கிராம மக்கள் வானத்தை ஆராயறாங்க!



இது ‘அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி’யின் வாவ் சாதனை

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் உட்புற கிராமம் அது. அங்கிருந்த தொடக்கப்பள்ளி முன் காடுகளில் வேலை முடித்து திரும்பிய பெண்கள் எல்லாம் ஒன்றுகூடி நிற்கின்றனர்.

அவர்களுக்கு முன் விலையுயர்ந்த டெலஸ்கோப் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 
அதனை ஆச்சரியம் பொங்க பார்ப்பவர்கள், அதன்வழியே வானத்தைப் பார்த்து இன்னும் வியப்பில் ஆழ்கின்றனர். அதில் அந்த அந்திசாயும் நேரத்து நிலவு, அவர்கள் தொட்டுவிடும் தூரத்தில் கண்சிமிட்டி சிரிக்கிறது.  

ஒவ்வொருவராகப் பார்த்து முடித்ததும் அவர்களுக்குக் கோள்கள், நட்சத்திரங்கள் குறித்த வானியல் விளக்கங்களை அத்தனை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் சொல்லித் தருகின்றனர் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் மாநில செயற்குழு உறுப்பினரான முத்துசாமியும், தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகனும்.
பின்னர் அங்கிருந்து கிளம்பி அடுத்த கிராமத்திற்குச் செல்கின்றனர். அங்கேயும் கிராமப் பெண்களுக்கு டெலஸ்கோப் வழியே வானியல் சம்பந்தமான விழிப்புணர்வினைக் கொடுக்கின்றனர். இப்படி வாரம் ஒருமுறை விடுமுறை தினங்களில் இந்நிகழ்வை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் என்றில்லை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த வானியல் ஆர்வலர்களால் நடத்தப்படுவதுதான் ஆச்சரியமான செய்தி. இதனை அஸ்ட்ரோ கிளப்பின் வழியே முன்னெடுத்து வருகிறது தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி எனும் அமைப்பு.
இதுமட்டுமில்லாமல் இந்த சொசைட்டி சமீபத்தில் 1000 இடங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகத் திட்டம் ஒன்றையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அஸ்ட்ரோ கிளப், அஸ்ட்ரானமி ஆய்வகம் உள்ளிட்டவை குறித்து அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டியின் மாநிலச் செயலாளரான ஜெ.மனோகரைச் சந்தித்தோம். ஏனெனில், இதற்கான முதல் விதையைத் தூவியவர் அவர்தான். ‘‘தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி (TASS) என்பது ஒரு தன்னார்வ அமைப்பு. பொதுமக்களுக்கு வானியல் தொடர்பான அறிவையும், விழிப்புணர்வையும், அறிவியல் மனப்பான்மையையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இதனை 2021ம் ஆண்டு ஆரம்பிச்சோம்.

இதுக்கு முன்னாடி மாவட்ட அளவுல அந்தந்த மாவட்டப் பெயர்கள்ல அஸ்ட்ரோ கிளப் மட்டும் இருந்தது. இந்த அஸ்ட்ரோ கிளப்பை எட்டு ஆண்டுகளுக்கு முன்னாடி திருச்சியில் முதன்முதலாக நான் ஆரம்பிச்சேன். காரணம் எனக்கு வானியல் மேல் அதீத ஆர்வம். அதுமட்டுமில்லாமல் கடந்த 35 ஆண்டுகளாக அறிவியல் பிரசார பணிகளில் ஈடுபட்டுட்டு வர்றேன். அறிவியல் இயக்கத்திலும் இருந்தேன்.

இன்னைக்கு அறிவியல் ஆர்வம் மக்களுக்கு ஓரளவு இருக்கு. பள்ளி, கல்லூரிகள் மூலம் அவங்களுக்கு அந்த ஆர்வம் வந்திருக்கு. ஆனா, வானியல் குறித்த ஆர்வம் குறைவாக இருக்கு. அல்லது ஆர்வம் இருந்தாலும் அதை அட்ரஸ் பண்ணக்கூடிய அமைப்புனு எதுவும் இங்கில்ல.

இப்ப சந்திராயன் உள்ளிட்ட விஷயங்கள் வந்தபிறகு மக்களுக்கு வானியல் ஆர்வம் கூடியிருக்கு. அதனால் இதை ஃபோகஸ் பண்ணணும்னு நினைச்சு ஆரம்பிச்சதுதான் அஸ்ட்ரோ கிளப்.

அப்படியே வெளியூர்கள்ல வானியலில் ஆர்வம் இருக்கிற என் நண்பர்களைக் கொண்டு அந்தந்த மாவட்டங்கள்ல இந்தக் கிளப்பை தொடங்கச் செய்தேன். அப்படியாக இப்ப எல்லா மாவட்டங்களிலும் அஸ்ட்ரோ கிளப் செயல்படுது.

