பார்த்தாலும் கசாமுசாவென சண்டை. வீடே போர்க்களமாகக் காட்சி அளிக்கும். நடுவில் நானும், ரேவதியும் அகப்பட்டுக் கொண்டு ஒவ்வொரு நாளும் நிம்மதி இழந்து நின்றதுதான் மிச்சம்.
இதற்கு நடுவில்தான் எங்கள் படிப்பு, வளர்ச்சி, வேலைக்குப் போனது எல்லாமே. நானும் ரேவதியும் நன்றாகப் படிப்போம். ஸ்கூலிலும் சரி, காலேஜிலும் சரி முதல் மாணவன், மாணவியாகத் தான் மார்க் எடுப்போம். அப்பா பிரிந்து சென்றதற்குப் பிறகு, அம்மா எங்களை விடாமல் படிக்க வைத்துவிட்டாள்.
நான் ஒரு ஐடி கம்பெனியில் சாஃப்ட்வேர் இஞ்சினியராகவும், ரேவதி ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் அசிஸ்டன்ட் மேனேஜராகவும் வேலை பார்க்கிறோம்.இரண்டு பேரும் சம்பாதிக்க ஆரம்பித்தபின் பொருளாதார நெருக்கடி இல்லை. நாங்கள் இருக்கும் இந்த வீடு, அப்பா அவர் சம்பாத்தியத்தில் வாங்கியது.
அம்மாவிற்கும் அவருக்கும் பிரச்னை முற்றிய போது, நல்ல வேளை அம்மாவை “வெளியே போ’’ என்று சொல்லவில்லை. அவராக வெளியேறி விட்டார். அதனால், எப்போதும் வாடகை பிரச்னை இருந்ததில்லை.
அம்மாதான் அவ்வப்போது கோபத்தில் “இல்ல, நா இந்த வீட்டுல இருக்க மாட்டேன்...’’ என பெட்டியைத் தூக்கிக்கொண்டு கிளம்புவாள். நானும் ரேவதியும் “எங்க ரெண்டு பேரோட லைஃபையும் கொஞ்சம் நினைச்சு பாருங்கம்மா...’’ என அவளை சமாதானப்படுத்துவோம்.
நான், என்னுடன் வேலைபார்க்கும் கீதாவை காதலிக்கிறேன். கீதாவிடம் எல்லா விஷயத்தையும் சொல்லியிருக்கிறேன். சொல்லப்போனால், நான் மனம் கலங்கி நிற்கும்போதெல்லாம், எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவளது வார்த்தைகள்தான். “டோன்ட் வொர்ரி அருண்... எந்தவொரு பிரச்னையும் அப்படியே நீடிச்சு நிக்கப் போறது இல்ல. ஒருநாள் அதுவா மாறும். என்ன, அதுவரைக்கும் நாம வெய்ட் பண்ணணும். அவ்வளவுதான். உங்கப்பாவும் அம்மாவும் ஒண்ணு சேருவாங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு...’’ என்று கூறி, என்னை தோளில் சாய்த்துக்கொண்டு தலையை வருடிக் கொடுப்பாள். இப்படி ஒரு காதலி அமைய நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்? மற்றபடி சினிமா பார்ப்பது, ரெஸ்ட்டாரென்ட் போவது, பார்ட்டி செலிபிரேட் பண்ணுவது இது எதிலும் அவளுக்கு ஈடுபாடு இல்லை.
எப்போதாவது “கோயிலுக்குப் போகலாமா அருண்?’’ எனக்கேட்பாள். பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயிலுக்கு சேர்ந்து போவோம். அது எங்களுடைய ஃபேவரைட் கோயில்.
முதன் முதலில் அங்கு வைத்துதான் இருவரும் எங்கள் காதலை பகிர்ந்து கொண்டோம். சினிமாவில் மணி அடிப்பது போல் அப்போது நிஜத்திலும் மணி அடித்தது. அதை நல்ல சகுனமாக எடுத்துக்கொண்டோம்.
இன்று வரை எங்களுக்குள் எந்தவிதமான மிஸ்அண்டர்ஸ்டேண்டிங்கும் வந்ததில்லை. சரி, ரேவதி விஷயத்திற்கு வருவோம். அவளுக்கும் இருபத்தி நாலு வயது முடியப்போகிறது. இதுதான் கல்யாணம் செய்து கொள்வதற்கான சரியான வயது. அம்மாவிடம் பேசி முடிவெடுத்த பின், அவளிடம் “யாரையாவுது லவ் பண்றியா..?’’ எனக் கேட்டேன். “இல்லடா...’’ என்றாள்.
