மகா கும்பமேளா: நீராடும் பெண்களின் புகைப்படங்களை விற்கும் கிரிமினல் கும்பல்!
மகா சிவராத்திரியுடன் மகா கும்பமேளா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது... என ஆன்மிக பக்தர்களும் ஒன்றிய அரசும் கம்பீரமாக அறிவித்திருக்கும் இந்த நேரத்தில்தான் இப்படியொரு இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது ‘இந்தியா டுடே’.  புனிதமான கங்கை நதியில் குளிப்பதை மகா புண்ணியமாகக் கருதி ஆன்மிக பக்தர்கள் பல்லாயிரம் மைல் பயணம் செய்து, நாள் கணக்கில் காத்திருந்து, கூட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்டு தங்கள் உயிரையும் கொடுத்து நீராடினார்கள் அல்லவா..?  அந்த நீராட்டத்தை விற்று பணம் பார்க்கும் இழிந்த செயலை சில கயவர்கள் மேற்கொண்டுள்ளனர் என அம்பலப்படுத்தி இருக்கிறது ‘இந்தியா டுடே’.ஆம். மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்படுவதை ‘இந்தியா டுடே’ உண்மை சரிபார்ப்புக் குழு கண்டறிந்துள்ளது. மேலும் இந்தப் படங்கள் மற்றும் காணொளிகள் விற்பனைக்காக டீசர்களாகவும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆபாச உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் சில முகநூல் பக்கங்கள், ‘மகா கும்ப் கங்கா ஸ்நான் பிரயாக்ராஜ்’ போன்ற தலைப்புகளுடன் பெண்கள் குளிக்கும் காணொளிகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றன.
ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களில் பெண்கள் ஆற்றங்கரையில் குளித்து உடை மாற்றும் காணொளிகள் ஏராளமாக உள்ளன.மகா கும்பமேளா தொடர்பான முக்கிய வார்த்தைகளுடன் பகிரப்பட்ட இந்த காணொளிகளை ஆய்வு செய்த அடிப்படையில், ‘பெரும்பாலானவை பழையவை. பிரயாக்ராஜிலிருந்து எடுத்தவை அல்ல’ என்று தெரிகிறது. இருப்பினும் மகா கும்பமேளாவின் காட்சிகளாகப் பகிரப்படுகின்றன.
பெண்கள் குளிப்பது மற்றும் உடை மாற்றுவது போன்ற ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட காணொளிகளை வெளியிடும் குழுக்கள் இடம்பெறும் இரண்டு டெலிகிராம் சேனல்களையும் ‘இந்தியா டுடே’ கண்டறிந்துள்ளது. இந்தக் காணொளிகள் ‘கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு’, ‘மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு’, ‘திறந்தவெளி குளியல் வீடியோக்கள் குழு’ போன்ற பெயர்களைக் கொண்ட குழுக்களில் பகிரப்படுகின்றன.
டெலிகிராம் தேடுபொறி மற்றும் பகுப்பாய்வு தளமான டெலிமெட்ரியோவின் கூற்றுப்படி, பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை இந்தியாவில் ‘திறந்த குளியல்’ என்ற வார்த்தையை அதிகம் பேர் கூகுளில் தேடியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சேனல்களைப் பார்ப்பதற்கான கட்டணம் ரூ.1,999 முதல் ரூ.3,000 வரை இருக்கும் என்று தெரிகிறது. பெண்கள் குளிக்கும் காணொளிகள் மற்றும் படங்களைத் தவிர, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் பெண்கள் பரிசோதிக்கப்படும் காட்சிகளும் இவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் பல, பெண்களின் அந்தரங்க உறுப்புகளுக்குசிகிச்சை அளிக்கப்படுவதையோ,அவை பரிசோதிக்கப்படுவதையோ காட்டுகின்றன.
இவையனைத்தும் கும்பமேளாவில் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையிலான எந்த ஏற்பாடுகளும் அம்மாநில அரசால் செய்யப்படவில்லை என்பதையே உணர்த்துகிறது. சமூக விரோதக் கும்பல்கள் அங்கு எந்தவித தங்குதடையுமின்றி, சுதந்திரமாக இந்தக் கேடுகளை நிகழ்த்தியது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்த நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், காணொளிகளை வெளியிட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அமித்குமார் என்ற யூடியூபரை உத்திரப் பிரதேச காவலர்கள் கைது செய்துள்ளனர். சர்வதேச அளவில் இது பெரும் அதிர்ச்சியையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜான்சி
|