அழிந்து வரும் வண்ணத்துப்பூச்சிகளை இவர் ஆவணப்படுத்துகிறார்..!



‘‘இந்தியாவுல மொத்தம் 1,350 வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருக்கு. இதில் அழியும் தருவாயில் உள்ளவை மட்டும் 74 இனங்கள். இதுதவிர, மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் 40 இனங்கள் அழிந்து வரும் நிலையில் இருக்கின்றன. மொத்தமாக 114 வண்ணத்துப்பூச்சி இனங்கள் இன்று அழியும் நிலையில் இருப்பது வேதனையான விஷயம்.
இதனை பாதுகாக்கணும்னு வலியுறுத்தியே, ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு என் தூரிகை வழியே ஓவியமாக ஆவணப்படுத்தியிருக்கேன்...’’ ஆத்ம திருப்தியாகப் பேசுகிறார் ராகவன் சுரேஷ்.   

கோவையிலுள்ள இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தில் ஓவியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் இவர். ஏற்கனவே அழிந்துவரும் அரிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் ஓவியங்களை ஆவணப்படுத்தியவர். இதற்காக பிரதமர் மோடி, ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் அவரைப் பாராட்ட, அதன்மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். இப்போது வண்ணத்துப் பூச்சிகளின் வண்ணங்களுடன் வந்திருக்கிறார். 

‘‘கடந்த 2017ம் ஆண்டிலிருந்து அழிந்துவரும் தாவரங்கள், வனவிலங்குகள், பறவைகளின் ஓவியங்களை வரைஞ்சிட்டே இருக்கேன். அதன் தொடர்ச்சியாகவே அரிய வகை மற்றும் அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சிகளைத் தேர்ந்தெடுத்தேன். இதனை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வரைஞ்சு முடிச்சேன். 

இதற்காக வண்ணத்துப்பூச்சிகளைப் பத்தி நிறைய படிக்கவும் செய்தேன். உலகில் மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருக்கு. இதில் இந்தியாவில் மட்டும் 1,350 வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைனு பார்க்கிறப்ப 340 இனங்களும், தமிழ்நாட்டில் 329 இனங்களும் இருக்கின்றன. இதில் நான் அழிந்து வரும் அரிய வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கிட்டேன்.  

அப்படியாக 114 வண்ணத்துப்பூச்சி இனங்கள் அழிந்துவரும் நிலையில் இருக்கு. அதனை முழுமையான ஓவியங்களாக, அறிவியல் பூர்வமான வகையில் ஆவணப்படுத்தியிருக்கேன்.
அதாவது அந்த வண்ணத்துப்பூச்சி என்ன அளவில், என்ன வடிவத்தில், என்ன வண்ணங்களில் இருக்கிறதோ அதேபோல் வரைவது அறிவியல்பூர்வமானது. இதனை சயின்டிஃபிக் டிராயிங்னு சொல்வாங்க. நான் இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்துல பணியாற்றிய போது அங்கே தாவரங்களை இப்படி சயின்டிஃபிக் முறையில்தான் வரையணும். அதையே என் ஓவியங்களுக்கும் பின்பற்றுகிறேன்.

சயின்டிஃபிக்காக வரையும்போது நீளம், அகலம், உயரம்னு பல விஷயங்களை நாம் கணக்கில் கொள்ளணும். அதேபோல் வண்ணத்துப்பூச்சியின் ஆறு கால்கள், இரண்டு நீண்ட உணர்வுக் கொம்புகள், நான்கு இறக்கைகள், அதன் மேல் அமைப்பு, அதிலுள்ள விதவிதமான வண்ணங்கள்னு எல்லாவற்றையும் கவனிக்கணும். 

இருந்தும் வண்ணங்களைத் தீட்டும் போது நம்மால் 95 சதவீதமே கொடுக்க முடியும். ஏன்னா, இயற்கையை எப்போதுமே விஞ்சமுடியாது. அப்புறம் இதனை என்னுடைய சயின்டிஸ்ட் நண்பர்களிடம் காட்டி அவங்க ஒப்புதல் தந்தபிறகே வெளியே கொண்டு வந்திருக்கேன். 

வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்படங்கள எல்லாம் அவர்கள்தான் எனக்கு தந்து உதவினாங்க. இதுதவிர வனவிலங்குப் புகைப்படக் கலைஞர்கள் நிறைய பேர் நண்பர்களாக இருக்காங்க. அவங்களும் பல புகைப்படங்கள் கொடுத்தாங்க. ஆனா, இந்தப் புகைப்படங்கள் வரைவதற்கு சரி வராது. காரணம், புகைப்படக் கலைஞர்கள் ஓர் அழகியலுடன் அவங்களுக்கு பிடித்த கோணத்தில் எடுத்திருப்பாங்க. அதனால் நான் இரண்டு மூன்று புகைப்படங்களை ஒப்பீடு செய்து பிறகே வரைஞ்சேன்.  

அப்படியாக எனக்கு ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஓவியம் வரைய இரண்டு மூன்று நாட்கள் ஆனது. முதலில் பென்சிலில் வரைந்து அதனை சயின்டிஸ்ட்டுகளின் அப்ரூவலுக்கு அனுப்புவேன். அவங்க பார்த்திட்டு ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் சொல்வாங்க. அதன்பிறகு வண்ணங்கள் தீட்டி அனுப்புவேன். அதில் வண்ணங்கள் சரியாகப் பொருந்துதானு பார்த்து சொல்வாங்க. இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் மீண்டும் புதுசாக வரைந்து வண்ணங்கள் தீட்டி அனுப்பணும். 

