மானியம் வழங்குது ஒன்றிய அரசு...கல்லா கட்டுது தனியார் நிறுவனம்...



ஒருவர், தான் வைத்திருக்கும் கருத்தை மாற்றவேண்டும் என்றால் அது லேசுப்பட்ட காரியம்தான். ஆனால், இருவர் ஒரு கருத்தை ஒப்புக்கொள்வதோ, அல்லது மாற்றுவதோ லேசுப்பட்ட காரியமல்ல.
இப்படி இருவர் இணைந்து ஒரு கருத்தை ஒப்புக்கொள்வது கடினம் என்றால் 1400 பேர் கூடினால் என்னாகும்?கடந்தவாரம் குளுகுளு சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் கூடிய இந்த 1400 பேரும் இருதரப்பாக நின்று ஒரு கருத்துக்கு எதிரும் புதிருமாக விளக்கம் சொன்னதுதான் இன்று டாக் ஆஃப் த வேர்ல்ட். 

என்ன விஷயம்?

நெகிழி எனும் ப்ளாஸ்டிக் உலகம் முழுவதும் ஒரு வெறுப்புப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் ப்ளாஸ்டிக் அரிசி என்றெல்லாம் இந்த நெகிழி பயம் காட்டுகிறது. ப்ளாஸ்டிக்கை ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபையும், பாரிஸ் ஒப்பந்தமும் ஒருகாலத்தில் களத்தில் குதித்து செயலில் இறங்கின. 
அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் கடந்த ஆகஸ்டு மாதம் 5ம் தேதி ஜெனிவாவில் சுமார் 183 நாடுகளைச் சேர்ந்த 1400 பேர் ப்ளாஸ்டிக் தொடர்பான ஒரு கூட்டு ஒப்பந்தத்தை உருவாக்க கலந்தாலோசித்தார்கள். 
ஆனால், கடைசியில் இந்த 1400 பேரும் இரண்டு குழுக்களாக பிரிந்து தனித்தனியாக ப்ளாஸ்டிக் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததால் அந்தக் கூட்டம் எதுவுமே சாதிக்காமல் தோல்வியில் முடிந்தது.

உலகளவிலான ப்ளாஸ்டிக் ஒப்பந்தம் என பெயர் சூட்டப்பட்ட இந்த கூட்டம் 10 நாட்கள் நடைபெற்றது. 1400 பேரும் கூடிப் பேசி ப்ளாஸ்டிக் தொடர்பாக ஒரு பொதுப்படையான கருத்தை ஏற்படுத்தி அதை ஓர் ஒப்பந்தமாக உருவாக்குவதுதான் இந்தக் கூட்டத்தின் குறிக்கோள். 

இதுமாதிரி ஏற்கனவே பல கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும் ப்ளாஸ்டிக் பயன்பாடு, அது ஏற்படுத்தும் தீங்குகள் தொடர்பாக பல ஆய்வுகள் எச்சரிகை விடுக்க இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்படி கூடிய கூட்டம்தான் இருபிரிவாக பிரிந்து அந்த மீட்டிங்கையே பிசுபிசுக்க வைத்தது. 

ஒரு குழுவின் பெயர் ‘உயர் ஆர்வக் கூட்டுக்குழு’. மற்ற குழுவின் பெயர் ‘குறைந்த ஆர்வக் கூட்டுக்குழு’. இவையெல்லாம் இந்த இரு குழுக்களுக்கு வெளியிலிருந்து ஆட்கள் வைத்த பெயர்கள். பெயரைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தக் குழுக்களில் இருந்த நாடுகளைப் பற்றிப் பார்ப்போம். 

முதல் குழுவில் ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஜப்பான், கனடா மற்றும் மிகச் சிறிய நாடுகளான பசிஃபிக் தீவு நாடுகள் சேர்ந்துகொண்டன. இரண்டாம் குழுவில் சவுதி அரேபியா, ஈரான், குவைத், இந்தியா போன்ற நாடுகள் இணைந்துகொண்டன. இரண்டாம் குழுவைப் பார்த்தால் ஓர் ஒற்றுமை புலப்படும். இந்தியாவைத் தவிர்த்த மற்ற நாடுகள் பெட்ரோல், கேஸ் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் என்று இலகுவாகக்கண்டுபிடித்துவிடலாம். 

இந்த இரு குழுக்களும் ப்ளாஸ்டிக் தொடர்பாக என்ன சார்பைக் கொண்டிருந்தன?

முதல் குழு ப்ளாஸ்டிக் உற்பத்தியை எல்லா நாடுகளுமே முழுமையாக தடை செய்யவேண்டும் என வலியுறுத்தியது. ஆனால், இரண்டாம் குழு - பெட்ரோல் நாடுகளும் இந்தியாவும் - முழுமையாக எல்லாம் ப்ளாஸ்டிக்கை தடை செய்ய முடியாது... வேண்டும் என்றால் ப்ளாஸ்டிக்கால் விளையும் கேடுகளைக் கட்டுப்படுத்துகிறோம் என்றது. 