“நிச்சயமா..?’’“ஏன்... அதுல என்ன சந்தேகம்..?’’
“இல்ல... உனக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு நானும் அம்மாவும் முடிவு பண்ணிருக்கோம்... அதான்...’’“அப்படியா..? நம்பிக்கையோட மாப்பிள்ளை பாரு. அந்த மாதிரியெல்லாம் எதுவும் கிடையாது...’’அதன்பிறகுதான் மேட்ரிமோனியலில் ரெஜிஸ்டர் செய்து வைத்தேன். இரண்டு மூன்று மாப்பிள்ளைகள் பார்த்ததில் மடிப்பாக்கத்தைச் சேர்ந்த கௌரவ் சரி வருவது போல் தெரிந்தது. நல்ல குடும்பம். நல்ல வேலை. ஆளும் பார்ப்பதற்கு ஜெயம் ரவி போல் இருந்தான். ரேவதிக்கும் அவனைப் பிடித்திருந்தது.
என்ன... கொஞ்சம் ஆச்சாரமான ஃபேமிலியாகத் தெரிந்தார்கள். முக்கியமாக கௌரவ்வின் பாட்டி. வார்த்தைக்கு வார்த்தை குடும்ப கவுரவத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்தாள். முதல் சந்திப்பின்போதே, அப்பாவின் பேச்சு எழுந்தது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த சம்பந்தம் தட்டிப் போய் விடக்கூடாது என்பதற்காக “அப்பா ஆபீஸ் வேலையா வெளியூர் போயிருக்கார்...’’ என பொய் சொல்லி சமாளித்தேன்.
வீட்டிற்கு வந்ததும் ரேவதி “என்னடா இப்படி ஒரு பொய்ய சொல்லிட்ட...’’ என அதிர்ந்து கேட்டாள். அம்மா அமைதியாக இருந்தாள்.“அப்பாகிட்ட நா பேசுறேன்... நா பேசி அவரை நிச்சயதார்த்தத்துக்கு கூட்டிட்டு வரேன்...’’“அவர் வருவார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை...’’ அம்மா சொன்னாள்.
“அவர் ஒண்ணும் உங்கள டைவர்ஸ் பண்ணிடலையே... புடிக்காம வீட்டை விட்டுதான வெளியேறியிருக்கார். ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. நா பேசி கூட்டிகிட்டு வரேன்.
அதுல உங்களுக்கு எதுவும் அப்ஜக்ஷன் இல்லையே..?’’
அம்மா அமைதியாக இருந்தாள். அதன் அர்த்தம் அவளுக்கு சம்மதம் என்பதுதான். பாதி தவறுக்கு அவளும் காரணமாக இருந்திருக்கிறாள்.கீதாவிடம் அந்த விஷயத்தை சொன்ன போது “சூப்பர்ய்யா...’’ என்றாள்.“வீட்டுலயும், மாப்பிள்ளை வீட்டுலயும் தைரியமா பேசிட்டேன்... ஆனா, அவரை எப்படி சந்திச்சு பேசுறதுன்னுதான் தைரியம் வரமாட்டேங்குது. கோபமும் இருக்கத்தான் செய்யுது. எட்டு வருஷத்துக்கு முன்னால எங்கள அப்படியே நிராதரவா விட்டுட்டுப் போனவர் இல்லையா... பொண்டாட்டி பிள்ளைகள விட்டுட்டு போய் இப்படி தனியா வாழ்றது என்ன ஒரு வாழ்க்கை..?’’
“முதல்ல உன்னோட கோபத்தை விடு. அப்பதான் அவர்கிட்ட நிதானமா பேச முடியும். நம்ம நோக்கம் ரேவதி கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அதை மட்டும் மனசுல வச்சுகிட்டு பேசு...’’“ம் சரி...’’என்ன பேசலாம், எப்படி பேசலாம் என்பதை இரண்டு மூன்று முறை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டேன். எதற்கும் தயாராக, ஒரு நாள் அவரது நம்பருக்கு போன் பண்ணினேன்.
