18,755 கிமீ... 21 நாட்கள்... 13 நாடுகள்... உலகின் மிக நீண்ட இரயில் பயணம்!



நீங்கள் இரயில் பயணக் காதலர் என்றால் தவறவிடக்கூடாத ஒரு பயணம் இது. உலகின் மிக நீண்ட இரயில் பயணம், ஆச்சர்யமான பயணம், பாதி உலகைச் சுற்றி வரும் பயணம் என்று இந்த இரயில் பயணத்தைப் புகழ்கின்றனர். போர்ச்சுக்கல்லில் இருக்கும் லாகோஸ் நகரிலிருந்து ஆரம்பிக்கிறது, இந்தப் பயணம். ஸ்பெயின், ஃபிரான்ஸ், ரஷ்யா, சீனா, வியட்நாம், தாய்லாந்து வழியாகச் சென்று சிங்கப்பூரைச் சென்றடைகிறது. 

இந்தப் பயணத்தின் போது பாரீஸ், மாஸ்கோ, பெய்ஜிங், பாங்காக் என உலகின் முக்கிய நகரங்களில் எல்லாம் நீண்ட நேரம் இரயில் நிற்கும். நீங்கள் நகரத்தைச் சுற்றிப்பார்த்து வரலாம். 
இதுபோக சில இரவுகளில் முழுமையாக ஒரே ஸ்டேஷனில் இரயில் நிற்கும். இரயில் எங்கே நிற்கிறதோ அந்த இடத்தின் கலாசாரத்தை, மக்களை, உணவுகளை அறிந்துகொள்வதற்காக இந்த ஏற்பாடு. இந்தப் பயணத்துக்கான குறைந்தபட்ச செலவு, 1.20 லட்ச ரூபாய். பாஸ்போர்ட் மற்றும் இரயில் கடக்கும் நாடுகளுடைய ஏழு விதமான விசாக்கள் இருந்தால் மட்டுமே இதில் பயணிக்க அனுமதி கிடைக்கும். 

பூமியின் மேற்கு மற்றும் கிழக்கில் உள்ள பகுதிகளை, அதாவது பூமியின் பாதியளவை இந்தப் பயணத்தின் போது கடந்து செல்வீர்கள். இந்த ஆச்சர்யமான பயணத்தின் தூரம், 11,654 மைல்கள். 

அதாவது, 18,755 கிலோமீட்டர்கள். 21 நாட்கள் நீளும் இந்தப் பயணத்தில் 13 நாடுகளைப் பார்த்துவிடலாம்.கனெக்‌ட் விமானங்களைப் போல, கனெக்ட் இரயில்கள் மூலம் போர்ச்சுக்கல்லிலிருந்து சிங்கப்பூர் சென்றடைய முடியும். அதனால் பத்துக்கும் மேற்பட்ட இரயில்களில் பயணிக்க வேண்டியிருக்கும். 

சில இடங்களில் நீண்ட தூரம் பேருந்தில் சென்று, இரயிலைப் பிடிக்க வேண்டியிருக்கும். இதற்காக பிரத்யேகமாக பேருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். இப்போது இந்த இரயில் பயணத்தின் போது கடக்கும் நாடுகளில் அரசியல் பிரச்னைகள் நிலவுவதால், தற்காலிகமாக இந்தப் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த நீண்ட இரயில் பயணம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

த.சக்திவேல்