இந்தியாவின் லேடி ஜேம்ஸ் பாண்ட்!



40 ஆண்டுகள்... 80 ஆயிரம் வழக்குகள்...

பொதுவாக ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக நிலவும் ஒரு துறை, துப்பறியும் துறை. இதில் அசைக்க முடியாத ஓர் ஆளுமையாக வலம் வருகிறார் ரஜனி பண்டிட் என்ற பெண். இந்தியாவின் முதல் தனியார் பெண் துப்பறிவாளரும் இவரே. 

யார் இந்த ரஜனி பண்டிட்? 

கடந்த 1962ம் வருடம் மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் பிறந்தார், ரஜனி பண்டிட். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ரஜனியின் தந்தை குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். 
சிறு வயதிலேயே துப்பறிவுத்துறையின் மீது ஆர்வமுடையவராக இருந்தார் ரஜனி. அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் இறந்துவிட்டார். அந்தப் பெண் உண்மையிலுமே இறந்துவிட்டாரா என்று அருகில் போய் கைகளைப் பிடித்துப் பார்த்திருக்கிறார் ரஜனி. அப்போது அவரது வயது 8. 

11 வயதிலேயே போலியான ஒரு பொருளைக் கண்டுபிடித்து சுற்றியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். எண்பதுகளில் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் மராத்தி இலக்கியம் படித்தார். அப்போது அவருடன் படிக்கும் சக மாணவிகளில் சிலர் மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் ஆண்களுடன் ஹோட்டல் அறைகளுக்குச் செல்லுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இது ரஜனியைக் கவலையடைய வைத்தது. 

ரகசியமாக அந்தப் பெண்களைப் புகைப்படம் எடுத்து, அவர்களுடைய பெற்றோர்களுக்கு அனுப்பிவிட்டார் ரஜனி. 

இந்தச் சம்பவம் அவரை ஒரு துப்பறிவாளர் போல உணர வைத்தது. எதிர்காலத்தில் பெரிய துப்பறிவாளராகப் போவதாக வீட்டில் சொன்னார் ரஜனி. அவரது தந்தைக்கு அதில் விருப்பமில்லை. ஆனால், ரஜனியின் அம்மா, மகளின் துப்பறிவாளர் கனவுக்கு உறுதுணையாக இருந்தார். 

கல்லூரிக் காலத்தில் சக மாணவி ஒருவரின் வீட்டில் திருட்டுச் சம்பவம் நடந்தது. திருடியவர்களைக் கண்டுபிடிக்க அந்த மாணவி ரஜனியின் உதவியை நாடினார். ரஜனியும் திருடியவர்களைக் கண்டுபிடிக்க தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார். இதுதான் அவரது முதல் வழக்கு. படிப்பு முடிந்ததும் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தா வேலைக்குச் சேர்ந்தார் ரஜனி. அவருடன் வேலை செய்த ஒரு பெண் வீட்டில் பணம் திருடு போய்விட்டது. 

திருடனைக் கண்டுபிடிக்க உதவி செய்யும்படியும், மருமகள் திருடியிருக்கலாம் என்றும் ரஜனியிடம் சொல்லியிருக்கிறார் அந்தப் பெண். அவரது குடும்ப உறவினர்கள் அனைவரையும் ரகசியமாக கண்காணிக்க ஆரம்பித்தார் ரஜனி. 

அந்தப் பெண்ணின் இளைய மகன்தான் திருடியிருக்கிறான் என்று கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார். திருடனைக் கண்டுபிடித்ததற்காக ரஜனிக்கு ஒரு தொகை வழங்கப்பட்டது. 

இதுதான் துப்பறியும் வேலைக்காக அவர் வாங்கிய முதல் சம்பளம். இதற்குப் பிறகு பல பெண்கள் துப்பறியும் பணிக்காக ரஜனியை நாடினார்கள்.ஒரு செய்தித்தாளில் ரஜனியைப் பற்றி துண்டுச் செய்தி வெளிவந்தது. இதைப் படித்த நிருபர் ஒருவர், தன்னுடைய சகோதரியின் கணவரை, அதாவது மச்சானைக் கண்காணிக்கும்படி ரஜினிக்கு ஒரு துப்பறியும் வேலையைக் கொடுத்தார். 

அந்த மச்சானுக்கு ரகசியமாக இன்னொரு குடும்பம் இருப்பதைக் கண்டுபிடித்துத் தந்திருக்கிறார் ரஜனி. இச்சம்பவத்துக்குப் பிறகு பிரபலமான மராத்தி செய்தித்தாளில் ரஜனியின் நேர்காணல் வந்தது. அந்த நேர்காணலுக்குப் பிறகு மகாராஷ்டிரா முழுவதும் பிரபலமாகிவிட்டார். 

தொடர்ந்து நிறைய வழக்குகள் வர ஆரம்பித்தன. அதனால் 1986ம் வருடம் ‘ரஜனி’ஸ் புலனாய்வு பணியகம்’ எனும் தனியார் துப்பறியும் ஏஜென்ஸியைத் தொடங்கி, லேடி ஜேம்ஸ் பாண்டாக வலம் வந்தார். 

இந்த ஏஜென்ஸியை ஆரம்பிக்கும்போது ரஜனிக்கு வயது 24. தனது ஏஜென்ஸியை விளம்பரப்படுத்துவதற்காக ஒரு செய்தித்தாள் நிறுவனத்தை அணுகினார். ஒரு பெண் துப்பறிகிறார் என்பதை அந்த செய்தித்தாள்களின் எடிட்டர்களால் நம்ப முடியவில்லை. அதனால் விளம்பரம் செய்ய முடியாது என்று ரஜனியை நிராகரித்துவிட்டனர். 

