ஒரு ஸ்ட்ராபெரியின் விலை ரூ.1600
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்திருக்கிறது, எரிவோன் எனும் டிபார்ட்மென்டல் ஸ்டோர். ஹாலிவுட் பிரபலங்களுக்கு விருப்பமான ஒரு கடை இது. இங்கே அனைத்துவிதமான உயர் ரக மளிகைப் பொருட்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் கிடைக்கும்.  உதாரணத்துக்கு, மாம்பழ வகைகளை எடுத்துக்கொண்டால், மியாசாகி வகை இங்கே கிடைக்கும். ஒரு கிலோ மியாசாகி மாம்பழத்தின் விலை 3 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலமான அலிசா, எரிவோனுக்குச் சென்றிருக்கிறார். அங்கே ஒரு பிளாஸ்டிக் கப்பில் அடைக்கப்பட்ட ஒரு ஸ்ட்ராபெரியை வாங்கி, அதைப் பற்றி தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜப்பானில் உள்ள கியோட்டோவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்ட்ராபெரி இது. உலகிலேயே மிகுந்த சுவையான ஸ்ட்ராபெரி வகையும் இதுவே. இந்திய மதிப்பில் ஒரு ஸ்ட்ராபெரியின் விலை ரூ.1600. பொதுவாக ஒரு கிலோ ஸ்ட்ராபெரியே 500 ரூபாய்க்குள் கிடைக்கும் என்பதால் அலிசா வாங்கிய ஸ்ட்ராபெரி வைரலாகி வருகிறது.
த.சக்திவேல்
|