முழு ரிங் அடித்து கட் ஆனது. பார்த்திருப்பாரா? அல்லது சைலன்ட் மோடில் போட்டிருப்பாரா? அல்லது பார்த்தும் பாராதது போல் இருக்கிறாரா? இப்போது என்ன செய்வது? இன்னொரு தடவை ரிங் பண்ணிப்பார்க்கலாமா? கீதாவிடம் ஆலோசனை கேட்டேன்.
அவள் “ஒண்ணும் தப்பு இல்ல... இன்னொரு தடவை ட்ரை பண்ணிப்பாரு...’’ என்றாள்.மீண்டும் ஒரு தடவை ரிங் பண்ணினேன். மீண்டும் முழு ரிங் அடித்து கட் ஆனது. கீதா, “இதுக்கு மேல ட்ரை பண்ணாத... அவருக்கு கொஞ்சம் அவகாசம் கொடு. எட்டு வருஷத்துக்கு அப்புறம் பையன் போன் பண்ணியிருக்கான்னா என்ன காரணமா இருக்கும்ன்னு அவர் யோசிக்கட்டும். யோசிச்சுட்டு லைன்ல வரட்டும். அதுவரைக்கும் நாம வெய்ட் பண்ணலாம்...’’காத்திருக்க ஆரம்பித்தேன். ஒரு நாள், இரண்டு நாள் என்று ஒரு வாரம் கடந்து விட்டது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்தேன். கீதாதான் எனக்கு தைரியம் சொல்லி நம்பிக்கை வரவழைத்தாள்.
“இது ஒருவகையான சைக்காலஜி அருண்... பட்டுப்போன செடில, ஒரு துளி நீர் பட்டா எப்படி சட்டுன்னு துளிர்த்துக்குமோ அதுமாதிரிதான். உங்க மேல அவருக்கு உண்மையான பாசம் இருந்தா உன்னோட இந்த போன் அவர் மனசை எப்படியும் அசைக்கும்.
ஒருவேளை நா நினைக்குற மாதிரி நடக்கலன்னா, ஒண்ணும் கெட்டுப் போயிடாது... மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள எப்படி சமாளிக்குறதுன்னு யோசிப்போம். எல்லா பிரச்னைக்கும் இங்க தீர்வு உண்டு. அதை நாம தேடிக் கண்டுபுடிக்கணும். அவ்வளவுதான்...’’நான் கீதாவின் கைகளைப் பற்றிக் கொண்டேன். அந்த வார இறுதியில், அதாவது, ஞாயிற்றுக்கிழமை காலை அப்பாவிடமிருந்து போன் வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. கீதா ஒரு தீர்க்கதரிசி. போனை பாய்ந்து எடுத்தேன். “சொல்லு...’’ என்றார் அப்பா. குரல் கரகரத்திருந்தது.
“உங்கள பாக்கணும்...’’“எதுக்கு..?’’ “நேர்ல பேசலாமா...’’ சற்று நேரம் அமைதியாக இருந்தார். “சரி... சாய்ந்தரம் அஞ்சு மணிக்கு லைட் ஹவுஸ்கிட்ட வா. நா இருப்பேன்...’’“சரிப்பா...’’அவர் போனை வைத்ததும் கீதாவை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். “எனக்குத் தெரியும் அருண்... அவர் எப்படியும் கூப்பிடுவார்னு. சொந்த ரத்தமாச்சே...’’ என்றாள். மாலை ஐந்து மணி.நான் என்னுடைய காரில் போய் இறங்கினேன். அவர் அவருடைய கார் அருகே நின்று கொண்டிருந்தார்.
கொஞ்சம் வயதாகி இருந்தது. தொப்பை கரைந்திருந்தது. புதிதாக கண்ணாடி அணிந்திருந்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டவராக கையை உயர்த்தி தனது இருப்பை வெளிப்படுத்தினார். நானும் பதிலுக்கு கையை அசைத்துவிட்டு அவர் அருகில் சென்றேன்.
“எப்பப்பா வந்திங்க..?’’ “இப்பதான்... டூ மினிட்ஸ் ஆகுது...’’ “தாங்க்ஸ்ப்பா...’’ “எதுக்கு..?’’ “அவாய்ட் பண்ணாம வந்திங்களே...’’ “விஷயத்த சொல்லு...’’ “ரேவதிக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கோம்...’’ அவர் அமைதியாக இருந்தார்.
