70 வயதில் தனியாக உலகம் சுற்றும் பெண்மணி!



இன்று பெரும்பாலானோர் பயணம் செய்வதே இன்ஸ்டாவில் ரீல்ஸ்களாகப் பதிவு செய்வதற்குத்தான். ஆனால், சிலபேர் உண்மையாலுமே தீவிரக் கனவுடன், உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்துடன், புதுப்புது மனிதர்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் பயணிக்கின்றனர்.
அவர்கள் பெரும்பாலும் பயணம் சார்ந்த எதையும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்வதில்லை. பார்வைகள், விருப்பக்குறிகள் மற்றும் பின்னூட்டங்களின் எண்ணிக்கைக்காக பயணிக்காமல், பயணத்தின் மீதான தீவிரக் காதலுக்காகப் பயணிக்கின்றனர். 

அப்படியான பயணிகளில் ஒருவர்தான், இந்திரா. இவரது பயண அனுபவங்கள் எல்லாம் புதிதாகவும், தனியாகவும் பயணிக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் உந்துதல் 
அளிக்கக்கூடியதாகவும் உள்ளன. 

யார் இந்த இந்திரா?

கேரளாவில் பிறந்து, வளர்ந்தவர் இந்திரா. சிறுமியாக இருக்கும்போதே உலகைச் சுற்றி வர வேண்டும் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதற்கான வாய்ப்புகளோ, வசதிகளோ அவருக்குக் கிடைக்கவில்லை. 
60 வயதில்தான் அவரது கனவுகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கின. ஆம்; கடந்த 2015-ம் வருடம் தனியாக தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் செய்தார் இந்திரா. முதல் முதலாக சபாரி பயணம் மேற்கொண்டார்.

‘‘ஆட்டு மந்தையைப் போல கூட்டம் கூட்டமாக யானைகளையும், சிங்கங்களையும், வரிக்குதிரையையும் பார்த்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. 
முன்பே யானையையும், சிங்கத்தையும் பார்த்திருந்தாலும் இப்படி கூட்டமாகப் பார்த்ததில்லை. வரிக்குதிரையை முதல் முறையாக அப்போதுதான் பார்த்தேன்...’’ என்று குழந்தையின் உற்சாகத்துடன் சொன்னார் இந்திரா.

இந்திராவுடன் சேர்ந்து பத்துப் பேர் அந்த சபாரி பயணத்தில் பங்கு பெற்றிருக்கின்றனர். அவர்கள் எல்லோருமே வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். பயணத்தின்போதே அவர்களைத் தன்னுடைய நண்பர்களாக மாற்றிவிட்டார். 

‘‘என்னுடைய ஒவ்வொரு தனியான பயணத்தின்போதும், முன்பின் தெரியாத, அறிமுகமில்லாத பலரைச் சந்திக்கிறேன். நானாகவே அவர்களிடம் பேசி, நண்பராக்கிக் கொள்கிறேன். அறிமுகமில்லாத ஒருவரை நண்பராக்குவது நல்ல நினைவைக் கொடுக்கிறது...’’ என்கிற இந்திரா, பயணம் முடிந்து கேரளாவுக்குத் திரும்பிய பிறகும் கூட, பயணத்தின்போது சந்தித்தவர்களின் நட்பைத் தொடர்கிறார்.

‘‘முதல் பயணத்தைத் தனியாக ஆரம்பிக்கும்போது கொஞ்சம் பயம் இருந்தது உண்மைதான். இருந்தாலும் பயணத்தை சிறப்பாக மேற்கொள்வேன் என்ற நம்பிக்கையிருந்தது. 
தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவுடன் அந்தப் பயம் காணாமல் போய்விட்டது. உண்மையில் பயம்தான் தனியாக பயணம் செய்ய என்னைத் தூண்டியது...’’ என்கிற இந்திரா, இதுவரை 35 நாடுகளுக்கு மேல் சுற்றி வந்துவிட்டார். 

அவருக்குப் பிடித்த இடங்களின் பட்டியலில் தென்னாப்பிரிக்காவில் சென்ற சபாரி பயணம்தான் முதலிடத்தில் உள்ளது. ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப்டவுனில் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கின்ற இடங்கள் நிறைய இருப்பதாகச் சொல்கிறார்.‘‘எப்போதுமே பயணம் போக வேண்டும் என்று விரும்புவேன். திருமணத்துக்கு முன்பு இருந்த பொருளாதார நிலை காரணமாக என்னால் எங்கேயும் பயணிக்க முடியவில்லை. 

திருமணத்துக்குப் பிறகு பொருளாதாரம் சீரானது. ஆனால், குழந்தைகள், வீட்டைக் கவனிக்க வேண்டும் என்பதால் பயணம் தடைபட்டது. அந்த நாட்களில் பயணம் பற்றி எண்ணிக்கொண்டே இருப்பேன். குடும்பத்துடன் சேர்ந்துதான் பயணம் செல்ல முடியும். முன் பின் அறிமுகமில்லாதவர்களுடன் சேர்ந்து தனியாகப் பயணம் செய்வது பற்றி அப்போது எதுவுமே தெரியாது.  