இந்த வகையில் எனக்கு இந்த வண்ணத்துப்பூச்சி தொடரை முடிக்க ஒன்றரை ஆண்டுகளானது. விற்பனைக்காக வரைவதென்றால் பிடிச்சமாதிரி வரையலாம். இது அப்படியில்ல. இதில் வணிக நோக்கமும் கிடையாது. அதனால், ரொம்ப ஈர்க்கும்படியாக வரையவும் முடியாது. அந்த வண்ணத்துப்பூச்சியில் எப்படி இருக்குதோ அப்படியே தரணும். அப்போதுதான் அது ஆவணப்படுத்துதலாக இருக்கும்...’’ என்கிறவர், உற்சாகத்துடன் தொடர்ந்தார். 

‘‘நம் சூழலியல் அமைப்பில் வண்ணத்துப்பூச்சிகள் முக்கிய பங்காற்றுது. மகரந்தச் சேர்க்கை மூலம் விவசாயம் செழிக்க உதவுது. அதேபோல் வண்ணத்துப்பூச்சியை நம்பி உணவுச் சங்கிலியில் பல்லி, சிலந்தி, தவளை, பறவை உள்ளிட்டவை இருக்கின்றன. அதனால் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்தால் உணவு உற்பத்தி குறைந்திடும்.

ஆனா, கடந்த பத்து ஆண்டுகளாக வண்ணத்துப்பூச்சி இனங்கள் அழிஞ்சிட்டு வருது. இதுக்குக் காரணம் விவசாயத்தில் வேதிப்பொருட்கள் நிறைய பயன்படுத்துறதும், நகரமயமாக்கலுமே ஆகும். 

இப்ப பிரிட்டனில் அரசே வண்ணத்துப்பூச்சியை அதிகப்படுத்த ஒவ்வொரு வீட்டிலும் செடிகளை வளர்க்கச் சொல்றாங்க. இதன் முக்கியத்துவத்தை அவங்க உணர்ந்திருக்காங்க. நமக்கும் இங்கே விழிப்புணர்வு தேவை. 

இந்தியாவில் சில மாநிலங்கள், வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து மாநிலத்திற்கான வண்ணத்துப்பூச்சிகளை அறிவிச்சிருக்காங்க. அந்தவகையில் தமிழ்நாடு அரசு கடந்த 2019ம் ஆண்டு, ‘தமிழ் மறவன்’ என்ற வண்ணத்துப்பூச்சிஇனத்தை மாநில வண்ணத்துப்பூச்சி இனமாக அறிவித்தது.இது அழியும் பட்டியலில் இல்லை. 

இருந்தும் நம் மாநில வண்ணத்துப்பூச்சி என்பதால் இதனை என்னுடைய பட்டியலில் சேர்த்து வரைஞ்சிருக்கேன். கேரளாவில், ‘மலபார் மயில்’ என்ற இனம் மாநில வண்ணத்துப்பூச்சியாக இருக்குது. இது அழியும் தருவாயில் உள்ளது. அதுவும் என் பட்டியலில் இருக்கு. 

அப்புறம், நான் வரைஞ்ச அழிவின் விளிம்பில் உள்ள ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சி இனத்துக்கும் அறிவியல் பெயரும், தமிழ்ப் பெயரும், அது எந்த குடும்பம் என்பதையும் 
தந்திருக்கேன். இதனுடன் கூடவே அந்த வண்ணத்துப்பூச்சி இனம் எவ்வளவு எண்ணிக்கையில் உள்ளது, அது அரியதா, சிவப்பு பட்டியலில் உள்ளதா, என்ன சாப்பிடும், எந்த நேரத்தில் முட்டையிடும் உள்ளிட்ட விவரங்களையும் ஓவியத்தில் குறிப்பிட்டிருக்கேன். 

இதனை புத்தகமாகக் கொண்டு வரச்சொல்லி நண்பர்கள் கேட்கிறாங்க. ஆனா, அதற்குப் பொருளாதார வசதி இடம் கொடுக்கல. என்னைப் பொறுத்தவரை இதனை வருங்காலத் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கணும் என்பதே நோக்கம். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வண்ணத்துப்பூச்சி இனங்களையும், அவற்றின் முக்கியத்துவம் குறித்தும், அழியும் தருவாயில் உள்ளவை பத்தியும் கட்டாயம் தெரிஞ்சுக்கணும். 

இதனால் சூழலியலுக்கு எவ்வளவு நன்மைகள் என்பதையும்,  பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணரணும்னு நினைக்கிறேன். அதனால், இதனை ஓவியக் கண்காட்சியாக வைக்க முயற்சி செய்திட்டு இருக்கேன். ஆனா, கண்ணாடி ப்ரேம் பண்ணி வைப்பதற்கு செலவுகள் அதிகம் பிடிக்கும். இதுக்கு ஏதாவது ஸ்பான்சர்  கிடைச்சால் நல்லாயிருக்கும். 
இதுதவிர முன்பு நான் மேற்குத் தொடர்ச்சி மலையில் அழிந்து வரும் அரிய வகைப் பறவைகள், தாவரஇனங்கள், விலங்கினங்களை ஓவியமாக வரைஞ்சேன். 

இப்போ, இந்தியா முழுவதும் அழிந்து வரும் நிலையில் உள்ள பறவைஇனங்கள், தாவரஇனங்கள், விலங்கினங்களை வரைஞ்சிட்டு இருக்கேன். அது முடியும் தருவாயில் இருக்கு. வண்ணத்துப்பூச்சிக்குப் பிறகு இதனை காட்சிப்படுத்தத் திட்டமிட்டிருக்கேன்...’’ என முத்தாய்ப்பாக முடிக்கிறார் ஓவியர் ராகவன் சுரேஷ். l  

பேராச்சி கண்ணன்