பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதிக்கு தங்கள் மகனுக்கான இடம் இன்னும் கிடைக்கலையே என்கிற ஆதங்கம் இருக்கு...



மனம் திறக்கிறார் 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கும் சாந்தனு பாக்யராஜ்

சாந்தனு பாக்யராஜ்... அறிமுகம் தேவைப்படாத நடிகர். ‘சக்கரகட்டி’ படத்தில் அறிமுகமானவர் கடந்த 17 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். 
கடந்த ஆண்டு வெளியான ‘புளூ ஸ்டார்’ இவருக்கு கூடுதல் ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்தது. இப்போது மலையாளத்தில் ‘பல்டி’, தமிழில் ‘மெஜந்தா’ என பிசியாக இருக்கிறார். 

திடீர்னு மலையாளப் பக்கமாக ‘பல்டி’ அடிச்சுட்டீங்க..?

மலையாளத்தில் ‘ஏஞ்சல் ஜான்’ பண்ணியதும் ரெண்டு, மூணு வாய்ப்பு வந்துச்சு. அது நான் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. உங்களுக்குத்தான் தெரியுமே... சினிமாவில் தொடர்ந்து நம் முகத்தை காண்பிக்கும்போதுதான் வாய்ப்பு வரும். அங்கு நான் தொடர்ந்து நடிக்காததால் வாய்ப்புகள் வரவில்லை. சமீபத்தில் ஏ.எல்.விஜய் புரொடக்‌ஷனில் நசீரியாவுடன் ‘மெட்ராஸ் மிஸ்ட்ரி’ என்ற வெப் சீரீஸ் பண்ணினேன். 

அந்த டீம்ல ஒர்க் பண்ணிய இணை இயக்குநர் ஒருவர் ‘மலையாளப் பக்கம் வாங்க சார்’ன்னு கூப்பிட்டதோடு, ‘சான்ஸ் வரும்போது உங்களுக்கு சொல்லலாமா’ன்னு கேட்டார். அப்படி வந்த வாய்ப்பு இது.இயக்குநர் உண்ணி வீடியோ காலில் கதை சொன்னார். நான் எதிர்பார்த்த மாதிரி கேரக்டர் ஸ்ட்ராங்காக இருந்துச்சு. 

‘புளூ ஸ்டார்’ படத்துல என்னுடைய கதாபாத்திரத்துக்கு என்ன கிராஃப் இருந்துச்சோ அது மாதிரி இந்தப் படத்தில் குமார் கேரக்டருக்கு இருந்துச்சு. நல்ல டீம் என்பதால் ஓகே சொல்லிட்டேன். படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடந்துச்சு. படத்தோட ‘அவுட்புட்’டும் நல்லா வந்திருக்கு.

‘பல்டி’ - ஸ்போர்ட்ஸ் கதை. ஆனால், லுக் முரட்டுத்தனமாகத் தெரியுதே?

கதை, கேரக்டர் அப்படி. இது ஆக்‌ஷன் படம். தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியில் கதை நடக்கும். இந்தக் கதைக்கு நான் செலக்ட்டாக அதுவும் ஒரு காரணம். 

இந்தப் படத்துக்காக மலையாளம் கத்துக்க ஒரு மாதம் ஆன்லைன் வகுப்புல சேர்ந்தேன். நாம், எவ்வளவு மலையாளம் கத்துக்கிட்டாலும் மலையாளியாக மாற முடியாது. அதேமாதிரி மலையாளிகள் தமிழ் கத்துக்கிட்டாலும் அவர்கள் பேசும்போது மலையாள நடை கலந்திருக்கும். 

எனக்கு இரண்டும் கலந்த கேரக்டர் என்பதால் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்க முடியும் என்றாலும் முறையாக மலையாளம் கத்துக்கிட்டேன்.சண்டைக் காட்சிகள் லைவ்வாக இருக்கும். அதுக்காக ஒரு மாதம் சண்டை கத்துக்கிட்டேன். கபடி விளையாட்டுக்கான பாடிலேங்வேஜ் யதார்த்தமாக இருக்கணும் என்பதற்காக 20 நாட்கள் கபடி பயிற்சி எடுத்துக்கிட்டேன். 

ஷேன் நிகாம் உட்பட படத்துல மொத்தம் நாலு கேரக்டர்கள். ஷேன் பல்டி மூவ் பண்ணுவார். எனக்கு டேஷ் மூவ், மீதி இருவருக்கு ஸ்கார்ப்பிங் கிக் மூவ். ஒரே ஷெட்யூலில் 90 நாட்கள் ஷூட் நடந்துச்சு. 

‘மெஜந்தா’வில் எந்த மாதிரி சாந்தனுவைப் பார்க்கலாம்?

படப்பிடிப்பு முடியும் ஸ்டேஜ்ல இருக்கு. இதுல வட சென்னை இளைஞனாக வர்றேன். மெடிக்கல் ரெப் கேரக்டர். ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் பண்ணும்படி இருக்கும். நாயகியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இயக்கம் பரத் மோகன்.

உங்கள் பெயருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ‘பாக்யராஜ்’ என்ற பெயர் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கிறது?

