அமெரிக்கா, சீனா வரிவிதிப்பு போர்... இந்திய பொம்மைக்கு அடித்த சான்ஸ்..!



சமீபத்தில் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகளின் பொருட்கள் மீதான வரியை உயர்த்தினார். இதில் குறிப்பாக சீனப் பொருட்கள் மீது அதிக அளவில் வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை அதிகரித்தது.

தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வரிவிதிப்புப் போர் உக்கிரமானது. இதன் உச்சகட்டமாக தற்போது சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீத வரியை விதித்துள்ளது. சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு 125 சதவீதமாக வரியை உயர்த்தியுள்ளது.

இனி சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா மேலும் வரிகளை விதித்தால், அவற்றைப் புறக்கணிக்கும் என சீனா கூறியுள்ளது. தற்போதைய வரி ஏற்றங்களால் அமெரிக்க இறக்குமதிகளை சீனச் சந்தையால் ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் இந்தியாவிற்கு ‘லக்’ அடித்துள்ளது. குறிப்பாக பொம்மை நிறுவனங்களுக்கு இந்தக் காலம் ஒரு பொன்னான வாய்ப்பாக மாறியுள்ளது.

அமெரிக்க - சீன வரிவிதிப்பு போரால் அமெரிக்க வர்த்தகர்கள், சீன பொம்மைகளை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். 
இதற்கு மாற்றாக வேறு ஏற்றுமதியாளர்களைத் தேடியவர்கள், பொம்மை உற்பத்தியில் சிறந்து விளங்கும் இந்தியா பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளனர். அப்படியாக இந்திய பொம்மை ஏற்றுமதியாளர்களுக்கு நல்லதொரு சான்ஸ் அடித்துள்ளது.

தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த பொம்மை வர்த்தகர்கள் இந்திய ஏற்றுமதியாளர்களிடம் அதிகம் விசாரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

‘‘இப்போது இந்தியாவிலிருந்து ​​சுமார் 20 நிறுவனங்கள் அமெரிக்க சந்தைக்கு மொத்தமாக பொம்மைகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. தற்போது தேவை அதிகரித்துள்ளதால் அதை பூர்த்தி செய்யும் வகையில் அமெரிக்கச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் திறன் கொண்ட சுமார் 40 நிறுவனங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்...’’ என சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்திய பொம்மை சங்கத்தின் தலைவர் அஜய் அகர்வால்.

மேலும் அவர், ‘‘கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பொம்மை வர்த்தகர்களிடமிருந்து அதிக விசாரிப்புகளைப் பெற்று வருகிறோம். அதனால் சில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்க விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி பொம்மை பொருட்களை தயாரிக்கக்கூடிய இந்திய உற்பத்தியாளர்களின் பட்டியலை எங்களிடம் கேட்டுள்ளன...’’ என்கிறார் உற்சாகமாக.

மார்க்கெட் ரிசர்ச் மற்றும் கன்சல்டிங் நிறுவனமான ஜிஎம்ஐ, அமெரிக்காவின் பொம்மை சந்தை அளவு 2024ம் ஆண்டில் 42.8 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் 3 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.

இது 2032ம் ஆண்டில் 56.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இப்போதைய இந்திய மதிப்பில் இது 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாயாக மாறும். இதற்கு  அமெரிக்க பொம்மை நுகர்வோரின் விருப்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணம்.

அமெரிக்காவில் ஏன் பொம்மை சந்தை பெரிதாக உள்ளது?

அமெரிக்காவின் வலுவான பொருளாதாரமும், வலுவான நுகர்வோரும், குழந்தைப் பருவக் கல்விக்காக STEM எனப்படும் ‘சயின்ஸ், டெக்னாலஜி, எஞ்சினியரிங், மேத்ஸ்’ ஆகியவற்றை கற்பிக்கும் வகையில் உருவாக்கப்படும் பொம்மைகளுக்கான முக்கியத்துவமும், உரிமம் பெற்ற நல்ல தயாரிப்புகளும் அமெரிக்க பொம்மை சந்தையை உலக அளவில் மிகப் பெரிதாக
வைத்துள்ளன.