அவருக்கு ரேவதியை நிரம்ப பிடிக்கும். இரவு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும், அவளை எழுப்பி அவளுடன் இரண்டு வார்த்தை பேசிவிட்டுத் தான் படுக்கச் செல்வார். “என்னப்பா யோசிக்குறீங்க..?’’“இல்லப்பா... என்னால வர முடியாது...’’“எங்கள விட உங்களுக்கு உங்க ஈகோதான் பெருசா இருக்கு... இல்ல..?’’“ஏன், நீ வந்து பேசுறியே... இதே விஷயத்த உங்க அம்மா வந்து பேசியிருக்கலாம் இல்ல..? அவ ஈகோயிஸ்ட்டா இருக்கும் போது நா இருக்குறதுல என்ன தப்பு..?’’“உங்க பிரச்னை அதுதானா... ஒரு நிமிஷம் இருங்க...’’ என்று கூறி, என்னுடைய கார் அருகே சென்றேன். பின் கதவைத் திறந்து “வாங்கம்மா...’’ என்றேன். காரிலிருந்து அம்மா வெளியே வந்தாள்.
இதை அப்பா எதிர்பார்க்க வில்லை. அவரைச் சமாதானப்படுத்த நினைத்த நான், அம்மாவை எப்படி சமாதானப்படுத்தாமல் இருந்திருப்பேன்? அப்பா அந்தக்காட்சியை நம்ப முடியாமல் பார்த்தார். அவர் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டது. அம்மா தயங்கித்தயங்கி அவர் முன்னால் வந்து நின்றாள். “ஸாரிங்க...’’ என்றாள்.“பரவாயில்ல விடு... இந்த எட்டு வருஷ பிரிவு, எனக்கும் நல்ல அனுபவத்த குடுத்துருச்சு. எவ்வளவு பிரச்னை வந்தாலும் ஒரு குடும்பமா இருக்குறதுதான் அழகு... அதுதான் நிம்மதி... அதுதான் மகிழ்ச்சி. இதை நா நல்லாபுரிஞ்சுகிட்டேன்.
உங்கள விட்டு பிரிஞ்சுதான் இருந்தேனே தவிர, உங்கள நினைக்காம இருந்ததில்ல... இது ரேவதி தவழ்ந்த கை... அவளோட அந்த வாசம் இன்னும் அப்படியேதான் இருக்கு. என்ன... நாம ரெண்டு பேரும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துருக்கலாம். விட்டுக் கொடுத்துப் போயிருந்துருக்கலாம்.
தேவையில்லாத ஈகோ எட்டு வருஷத்த காலி பண்ணிடுச்சு. மறுபடியும் நாம பிறந்து, கல்யாணம் பண்ணிகிட்டு, இப்படி ஒரு குழந்தைகள பெத்துக்கப் போறதில்ல. ஆண்டவன் குடுத்தது ஒரே ஒரு பிறவிதானே... அதை ஆண்டு அனுபவிக்காம, எவ்வளவு பெரிய தப்பு பண்ணிருக்கோம்... ஸாரி வத்சலா...’’அவரது கண்களில் நீர் வழிந்தது. அம்மாவின் கண்களிலும் நீர் எட்டிப்பார்த்தது. நான் செய்வதறியாது திகைத்து நின்றேன். எல்லோருடைய மனங்களிலும் அன்பு நிறைந்துதான் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போகும் போதுதான், இப்படிப்பட்ட பிரிவுகள் நிகழ்ந்து விடுகின்றன. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்கிற வழியை காலம் நமக்கு அளிக்கிறது. அதுதான், இப்போது அப்பா அம்மா இருவருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
“வீட்டுக்குப் போகலாமாப்பா...’’ “என் பொண்டாட்டி கூப்பிடலையே...’’ “வாங்க... அது எப்பவும் உங்க வீடுதான்...’’ இருவரும் கைகோர்த்துக் கொண்டார்கள். அம்மா, அப்பா காரில் ஏறிக் கொண்டாள். பாருடா... நான் எனது காரை எடுத்தேன். மனதுக்குள் கீதா கண்சிமிட்டினாள்.
- இயக்குநர் மணிபாரதி
|