துவண்டுபோகாத ரஜனி பல வழக்குகளைத் தீர்த்து வைத்து, தனக்கான அங்கீகாரத்தை, தானே தேடிக்கொண்டார். அவரது நேர்காணல்களுக்காக பல செய்தித்தாள்களும், பத்திரிகைகளும் வரிசையில் நின்றன. விளம்பரம் இல்லாமலேயே அவரை நாடி பலபேர் வந்தனர். மட்டுமல்ல, காவல்துறையே ரஜனியின் உதவியைத் தேடிச் சென்றது. 

ஏஜென்ஸி ஆரம்பித்த இரண்டாவது வருடத்திலேயே முக்கியமான ஒரு வழக்கு ரஜனியிடம் வந்தது. தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர் கொல்லப்பட்டுவிட்டார், உறவினர்கள் மீது சந்தேகம் இருக்கிறது, கொலையாளியைக் கண்டுபிடித்துத் தரும்படி ரஜனியை அணுகியிருக்கின்றனர். 

கொலை நடந்த வீட்டுக்கே வேலைக்காரியாகச் சென்றார் ரஜனி. அந்தக் குடும்பத்தின் தலைவியால் நியமிக்கப்பட்ட ஒருவன்தான் கொலையாளி என்பதைக் கண்டுபிடித்தார். இந்தக் கொலை வழக்கு தொழில்முறை ரீதியாகவும் ரஜனிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. 

2003ல் ரஜனியின் ஏஜென்ஸியில் 8 பேர் துப்பறியும் பணிக்கு நியமிக்கப்பட்டனர். தினமும் புதுப்புது வழக்குகள் வர ஆரம்பித்தன. 2010ல் ரஜனியின் ஏஜென்ஸியில் வேலை செய்யும் துப்பறிவாளர்களின் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்தது. குறைந்தபட்சம் மாதம் 20 வழக்குகளையாவது அவரது ஏஜென்ஸி துப்பறிந்தது. 

கடந்த 40 வருடங்களில் 80 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகளைத் தீர்த்து வைத்திருக்கிறார் ரஜனி. கணவனை ஏமாற்றும் மனைவி, மனைவியை ஏமாற்றும் கணவன், காணாமல் போகும் நபர்கள், குடும்பப் பிரச்னைகள், அரசியல் விசாரணைகள், நிறுவனங்களின் ஊழல்கள் மற்றும் திருட்டு, கொலைச் சம்பவங்கள் உட்பட பலவிதமான வழக்குகள் இதில் அடக்கம். 

இவற்றில் ஆயிரக்கணக்கான வழக்குகள் காவல்துறையினராலேயே தீர்க்க முடியாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வழக்குக்கும் தகுந்த மாதிரி தனது அடையாளங்களை மாற்றிக்கொண்டு துப்பறிவது ரஜனியின் தனித்துவம். 

கண் தெரியாத பெண், கர்ப்பிணி, தள்ளுவண்டி வியாபாரி, சமையல்காரி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போன்ற வேடங்களை அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். ஒரு கொலைகாரனைக் கண்டுபிடிப்பதற்காக அவனுடைய வீட்டிலேயே சமையல்காரி வேலைக்குச் சேர்ந்ததுதான் ரஜனியின் துப்பறியும் பணியில் சந்தித்த ஆபத்தான செயல். இதுபோக விலையுயர்ந்த பொருட்களுக்குப் பதிலாக போலியான பொருட்களை விநியோகம் செய்து வியாபாரிகளை ஏமாற்றும் பெரு முதலாளியின் போலித்தனங்களைத் துணிச்சலாகக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார். 

மட்டுமல்ல;தேர்தல் காலங்களில் பல அரசியல்வாதிகளுக்கு உதவியிருக்கிறார் ரஜனி. அதாவது, தான் வேலை செய்யும் அரசியல்வாதியைப்பற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர், அவருக்கு எதிராகப் போட்டியிடுபவரைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தருவது ரஜனிக்கு கைவந்த கலை. காவல்துறைக்குப் பயனுள்ள தகவல்களைக் கொடுத்து, ஏராளமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் உதவியிருக்கிறார் ரஜனி. 

தவிர, பல வழக்குகளுக்கு ஆலோசகராகவும் பணிபுரிந்திருக்கிறார். மது, போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு வழிகாட்டியாகவும் வேலை செய்திருக்கிறார். 
துப்பறிவதற்காக ரஜனி பயன்படுத்தும் உபகரணங்கள் எல்லாம் நவீனமானவை. டெடி பியர் பொம்மைளில், பேனாக்களில் ரகசிய கேமராவையும், மைக்ரோபோனையும் வைப்பதில் இவர் முன்னோடி. இப்போது, தான் சந்தேகப்படும் நபர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களையும் கவனித்து, ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறார். 

ரஜனியின் பணி குற்றவாளிகளுடனும், பெரிய புள்ளிகளுடனும் தொடர்பு கொண்டிருப்பதால், இந்த வேலையில் ஆபத்துகள் அதிகம். ஏராளமான முறை கொலை மிரட்டல்கள், சட்ட ரீதியான பயம் காட்டல், ஆள் வைத்து தாக்குவது போன்ற பல பிரச்னைகளைச் சந்தித்த பிறகும் கூட, தனது துப்பறியும் பணியை அவர் விடவில்லை. இன்று இந்தியா முழுவதும் இருந்து வரும் வழக்குகளை எடுத்து துப்பறிகிறார். தன்னுடைய வேலை பாதிக்கப்படும் என்பதற்காக ரஜனி திருமணம்கூட செய்து கொள்ளவில்லை.

த.சக்திவேல்