ப்ளாஸ்டிக் பொருட்கள் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எனும் கேஸ் சேர்க்கையால் உருவாக்கப்படுகின்றன. அதிலும் ப்ளாஸ்டிக்கிலும் பலவகை உண்டு. 

சுமார் 1000 க்கும் மேற்பட்ட ப்ளாஸ்டிக் வகைகளை அறிவியலாளர்கள் பிரித்து மேய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். சில ப்ளாஸ்டிக்குகள் மிக ஆபத்தானவை. சிலது நீண்டகாலத்துக்குப் பிறகு ஆபத்தை ஏற்படுத்தும். குறைந்த ஆர்வக் குழு முழுமையான தடைக்கு ஒரு கண்டிஷன் போட்டது. 

‘வளர்ந்த நாடுகள் எல்லாமே பலவித வளர்ச்சிகளால்தான் உருவாயின. அதில் ஒரு வளர்ச்சி  ப்ளாஸ்டிக். ப்ளாஸ்டிக் தொழில்நுட்பத்தால் வளர்ந்த ஒரு நாடு, வளர்ந்து வரும் அல்லது வளராத ஒரு நாட்டில் ப்ளாஸ்டிக் உற்பத்திய தடை பண்ணச் சொல்வது எந்தவகையில் சரியாகும்?

வேண்டுமென்றால் ஒருகாலத்தில் ப்ளாஸ்டிக் பயன்பாட்டால் வளர்ச்சியுற்ற நாடுகள் ப்ளாஸ்டிக் உற்பத்தியில் இன்று ஈடுபடும் நாடுகளுக்கு நிதி உதவி செய்தால் ப்ளாஸ்டிக் தடை பற்றி யோசிக்கலாம்...’ என்று சொல்லவே, ‘முதலில் தடை செய்யுங்கள். பிறகு நிதி பற்றி பேசலாம்...’ என்று முதல் குழு சொல்ல... பேச்சுவார்த்தை முட்டுச்சந்தில் போய் நின்றது.
மேற்குலகம் ப்ளாஸ்டிக்கால் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியைக் கண்டதுபோல் இந்தியாவும் இந்த ப்ளாஸ்டிக்கால் பலவிதமான வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. 

உதாரணமாக, இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. இத்தோடு இந்தியாவில் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் இந்த உற்பத்தியில் ஈடுபட்டு உழைத்து வருவதாகவும் ஒரு புள்ளிவிபரம் உண்டு. 

ஆனாலும் ப்ளாஸ்டிக் தொடர்பான பல்வேறு அறிவியல் ஆய்வுகள் அதன் நச்சுத்தன்மையை அறிவித்துக்கொண்டே இருக்கின்றன. கேன்சர் முதல் மலட்டுத்தன்மை வரை பல உடல்சார் நோய்கள் ப்ளாஸ்டிக்கால் ஏற்படுவதாக ஆபத்தான கண்டுபிடிப்புகள் தினந்தோறும் ஊடகங்களில் வருகின்றன. 

இந்நிலையில் ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்த ஜியோ டாமினிடம் பேசினோம். இந்த இரு குழுக்களில் அமெரிக்கா ஏன் இல்லை என்ற முக்கியமான கேள்விக்கு விடையளித்தபடி பேசத் தொடங்கினார். ‘‘அமெரிக்காதான் இந்த ப்ளாஸ்டிக் பயன்பாட்டில் இன்று முதல் குற்றவாளி என்பதால் அது மற்ற உலகளவிலான கூட்டங்களைப் போலவே 
இதிலும் பங்கேற்கவில்லை. 

உலகளவில் இந்தியாதான் ப்ளாஸ்டிக் உற்பத்தியில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பதாக பலர் சொல்கிறார்கள். ஆனால், உற்பத்தியை மட்டும் வைத்து பயன்பாட்டை கணிக்க
முடியாது. உதாரணமாக, இந்தியாவில் ஒரு தனிமனிதரின் ப்ளாஸ்டிக் பயன்பாடு வருடத்துக்கு 15 கிலோ என்றால் ஐரோப்பாவில் இதுவே சுமார் 150 கிலோ இருக்கும். அமெரிக்காவில் இது இன்னும் அதிகமாகவே இருக்கும். 

ட்ரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் ஓரளவு ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். ஆனால், ட்ரம்ப் தன் தேர்தல் பிரசாரத்தில் ‘ட்ரில் பேபி ட்ரில்’ என பேசினார். ‘ட்ரில்’ என்றால் தோண்டு என அர்த்தம். அதாவது ‘எண்ணெயையும், கேஸையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தோண்டு’ என்பதே இதற்குப் பொருள். 

அதேமாதிரி ட்ரம்ப் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலில் சொன்ன வார்த்தை ‘ப்ளாஸ்டிக் ஸ்ட்ராவை மீண்டும் கொண்டுவருவேன்’ என்பது. அமெரிக்கா ப்ளாஸ்டிக்கை உற்பத்தி செய்கிறதோ இல்லையோ அதன் பயன்பாடு மற்ற நாடுகளைவிட அங்கேதான் அதிகம் என்பதைத்தான் பல புள்ளிவிபரங்கள் சொல்கின்றன...’’ என்ற ஜியோ டாமின், ப்ளாஸ்டிக்கால் ஏற்படும் பல சுகாதார தீமைகளைக் குறித்து அறிஞர்கள் பேசுகையில் உலகம் இப்படி இரண்டுபட்டிருப்பது சரியா எனக் கேட்கிறார். 