இதையெல்லாம் ஒருங்கிணைக்கக்கூடிய வகையில், அதாவது ஒரு குடையின் கீழ் கொண்டு வரணும்னு உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி’ அமைப்பு...’’ என்றவர், இதன் பணிகள் குறித்து தொடர்ந்தார். ‘‘இந்த அமைப்பின் வழியே நிலா பார்த்தல், மற்ற கோள்கள் பார்த்தல்னு இரவு வான் நோக்கு நிகழ்வை தொலைநோக்கி மூலம் பண்றோம். இது மக்களை ரொம்ப ஈர்க்கும் விஷயம் என்பதால் அதிலிருந்து தொடங்குறோம்.

அடுத்ததாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் நிலா பார்த்தல், மற்ற கோள்கள் பார்த்தல் செய்றோம். கூடவே பகல் நேர அஸ்ட்ரானமினு சூரியப் புள்ளிகளைப் பார்க்கிறது, வானவியலில் என்னவிதமான அதிசயங்கள், அற்புதங்கள் இருக்குது, அதன் அறிவியல் என்ன... இந்த விஷயங்களை செயல்பாடுகள் மூலம் செய்து காட்டி புரிய வைக்கிறோம்.

அப்புறம் பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கங்களை இயற்பியல் பேராசிரியர்களைக் கொண்டு நடத்தறோம். இதெல்லாம் செய்திட்டு இருக்கும்போது பெங்களூர்ல உள்ள ‘இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோ பிசிக்ஸ்’னு சொல்லக்கூடிய இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்களைத் தொடர்பு கொண்டாங்க. இப்ப அவங்களுடன் இணைந்து நாங்க சில நிகழ்ச்சிகளைச் செய்றோம்.

உதாரணத்திற்கு ‘கோள்கள் திருவிழா’, ‘5 ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி’ உள்ளிட்ட நிகழ்வுகளைப் பண்றோம். அதாவது இதன்வழியே பூமி என்றால் என்ன?, செவ்வாய் கிரகம் என்றால் என்ன... என்பதை அது சம்பந்தமான படங்களையும், தகவல்களையும் சொல்லி கோள்கள் பத்தின விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்குறோம்.

இந்திய வானியல் இயற்பியல் நிறுவனம் நாங்கள் வைத்துள்ள தரவுகளை சரிபார்த்து, கூடுதல் விவரங்களை நமக்கு தந்து உதவுறாங்க. தவிர, கூடுதலாக அவங்க ரிசோர்ஸ் பெர்சனை வைத்து நமக்கு பயிற்சியும் அளிக்கிறாங்க.  

அதேபோல் சென்னையிலுள்ள இந்திய கணித அறிவியல் நிறுவனமும் நமக்கு சப்போர்ட் செய்றாங்க. அப்புறம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், கிண்டி பிர்லா கோளரங்கத்தில் இருக்குது. அங்க, ‘அறிவியல் பலகை’னு ஒரு அமைப்பு இருக்கு. அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக குமார் இருக்கார். அவருடன் இணைந்து ஏராளமான நிகழ்ச்சிகளைத் தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகள்ல செய்திட்டு இருக்கோம்.

இதுதவிர அஸ்ட்ரோ சயின்ஸ் கருத்தரங்கு இரண்டு நாள், மூணு நாள்னு நிறைய நடத்தியிருக்கோம். அப்புறம், தமிழ்நாட்டுல திருப்பத்தூர் மாவட்டம் காவலூர் வைனு பாப்பு வானவியல் ஆய்வகம், கொடைக்கானல் சோலார் ஆய்வகம், ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் ஆய்வகம்னு மூன்று முக்கியமான வானியல் ஆய்வகங்கள் இருக்குது.

இவை மூன்றும் மிகவும் புகழ்வாய்ந்தது. ஆனா, தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. இதனை பார்வையிட அஸ்ட்ரோ கிளப்பின் வழியே ஏற்பாடு செய்து கொடுக்கறோம்.
அடுத்ததா, முழு நிலவு, அமாவாசை போன்ற தினங்கள் ஒவ்வொரு மாதமும் வரும். சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படும். அதுகுறித்து விழிப்புணர்வு தர்றோம்.இப்ப பெண்கள் நிறைய பேர் ஆர்வமாக முன்வர்றாங்க. ஏராளமான பெண்கள் எங்க அஸ்ட்ரோ கிளப்பில் இணைஞ்சிருக்காங்க.

அவங்களே இரவு வான் நோக்கு நிகழ்வுகளை மாணவர்களுக்கு செய்து காட்டுறாங்க. பெரும்பாலும் எங்கள் முக்கிய உறுப்பினர்கள் அனைவரிடமும் டெலஸ்கோப் இருக்கு. அதன்வழியே எல்லா கோள்களையும் மக்களுக்குக் காட்டுறோம். சமீபத்தில் கோள்கள் அணி வகுத்து வந்தன. அப்ப நாங்க வீனஸ், ஜூபிடர், மார்ஸ், சனிக் கோள்களை எல்லாம் மக்களுக்குக் காட்டினோம்.

