90 வயது பெண்மணியால் ஓவிய கிராமமான வில்லேஜ்!



உலகம் முழுவதும் பல லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இதில் பல கிராமங்களைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் கூட கிடைக்காது. ஆனால், ஒரு சில கிராமங்கள் உலகளவில் பிரபலமாக இருக்கும். அப்படியான ஒரு பிரபல கிராமம்தான் லுக்கா. இந்தப் பிரபலத்துக்குக் காரணம், ஆக்னஸ் காஸ்பர்கோவா என்ற பெண்மணி.

யார் இந்த ஆக்னஸ் காஸ்பர்கோவா?

செக் குடியரசில் அமைந்திருக்கும் லுக்கா எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர் ஆக்னஸ் காஸ்பர்கோவா. விவசாய வேலைகளைச் செய்து வந்தார் ஆக்னஸ். அவரது கிராமத்தில் தேவாலயச் சுவர்களில் தன்னார்வத்துடன் ஒரு பெண் ஓவியம் வரைந்துகொண்டிருந்தார். 
அந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட, ஆக்னசுக்கும் ஓவியத்தின் மீது ஈர்ப்பு உண்டாகியது.  
பொழுதுபோக்குக்காக தனது வீட்டின் சுவர்களில் மலர் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். அந்த ஓவியங்கள் கிராமத்தில் இருக்கும் அனைவரையும் கவர்ந்தன. தங்களின் வீட்டுச் சுவர்களிலும் ஓவியம் வரைந்து தரும்படி ஆக்னஸிடம் வேண்டுகோள் வைத்தனர்.

பல வீடுகளின் சுவர்களில் செக் நாட்டின் பாரம்பரியமான மலர் ஓவியங்களை இலவசமாகவே வரைந்து கொடுத்தார். சிறிய தூரிகையையும், நீல வண்ணத்தையும்தான் அதிகமாகப் பயன்படுத்தினார். ஆக்னஸின் ஓவியத் திறமையை அங்கீகரிக்கும் விதமாக லுக்கா கிராமத்தில் இருக்கும் தேவாலயத்தின் நிர்வாகம், தேவாலய சுவர்களில் கூட ஓவியம் வரைந்து தர ஆக்னஸை அணுகியது. 
ஆக்னஸும் உயரமான தேவாலய சுவர்களில் ஓவியம் வரைந்து கொடுத்தார். அப்போது அவரது வயது 90ஐத் தாண்டிவிட்டது. ஆக்னஸின் ஓவியங்களால் லுக்கா கிராமமே ஒரு ஓவியக் கண்காட்சிக்கூடமாக காட்சியளிக்கிறது.

தவிர, உலகம் முழுவதும் ஓவிய கிராமம் என்று பிரபலமாகிவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு ஆக்னஸ் இறந்துவிட்டார். சமீபத்தில் ஆக்னஸ் தேவாலயத்தின் சுவர்களில் ஓவியம் வரைவதைப் போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலானது. அதனால் ஆக்னஸின் புகழ் மீண்டும் உயிர்பெற்றது. இப்போது ஆக்னஸின் ஓவியச் சேவையை, அவரது உறவுக்காரப் பெண் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

த.சக்திவேல்