‘‘எல்லோரும் ப்ளாஸ்டிக் என்றாலே கேரி பேக் அல்லது அவை மட்கா குப்பைகள் என்று மட்டுமே பார்க்கிறார்கள். இது ஒரு தவறான கண்ணோட்டம். மட்கா குப்பைகள் என்ற பொருளில் பிளாஸ்டிக் ஒரு சிறிய அளவு பாதிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத பலவித ப்ளாஸ்டிக்குகளால் ஏற்படும் பாதிப்புகளை பலர் புரிந்து கொள்வதில்லை. உதாரணமாக, துணிக்கடைகளில் சிந்தடிக் துணி என்பது விற்பனையில் சக்கைபோடு போடுகிறது. 

பாலியஸ்டர், நைலான் என்றெல்லாம் துணி வகைகள் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்திவிட்டு துவைப்பதற்காக வாஷிங் மெஷினில் போடுகிறோம். அந்தக் கழிவு நீர் நம் நிலத்தடி நீரில் கலக்கும்போது நாம் உண்ணும் காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளில் ப்ளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்து விடுகின்றன. 

மட்டுமல்ல; கடலில் ப்ளாஸ்டிக் நுண்துகள்கள் கலப்பதால் உலகில் மூன்று பங்கிருக்கும் கடலும் நச்சுத்தன்மை அடைகிறது. கடல் உணவுகளிலும் ப்ளாஸ்டிக் நச்சுக்கள் கலந்துவிடுகின்றன. 

ஒருகாலத்தில் பிள்ளைப் பேறு என்பது நம் நாட்டின் செல்வமாக இருந்தது. அந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருந்தது. ஆனால், இன்று அதுவே ஒரு வரமாக பார்க்கப்படுகிறது. காரணம், ஆண் பெண் பேதமில்லாமல் அதிகரித்து வரும் மலட்டுத்தன்மை.

அதேபோல் கேன்சர் பற்றியும், கற்றல் திறன் பற்றியும் இந்த ப்ளாஸ்டிக் நச்சுக்களால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் அறிவியலாளர்கள் கரிசனத்தோடு எச்சரிக்கிறார்கள். செவி கொடுத்து கேட்கத்தான் ஆளில்லை...’’ என்ற ஜியோ டாமின், இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கலாம் என்றும் சொல்கிறார். ‘‘ப்ளாஸ்டிக் தீங்கானது என்றதுமே அதற்குக் காரணமாக ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர்களை உடனே குற்றம் சுமத்துகிறோம். ஆனால், இந்த உற்பத்தியாளர்களுக்கு அந்த ப்ளாஸ்டிக் மூலப்பொருட்களை வழங்குவது யார் என்று யோசிக்க வேண்டும். 

இந்தியாவில் தனியார் பெட்ரோல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனம்தான் ப்ளாஸ்டிக் உற்பத்திக்குத் தேவையான சுமார் 60 சதவீத மூலப் பொருட்களை வழங்குகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இதுகுறித்து ஒன்றிய அரசு வாயே திறக்காமல் இருப்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.ப்ளாஸ்டிக் பொருட்களை நாம் மலிவான விலைக்கு வாங்குகிறோம். ஆனால், உண்மையில் அதன் உற்பத்திச் செலவு அதிகம். அரசு மானியம் கொடுப்பதால்தான் ப்ளாஸ்டிக் மலிவாக கிடைக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. 

இந்த அரசு மானியம் எல்லாமே அந்த தனியார் நிறுவனத்துக்குத்தான் போகிறது. ஒருவேளை இந்த மானியத்தை எல்லாம் வேறு ஆபத்தில்லாத பொருட்களுக்கு அரசு வினியோகிக்குமானால் ப்ளாஸ்டிக்கின் பயன்பாடும், தேவையும் குறைந்து அதன் ஆபத்துக்களும் இந்தியாவில் மட்டுப்படுத்தப்படும்.முக்கியமாக இந்தியர்களிடம் இப்பொழுது அதிகரித்து வரும் மலட்டுத்தன்மையும், புற்றுநோய் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையும். 

இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால்... ஒன்றிய அரசு உண்மையிலேயே இந்திய மக்கள் மீது அக்கறைகொண்டிருந்தால் அந்த தனியார் நிறுவனத்துக்கு சட்டத்துக்குப் புறம்பாக வழங்கிவரும் மானியம் உள்ளிட்ட சலுகைகளை நிறுத்த வேண்டும்.இதுதான் இந்திய மக்களின் கோரிக்கை. இதை ஒன்றிய அரசு நிறைவேற்றுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி...’’ என்கிறார் ஜியோ டாமின். 

டி.ரஞ்சித்