அதாவது வலுவான பொருளாதாரமும் நுகர்வோரும் அங்கே இருப்பதால் பொம்மைகள் மற்றும் பொழுதுபோக்குகளுக்கு அங்குள்ள மக்கள் அதிகம் செலவிடுகின்றனர்.
பிறகு குழந்தைகளின் கல்விக்காக STEM பொம்மைகளை அவர்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். இதன் வழியாக குழந்தைகள் நிறைய கற்றுக் கொள்வார்கள் என நினைக்கின்றனர். தவிர விளையாட்டு பொம்மைகளையும் வாங்கிக் குவிக்கின்றனர்.

இத்துடன் பெரியவர்கள் அதிகளவில் பொம்மைகளை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். குறிப்பாக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பாப் கலாச்சாரம் தொடர்பான பொம்மைகளைச் சேகரிக்கின்றனர். 

இதனால் நீண்டகாலமாகவே அங்கே பொம்மை சந்தை மிகச் செழிப்பாக உள்ளது.ஆனால், அதிக அளவிலான பொம்மை தயாரிப்பு என்பது அமெரிக்காவில் குறைவு. இறக்குமதியே அதிகம். குறிப்பாக சீனாவிலிருந்து விதவிதமான பொம்மைகள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதனாலேயே இப்போதைய வரிவிதிப்பு அமெரிக்க பொம்மை சந்தையைப் பாதித்துள்ளது.

தற்போது அவர்கள் சீன  தயாரிப்பு பொம்மைகளை வேண்டாம் என நினைக்கின்றனர். இந்நிலையில் அந்த இடத்தை இந்தியா நிரப்ப வாய்ப்பு அமைந்துள்ளது. 

இந்திய பொம்மைச் சந்தைகடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்திய பொம்மைச் சந்தை அதிக அளவில் இறக்குமதியை நம்பியே இருந்தது. 2011-12ன் கணக்குப்படி இறக்குமதி 2,236 கோடி ரூபாயாக இருந்தது. ஏற்றுமதியோ இதற்கு பாதி அளவான, 1,100 கோடி ரூபாய்தான். ஆனால் இன்று ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி 52 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.  

இதற்கு ஒன்றிய அரசின் மேக் இன் இந்தியா திட்டமும் ஒரு காரணம். இதன் வழியே ஏற்றுமதி வாய்ப்புகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியது. அப்படியாக 2020ம் ஆண்ேட இந்தியாவை பொம்மை உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற்ற வேண்டுமென நினைத்தது.

இதற்காகவே நேஷனல் ஆக்‌ஷன் பிளான் ஃபார் டாய்ஸ் எனப்படும் தேசிய செயல் திட்டத்தை முன்னெடுத்தது. இதில் பொம்மைகளை வடிவமைப்பதை ஊக்குவித்தல், பொம்மைகளை கற்றல் வளமாகப் பயன்படுத்துதல், பொம்மைகளின் தரத்தைக் கண்காணித்தல், உள்நாட்டு பொம்மைத் தொகுப்புகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும்.

இத்துடன் இறக்குமதி வரியை அதிகரித்து உள்நாட்டு தொழிலை வலுப்படுத்தியது. இதனால், இந்தியாவின் பொம்மை சந்தை 2022ம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக, அதாவது 12 ஆயிரம் கோடி ரூபாயாக மாறியது.   

இது 2028ம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு இந்திய பொம்மைச் சந்தை வளமாக மாறியுள்ளது. இந்தியாவில் பொம்மை உற்பத்தியில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன. 

இப்போது அமெரிக்க, சீன வரிவிதிப்புப் போர் இந்திய பொம்மைச் சந்தையை மேலும் திறன் வாய்ந்ததாக மாற்றியுள்ளது. அத்துடன் உலக அளவில் சிறந்த ஏற்றுமதியாளராக மாறுவதற்கான வாய்ப்பையும் தந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன தகவல்கள்.

பேராச்சி கண்ணன்