Must Watch
 த கில்லர்’ஸ் கேம் ‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளி வரும் ஆக்ஷன் திரில்லர் படம், ‘த கில்லர்’ஸ் கேம்’. இந்த ஆங்கிலப்படம் தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது. ஒரு நடன நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கே பாதுகாப்புக்காக நிறைய பேர் இருக்கின்றனர். ஒருவரைக் கொல்வதற்காக அங்கே வருகிறார் ஹிட்மேன். அந்த இடமே பரபரப்பாகிறது.
இந்நிலையில் நடனமாடிக்கொண்டிருந்த ஒரு பெண் கீழே விழாமல் உதவுகிறார் ஜோ. அந்தப் பெண் ஜோவிற்கு நன்றி சொல்ல முயற்சிக்கும்போது, தலைவலியால் அங்கிருந்து நகர்கிறார். அது வழக்கமான தலைவலியாக இல்லாமல், வித்தியாசமாக இருப்பதாக நினைக்கிறார் ஜோ. பரிசோதனைகளுக்குப் பிறகு ஜோவிற்கு கொடிய நோய் இருப்பது தெரியவருகிறது. அதிகபட்சம் மூன்று மாதங்கள் ஜோ இருப்பார் என்று அதிர்ச்சியளிக்கிறார் மருத்துவர்.
இப்படியான இக்கட்டான சூழலில் ஜோ என்ன செய்தார்? மருத்துவர் சொல்வது எல்லாம் உண்மையா என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்து விடுங்கள். ஆரம்பம் முதல் இறுதி வரை வேகமாக நகரும் திரில்லிங் திரைக்கதை, ஆங்காங்கே எமோஷனையும் பதிவு செய்கிறது. படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பெர்ரி.
டாக்கு மகாராஜ்
‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் தெலுங்குப்படம், ‘டாக்கு மகாராஜ்’. தமிழ் டப்பிங்கிலும் பார்க்கலாம்.சித்தூரில் வாழ்ந்து வரும் பெரும் பணக்காரர், கிருஷ்ணமூர்த்தி. ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். தனது டீ எஸ்டேட்டை எம்எல்ஏவின் தம்பி மனோகருக்குக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்.
மனோகர் ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டு, டீ எஸ்டேட்டில் யானைத் தந்தத்தை வியாபாரம் செய்து வருகிறார். மனோகரின் சட்ட விரோதமான செயலை கிருஷ்ணமூர்த்தியின் பேத்தியான வைஷ்ணவி பார்த்துவிடுகிறாள்.
தனது டீ எஸ்டேட்டில் நடக்கும் விஷயம் கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியவர, அவர் மனோகரின் மீது வழக்குத் தொடுக்கிறார். வழக்கை வாபஸ் வாங்கும்படி கிருஷ்ணமூர்த்தியையும், அவரது குடும்பத்தையும் மிரட்டுகிறார் எம்எல்ஏ. கிருஷ்ணமூர்த்தி வழக்கை வாபஸ் வாங்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் காரில் சென்றுகொண்டிருக்கும்போதே, தாக்கப்படுகிறது.
வைஷ்ணவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. வைஷ்ணவிக்கு ஆபத்து என்று தெரிந்த உடனே போபால் சிறையிலிருந்து தப்பித்து வருகிறார் மகாராஜ். யார் இந்த மகாராஜ் என்பதே மீதிக்கதை.மகாராஜாக கலக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. படத்தின் இயக்குநர் பாபி கொல்லி. த வைல்டு ரோபோ
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய அனிமேஷன் படம், ‘த வைல்டு ரோபோ’. பீட்டர் பிரவுன் எழுதிய புகழ்பெற்ற சயின்ஸ் ஃபிக்சன் நாவலைத் தழுவியது இந்தப் படம். இப்போது தமிழ் டப்பிங்கில் ‘ஹாட் ஸ்டாரி’ல் காணக் கிடைக்கிறது.
ரோபோ தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம், யுனிவர்சல் டைனமிக்ஸ். இயற்கை சீற்றம் காரணமாக யுனிவர்சல் டைனமிக்ஸின் கார்கோ ஷிப் பாதிப்புக்குள்ளாகி, பல ரோபோக்களை இழக்க நேரிடுகிறது. இதில் ஒரு ரோபோ வன விலங்குகள் மிகுந்த ஒரு தீவில் மாட்டிக்கொள்கிறது. சேதமடைந்திருக்கும் அந்த ரோபோவை வன விலங்குகள் எதேச்சையாக ஆக்டிவேட் செய்து விடுகின்றன.
ஆரம்பத்தில் ரோபோவைப் பார்த்து வன விலங்குகள் பயப்படுகின்றன. காட்டுக்குள் ரோபோவின் உதவி யாருக்கும் தேவைப்படவில்லை. இந்த முரண்பாடுகளுடன் ரோபோவுக்கும், வன விலங்குகளுக்கும் இடையில் எப்படி நெகிழ்ச்சியான உறவு ஏற்படுகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறது திரைக்கதை.குழந்தைகளுடன் சேர்ந்து பார்ப்பதற்கான அருமையான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிறிஸ் சாண்டர்ஸ்.
பேபி ஜான்
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி, ஹிட் அடித்த தமிழ்ப்படம், ‘தெறி’. இதன் அதிகாரபூர்வ ரீமேக்தான் ‘பேபி ஜான்’. இந்த இந்திப்படம் ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. கேரளாவில் ஒரு பேக்கரியை நடத்தி வருகிறார், ஜான். மகள் குஷி மற்றும் நெருங்கிய நண்பன் ஜாக்கியுடன் வாழ்ந்து வருகிறார் ஜான். மகள் குஷி படிக்கும் பள்ளியில் இருக்கும் ஆசிரியையான தாராவுடன் நட்புடன் இருக்கிறார். தாராவுக்கு ஜான் மீது ஈர்ப்பு உண்டாகிறது.
ஜான், தாரா, குஷி மூவரும் ஓர் இடத்துக்குச் செல்கின்றனர். அங்கே பெண்களைக் கடத்தும் கும்பல் இருக்கிறது. அந்த கும்பலுடன் குஷிக்கு மோதல் ஏற்படுகிறது. குஷியைக் கொல்வதற்காக ஜானின் இடத்துக்கு வருகிறது அந்த கும்பல். ஆரம்பத்தில் அடி வாங்கும் ஜான், அந்த கும்பலை அடித்து நொறுக்கிறார். ஜான் ஒரு காவல்துறை அதிகாரி என்று தாராவுக்குத் தெரிய வர சூடுபிடிக்கிறது திரைக்கதை.வருண் தவான், கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகர்கள் நடித்திருக்க, படத்தை இயக்கியிருக்கிறார் காலீஸ்.
தொகுப்பு: த.சக்திவேல்
|