அயலி... அன்னம்... ஆட்டி!



‘அயலி’ வெப் சீரிஸ் வழியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபி நட்சத்திரா. சிரித்த கலையான முகம், வளமான நடிப்பாற்றல் இவருடைய பலம் என்பதால் கோலிவுட் இயக்குநர்களின் குட்புக்கில் இடம் பிடித்துள்ளார். இப்போது இயக்குநர் இசக்கி கார்வண்ணன் நடிக்கும் ‘ஆட்டி’யில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்னம்’ தொடரிலும் இவர்தான் நாயகி. 

அபிநட்சத்திரா - எப்படி சினிமா நட்சத்திரமாக மாறினார்? நடிகையாக வரவேண்டும் என்பதுதான் உங்கள் கனவாக இருந்ததா?அடிப்படையில் நான் டான்சர். மூணு வயசுலேர்ந்து பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ் கத்துக்கிட்டு வரேன். 
பல மேடைகளில் நிகழ்ச்சிகள் செய்யும்போது விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஆறு வயதிலேயே விளம்பரங்களில் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். அதிலிருந்து சினிமா வாய்ப்பு கிடைச்சது. முதல் சினிமா ‘ரஜினி முருகன்’. எல்லா வாய்ப்புக்கும் காரணம் டான்ஸ். 

முதன் முதலாக கேமரா முன் நின்ற அனுபவம் ஞாபகமிருக்கா? 

முதன்முதலாக ‘ரஜினி முருகன்‘ படத்துக்காகத்தான் கேமராமுன் நின்றேன். அப்போது சின்னக் குழந்தை என்பதால் பயம் என்பது துளியுமில்லை. ஆர்வம்தான் அதிகமாக இருந்துச்சு. என்னுடைய ஆக்டிங் எப்படி இருக்கும் என்ற க்யூரியாசிட்டியால் அடிக்கடி மானிட்டர்போய் பார்த்ததாக ஞாபகம்.‘அயலி’ - பெண் கல்வியை வலியுறுத்திய ஒரு வெப் சீரிஸ். அதுபோன்ற அழுத்தமான கதையில் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

‘அயலி’ எனக்கு கிடைச்ச வரப்பிரசாதம். அந்த அனுபவம் வித்தியாசமானது. அதில் டல் மேக்கப்ல நடிச்சேன். எல்லாமே ஒரிஜினல். மேக்கப் கிடையாது. ஸ்கின் கருப்பா தெரியணும் என்பதற்காக தினமும் இரண்டு மணி நேரம் வெயிலில் இருப்பேன். 

உடல் பருமன் ஆனேன். அது மறக்க முடியாத அனுபவம். முதலில் வேற கேரக்டருக்கு ஆடிஷன் செய்தார்கள். ஃபோட்டோ ஷூட் எடுக்கும்போதுதான் தமிழ்ச்செல்வி கேரக்டர் பண்ணப்போகிறேன் என்று தெரிய வந்துச்சு. 

என் மீது நம்பிக்கை வெச்சு இயக்குநர் முத்துக்குமார் அந்த வாய்ப்பை கொடுத்தார். அப்படியொரு அழுத்தமான கேரக்டரில் என்னால் நடிக்கமுடியும் என்று பெற்றோரும் சப்போர்ட் பண்ணினார்கள். ‘அயலி’ எனக்கு சினிமாவில் பெரிய திருப்புமுனையைக் கொடுத்துச்சு.‘அயலி’ அபி நட்சத்திரா என்ற அடையாளத்தை எப்படி பார்க்கிறீங்க? அந்த அடையாளத்தை உடைக்க விரும்புகிறீங்களா?

‘அயலி’ சமூகத்தில் நிறைய மாற்றத்தைக் கொடுத்துச்சு. ரிலீ ஸுக்குப் பிறகு நிறைய இடங்களுக்கு பயணம் செய்தோம். கள்ளக்குறிச்சி பக்கம் போனபோது அங்குள்ள மலைவாழ் பெண்களில் பதிமூணு, பதினாலு வயசு உள்ளவங்களுக்கு குழந்தை திருமணம் நடந்து, அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதையும் பார்த்தோம். குழந்தைத் திருமணம் குறித்து அங்குள்ள பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தோம். 