நண்பர்கள் மூலமாகத் தனிப் பயணம் பற்றி தெரிந்துகொண்டேன். இது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தது...’’ என்கிற இந்திராவின் குழந்தைகள் வளர்ந்து, பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.

 “பயோகெமிஸ்ட்ரி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் எனது அம்மா. ஓய்வு பெறும் வரையில் பயணக் கனவுகளைத் தனக்குள்ளேயே அம்மா சுமந்து கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். மாத ஓய்வூதியமும், பிஎஃப் பணமும் அவருக்குப் பொருளாதார ரீதியாக சுதந்திரத்தைக் கொடுத்தது. 

எங்களிடமிருந்து கூட அவர் எந்த உதவியையும் எதிர் பார்க்கவில்லை. ஒரு குழந்தையைப் போல இந்த உலகைக் காண அவர் விரும்பினார்...” என்கிறார் இந்திராவின் மகளான ரோகிணி. 

கடந்த 2010ம் வருடம் இந்திராவின் கணவர் மரணமடைந்துவிட்டார். அதற்குப் பிறகு ஒருவித தனிமையில் அகப்பட்டுவிட்டார் இந்திரா. சொந்த பந்தங்கள் இருந்தாலும் ஏதோவொரு வெறுமை இந்திராவை வாட்டியது. 

தன் வயதுக்கு நிகரான வயதுடைய முதியவர்களை அடிக்கடி சந்தித்தார். அந்த முதியவர்கள் மத்தியில் ஒரு குழு உண்டானது. அவர்கள் எல்லோரும் சேர்ந்து பயணம் போக திட்டமிட்டனர். அந்தக் குழுவில் ஒருவர் இந்திராவையும் தங்களுடன் சேர்ந்து பயணம் செய்ய அழைத்தார். 

இதுகுறித்து தன்னுடைய மகளிடம் தெரிவித்திருக்கிறார் இந்திரா. மகளும் இந்திராவை ஊக்கப்படுத்தி, பயணம் செய்ய அனுப்பியிருக்கிறார். இதுதான் இந்திராவின் ஆரம்பம். இந்தப் பயணம் அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கவே, தனியாகவே தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார். புதுப்புது இடங்களைச் சுற்றிப்பார்ப்பதும், புதிய மனிதர்களுடன் நட்பு பாராட்டுவதும் ஏராளமான அனுபவங்களை இந்திராவுக்குக் கொடுத்திருக்கிறது. 

ஒருமுறை இஸ்தான்புல்லில் இருந்தபோது சூட்கேஸின் பாஸ்வேர்டை மறந்துவிட்டார் இந்திரா. பயணத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் அதில்தான் இருந்தன. அவருடன் பயணித்தவர்கள் பூட்டை உடைத்து, சூட்கேஸைத் திறக்க உதவியிருக்கின்றனர். இன்னொரு பயணத்தின் போது ஜப்பானுக்குச் சென்றிருந்தார் இந்திரா. 

எதிர்பாராத விதமாக கீழே விழுந்து, பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. முன் பின் அறிமுகமில்லாதவர்கள்தான் இந்திராவுக்கு ஆதரவு தந்திருக்கின்றனர். அவர் சரியாகும் வரை அனைத்து உதவிகளையும் செய்து தந்திருக்கின்றனர். 

“ குழுவாகப் பயணிக்கும்போது உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல உணர்வோம். ஒவ்வொருவரும் உதவியாக இருப்போம். அதனால் குடும்பத்தைவிட்டு தனியாகப் பயணிக்கிறோம் என்ற உணர்வே இருக்காது. நான் பயணத்தை மிகத் தாமதமாகத்தான் ஆரம்பித்தேன். ஆனால், நீங்கள் விரைவாகவே ஆரம்பியுங்கள். பயணம் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவதோடு, உங்களின் ஆளுமையையும் செதுக்குகிறது. தனியாகப் பயணிப்பது உங்களுக்கான இடத்தை அளிக்கிறது. 

இந்த உலகத்தை உங்களின் கண்கள் வழியாக, உங்களது கண்ணோட்டத்தில் பார்ப்பீர்கள். குடும்பத்துடன் பயணிக்கும்போது ஒரு பெண்ணாக, குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்ற பொறுப்பும் உங்கள்மீது மறைமுகமாக செலுத்தப்படும். அப்போது உங்களால் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது...” என்கிற இந்திரா, அடுத்து எகிப்துக்கும், கிரீஸுக்கும், ஸ்காண்டிநேவியாவுக்கும் பயணிக்கப் போகிறார்.

த.சக்திவேல்