கண்டிப்பாக அது பெரிய அழுத்தம்னு சொல்லலாம். சினிமாவைப் பொறுத்தவரை நாம் யார், எந்த வீட்ல இருந்து வர்றோம் என்பது முக்கியமில்லை. இங்கு திறமை மட்டுமே கவனிக்கப்படும். 

நான் எப்பவும் சொல்வதுதான்... சினிமாக்காரர்கள் நம்மைக் கைவிடலாம், சினிமா கைவிடாது. அதுமாதிரி ஏதோ ஒரு ஓரத்தில் என்னுடைய வேலையை நேர்மையாக பண்ணுவதால்தான் சினிமா எனக்கு வாய்ப்பு கொடுக்கிறது. மற்றபடி, இன்னார் பையனாக இருப்பது என்பது பெரிய அழுத்தம். 

நிறைய இடத்துல பாக்யராஜ் பையன் என்பதால் அப்ரோச் பண்ணுவதற்கு ஈசியாக இருக்கும். ஆனால், வாய்ப்பு ஈசியாக கிடைக்காது. என்னுடைய அறிமுகம் அப்பாவின் பெயரால் கிடைச்சது. அதற்கடுத்து என்னுடைய உழைப்பால் மட்டுமே நிலைநிற்க முடியும். அதை நம்பித் தான் ஓடுகிறேன்.

விரக்தி அடைந்த காலகட்டத்துல உங்களுக்கு பக்கபலமாக இருந்தது யார்?

நான் மட்டுமல்ல, சினிமா ஆர்ட்டிஸ்ட்ஸ் பலர் விரக்தியடைந்திருப்பாங்க. வெற்றி என்பது அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. அப்படி கிடைச்சாலும் அதை தக்கவைப்பது அதைவிட கஷ்டம். அதுமாதிரி கடினமான பல காலகட்டங்களை நான் கடந்து வந்துள்ளேன். இந்த விஷயத்தில எனக்கு பக்கபலமாக இருந்தது என்னுடைய அப்பா, அம்மா, அதன் பிறகு என்னுடைய மனைவி. 

நீங்கள் நனவாக்க விரும்பும் உங்கள் மிகப்பெரிய கனவு என்ன?

அப்பா, அம்மாவை பெருமையடையச் செய்யணும். அருகிலிருந்து என்னுடைய கஷ்டத்தை கவனிச்சு வர்றாங்க. ஒரு நாள் நான் ஜெயிக்கும்போது அது அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்.

பாக்யராஜ் - பூர்ணிமா என்ற நட்சத்திரத் தம்பதி, சினிமாவில் பல சாதனைகள் செய்திருந்தாலும் தங்கள் மகனுக்கான இடம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இன்றுவரை அவர்களிடம் இருக்கிறது. 

அப்பா பலமுறை என்னிடம், ‘யாரிடமாவது நான் பேசட்டுமாடா’ என்று கேட்டுள்ளார். நான் ‘வேண்டாம்’னு சொல்லியிருக்கிறேன். அப்பா வழியாக வரும் வாய்ப்பை யூஸ் பண்ணக்கூடாது என்று நினைக்கிறேன். வெற்றியோ, தோல்வியோ அது என்னைச் சார்ந்ததாக இருக்கணும்னு நினைக்கிறேன். 

அப்பா சொன்ன ஆலோசனைகளில் இன்று வரை காப்பாற்றி வரும் ஆலோசனை எது?

‘படப்பிடிப்புக்கு நேரத்துடன் செல்ல வேண்டும். ஒழுக்கமாக நடக்க வேண்டும். உன்னால யாரும் வருத்தப்படக் கூடாது’னு சொல்வார். அதனாலேயே ஷூட்டிங் துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்கூட்டியே சென்றுவிடுகிறேன். 

திறமை வாய்ந்த உங்களைப் போன்ற நடிகர்களுக்கு சவாலாகத் தோன்றும் விஷயம் எது?

நேரம். நம்மிடம் எவ்வளவு திறமைகள் இருந்தாலும் எல்லாத்துக்கும் நேரம் கைகூடிவரணும். அதுவரை பொறுமையாக இருப்பது பெரும் சவால். கஷ்டமான நேரத்தில் பொறுமையாக இருப்பது பெரிய சவால். சினிமாவுக்கு பொறுமை முக்கியம்.

உங்கள் ஆளுமையை எப்படி விவரித்துச் சொல்வீர்கள்?

நான் ஒரு திறந்த புத்தகம். யாரிடமும் யோசிக்காம வெளிப்படையாகப் பேசுவேன். அதுல என்னை கொஞ்சம் மாத்திக்கணும்னு நினைக்கிறேன். ஏனெனில், இங்கு நேர்மை என்ற விஷயத்துக்கு மதிப்பு இல்ல.நிறைய விஷயங்களில் உதவிசெய்ய நினைப்போம். கடைசியில அதுவே நமக்கு எதிராகத் திரும்பும். எதுவாக இருந்தாலும் உனக்குள் வெச்சுக்க. அதை வெளிப்படுத்தக்கூடிய நேரத்துல மட்டும் வெளிப்படுத்தினால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

எஸ்.ராஜா