அது பெரியளவுக்கு ஒர்க் அவுட்டாச்சு. நிறையப்பேர் விழிப்புணர்வு அடைஞ்சதோடு, கல்வியின் முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கிட்டாங்க. அந்த வகையில் ‘அயலி’ என்ற அடையாளம் எப்போதும் எனக்கு நிலைச்சு நிக்கிற அடையாளமாகவே பார்க்கிறேன். 

அதை உடைக்கணும் என்ற எண்ணம் இதுவரை வந்ததில்லை. அந்த அடையாளம்தான் என்னை சினிமாவில் மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கையிருக்கு. ‘அயலி’ அடையாளம் எனக்கு கிஃப்ட்.

‘அன்னம்’ தொடர் அனுபவம்..?

சன் தொலைக்காட்சியிலிருந்து வந்த  அழைப்பு அது. ‘அன்னம்’ டீம்ல உள்ளவங்க குடும்பம் மாதிரி.  கோபிசெட்டிப்பாளையத்துல படப்பிடிப்பு. மாசத்துல பாதி நாள் ஷூட்டிங்  நடக்கும். 
‘அன்னம்’ எல்லோருக்கும் பிடிச்ச  சீரியல்.  

தொலைக்காட்சி தொடர்களில் பெரியளவில் ஹிட்டடிச்சிருக்கு. தொடர்ந்து  ஹிட்டடிக்கும்னு நம்பிக்கை இருக்கு. அந்தளவுக்கு ஆழமான,  அழுத்தமான... எல்லா பெண்களாலும் கனெக்ட் செய்துக்கற மாதிரியான கதை.  ரசிகர்கள் பெரியளவில் சப்போர்ட் பண்ணுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய  நன்றி.  

‘ஆட்டி’ படத்தில் உங்கள் கேரக்டர் பற்றி சொல்லுங்களேன்?

‘அயலி’, ‘பீனிக்ஸ்’ படங்களுக்குப் பிறகு என்னுடைய எதிர்பார்ப்புக்குரிய படம் ‘ஆட்டி’. கதையின் நாயகியாக பண்ணியிருக்கிறேன். இந்தப் படத்திலும் என்னுடைய ரோல் வித்தியாசமாக இருக்கும். 

எழுபதுகளில் நடக்கும் கதை. கல்வி, பெண்கள் சார்ந்த பிரச்னைகளைப் பேசும் படமாக இருக்கும். ‘மேதகு’ படத்தை இயக்கிய கிட்டு இயக்கியுள்ளார். இசக்கி கார்வண்ணன் சார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். எல்லோரையும் கவனிக்க வைக்கும் படமாக இருக்கும். 

உங்கள் அப்பா இயக்குநர் என்று கேள்விப்பட்டோம். அப்பா இயக்கத்தில் நடிக்க விருப்பமா?

அப்பா பேர் மணி. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரிடம் இணை இயக்குநராக வேலை செய்தவர். அப்பாவுக்கு சினிமா மீதுள்ள காதல்தான் என்னையும் சினிமாவுக்குள் கொண்டு வந்திருக்குன்னு நினைக்கிறேன். 

அம்மா, தம்பி எல்லோருக்கும் சினிமா பிடிக்கும். அப்பா ரெண்டு, மூணு கதை வெச்சிருக்கிறார்னு தெரியும். கதை சொல்லும்படி கேட்டிருக்கிறேன். அதற்கான நேரம், வாய்ப்பு வரும்போது அப்பா இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

சின்னத்திரை, பெரிய திரை என்ற பாகுபாடு இப்போது சினிமாவில் இருப்பதாக  நினைக்கிறீர்களா?

டிவி, சினிமா என்ற வேறுபாடு இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. அதேசமயம் அது என்னை பாதிக்கவும் செய்யவில்லை. என்னுடைய சீரியல் ஒளிபரப்பான பிறகும் ரெண்டு, மூணு படங்களில் கமிட்டானேன். சீரியல் கமிட்டாகும்போது வேறுபாடு பற்றி யோசிக்கவில்லை. 

