84 வது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதி!
பிரேசிலைச் சேர்ந்த மனோல், மரியா டி-சோசா தம்பதிகளைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். உலகிலேயே மிக நீண்ட திருமண வாழ்க்கை வாழும் தம்பதி என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளனர் இந்த தம்பதியினர். ஆம்; இவர்களுக்குத் திருமணமாகி 84 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ‘பரஸ்பர அன்பு’தான் தங்களது நீண்ட கால திருமண வாழ்க்கைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
 பிரேசிலைச் சேர்ந்த மனோல் ஏஞ்சலிம் டினோ, 1919ம் வருடம் பிறந்தார்; மரியா டி - சோசா, 1923ம் வருடம் பிறந்தார். 1936ம் வருடம் இருவரும் விவசாய வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது, முதல் சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால், இருவருக்குமிடையில் காதல் மலர, பல மாதங்களாகின. மரியாவுடைய அம்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். திரைப்படங்களில் வருவதைப் போல மரியாவின் குடும்பத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார் மனோல்.
 இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் 1940ல் மனோல் - மரியாவின் திருமணம் நடந்தது. பிரேசிலில் இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டில் குடியேறினார்கள். புகையிலை விவசாயம் செய்து, குடும்பத்தை நடத்தி வந்தனர். இத்தம்பதிக்கு 13 குழந்தைகள் பிறந்தனர். இந்த 13 குழந்தைகள் வழியாக 55 பேரன்- பேத்திகள் பிறந்தனர். 55 பேரன் - பேத்திகள் மூலம் 54 கொள்ளுப் பேரன் - பேத்திகள் பிறந்தனர்.
இந்தக் கொள்ளுப் பேரன் - பேத்திகளுக்கும் 12 குழந்தைகள் இருக்கின்றனர். இன்று மனோலின் வயது 105. மரியாவின் வயது 101. இருவரும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். வயது மூப்பின் காரணமாக மனோலும், மரியாவும் பகல் நேரங்களில் ஓய்வில் இருக்கின்றனர். மாலை நேரங்களில் பக்தி சம்பந்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே அவர்களது ஒரே பொழுது போக்கு. 100வது திருமண நாளைக் கொண்டாட வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
த.சக்திவேல்
|