என்னைப் பொறுத்தவரை என்னைத் தேடி வரும் வாய்ப்பு சீரியலாக இருந்தாலும், சினிமாவாக இருந்தாலும் எவ்வளவு சிறப்பாகப் பண்ணமுடியுமோ அவ்வளவு பண்ணணும் என்ற எண்ணம்தான் இருக்கும். சமீபத்துல சீரியலில் ஹிட் கொடுத்தவங்க இப்போதும் சினமாவுல முன்னணி இடத்துல இருக்காங்க. அதனால் வேறுபாடு இல்லை என்பது என்னுடைய கருத்து.  

ரொம்ப வருஷமா சினிமாவுல இருக்கீங்க. சினிமாவில் நடிக்க வரும் பெண்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

சினிமாவில் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அவர்களுக்கு பிடிச்ச விஷயத்தைச் செய்ய அனுமதிக்கணும். லட்சியத்துல கவனமாக இருக்கணும். சுற்றி இருக்கிற நண்பர்கள், குடும்ப உறவுகள் என யாரோ ஒருத்தர் எதாவது சொல்வாங்க. அதையெல்லாம் கவனத்துக்கு கொண்டுபோனால் முன்னேற முடியாது. சிலர் முதுகுக்குப் பின்னாடி பேசுவாங்க. 

அதை கண்டுக்கக் கூடாது. ஏனெனில் அவர்களால் முதுகுக்குப் பின்னால் மட்டுமே பேச முடியும். முகத்துக்கு நேராக பேசுவதற்கு தைரியமில்லாதவர்கள். அதனால் அவர்களை ஓரங்கட்டிவிட்டு  நம்முடைய வேலையில் கவனம் செலுத்தணும். ஜெயித்தபிறகு அவர்களைக் கண்டுக்கவில்லை என்று பேசுவார்கள். 

யார் நம்மிடம் அன்பு காட்டினாலும் அன்பு காட்டலாம். யார் நம்மிடம் வெறுப்பைக் காட்டுகிறார்களோ அவர்களிடம் வெறுப்பு காட்டலாம். எல்லாத்தையும் கண்ணாடி பிரதி
பலிப்பதைப்போல் கடந்துவிட வேண்டும். நாம அன்னை தெரசா கிடையாது. நம்மிடம் யார் அன்பாக நடக்கிறார்களோ அவர்களிடம் அன்பு காட்டினால் போதும். 

சிலர் பொறாமையால் எதாவது சொல்வாங்க. அப்படிப்பட்டவர்களிடம் பேசி, ஜெயிக்க முடியாது. அப்படி, யாரையும் கண்டுக்காமல் நம் வழியில் பயணம் செய்தாலே ஜெயிக்கலாம். 
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவு காட்டணும். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் பெற்றோர் மட்டுமே காரணம். பதினைஞ்சு வருஷம் கஷ்டப்பட்டு என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளார்கள். இப்போது நாங்கள் நல்லா இருக்கிறோம். 

பெண்கள் எல்லா சூழ்நிலைகளையும் அழுத்தமாக எதிர்கொண்டு ஜெயிச்சு மேலே வரணும். ஏனெனில் வாழ்க்கையில் தடைகள் வரும். அதைத்தாண்டி ஜெயிப்பதுதான் எதிர்க்கிறவர் களுக்கான பதிலடி. நெகட்டிவ் கமெண்ட்ஸ் யார் சொன்னாலும் அதை அவாய்ட் பண்ணிடுங்க. உங்களுக்குப் பிடிச்ச விஷயத்தை மட்டும் செய்யுங்க. கடின உழைப்பு இருந்தால் வெற்றி உறுதி.

எந்த மாதிரி வேடங்களில் நடிக்க ஆர்வமா இருக்கீங்க?ஹீரோயினாக மட்டுமே நடிக்கணும் என்ற எண்ணம் இப்போது வரை இல்லை. கதைக்கு வலுசேர்க்கக்கூடிய அழுத்தமான வேடங்கள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், யூனிக் ரோல்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

எஸ்.ராஜா