இன்றைக்கு செவ்வாய் தோஷம் இருக்குது, சனி பிடிச்சிருக்குனு மக்கள் தவறான நம்பிக்கையில் இருக்காங்க. இதிலிருந்து அவர்கள் விடுபடணும். அதற்காகவே சனி, செவ்வாய் கோள்கள்னா என்னனு வான் நோக்குதலின்போது சொல்றோம்.அரசாங்கம் செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக்கோள் அனுப்பி ஆராய்ச்சி செய்யுது. இதுபோன்ற விஷயங்களையும் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்குறோம். அப்புறம், பத்திரிகைகளில் வரக்கூடிய அறிவியல் கட்டுரைகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு தர்றோம்.

இப்ப மக்களிடையே நல்ல விழிப்புணர்வு வந்திருக்கு. இருபது ஆண்டுகளுக்கு முன்னாடி, சூரியகிரகணம் வரும்போது கிராமங்கள்லயும், நகரங்கள்லயும் வீட்டுக் கதவை அடைச்சு வச்சிடுவாங்க. அந்நேரம் உணவு சாப்பிடக்கூடாது, கிரகணம் முடிஞ்சதும் குளிச்சிட்டு சாப்பிடணும்னு இருந்தாங்க. 

ஆனா, இப்ப எல்லா மக்களும் சூரிய கிரகணத்தை பார்க்க விருப்பப்படுறாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் தவறான நம்பிக்கை குறைந்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். அவங்களுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்பது தெரிஞ்சு பார்ப்பதற்கு முன்வர்றாங்க.

வானியல் ஆர்வம் மக்களுக்கு வர வர, அதன் உண்மைத்தன்மை தெரியத் தெரிய அறிவியல் வளரும். அறிவியல் பூர்வமான மனப்பான்மை வளரும். அதை வளர்த்தெடுப்பது எங்கள் நோக்கம்...’’ என்கிறவரிடம், 1000 இடங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகம் குறித்து கேட்டோம். ‘‘இந்தத் திட்டத்தை சமீபத்தில் ஜனவரி 26ம் தேதி தொடங்கினோம். இப்ப பத்து மாவட்டங்கள்ல போயிட்டு இருக்கு. இது எப்படினா ஒரு பாக்ஸ்ல 20 கையடக்க கருவிகள் இருக்கும். அந்தக் கருவிகளைக் கொண்டு எங்கள் தன்னார்வலர்கள் கிராமப்புற மாணவர்களிடமும், மக்களிடமும் அறிவியலை சொல்லிக் கொடுப்பாங்க.

அதாவது இந்த பாக்ஸ்ல கோள்களைப் பார்வையிட ஒரு டெலஸ்கோப் (Telescope), ஸ்டார் சார்ட் எனப்படும் பிளானிஸ்பியர் (Planisphere), சூரியனைக் கொண்டு நேரத்தைக் கணிக்கும் சன்டயல் (Sundial), நிலவின் பிறையைப் பார்க்க மூன் ஃபேசஸ் (Moon phases), சோலார் கண்ணாடிகள் (Solar glasses), சிடி ஸ்பெக்ட்ரோஸ்கோப் (CD Spectroscope), கோள்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் இடையிலான கோண தொலைவை கண்டறிய உதவும் அஸ்ட்ரோலேப் (Astrolabe), பிளானட் கார்ட்ஸ், வானியல் நூல்கள் உள்ளிட்ட 20 கருவிகள் இருக்கும். இதனைக் கொண்டு நம் தன்னார்வலர்கள் அறிவியலை விளக்குவாங்க.  

தன்னார்வலர்களுக்கு நாங்க இணையவழியில் பயிற்சி அளிச்சிடுவோம். அதன்பிறகு அவங்க வீட்டில் அல்லது அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய பள்ளிக்கூடம், கல்லூரி, ஊர்ப்புற நூலகம்னு ஏதாவது ஒருஇடத்தில் மக்களையும், மாணவர்களையும் வரவழைத்து செய்து காட்டுவாங்க. வாரத்தில் ஒருநாள் இந்த வகுப்பை எடுப்பாங்க. இதைத்தவிர ‘யூத் அஸ்ட்ரானமி அண்ட் ஸ்பேஸ் சயின்ஸ் காங்கிரஸ்’னு முழுக்க கல்லூரி மாணவர்களுக்காக ஒரு நிகழ்வை ஆரம்பிச்சிருக்கோம். கல்லூரி மாணவர்கள் வானியல் சம்பந்தமாக ஏதாவது ஒரு தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி சமர்ப்பிக்கணும்.

இதில் எங்களுடன் இந்திய வானியல் இயற்பியல் நிறுவனம், இந்திய கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், ராமன் ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைஞ்சிருக்காங்க. இதனுடன் இந்தாண்டு 5 ஆயிரம் இடங்கள்ல அஸ்ட்ரானமி நிகழ்வு நடத்தணும்னு இலக்கு வச்சிருக்கோம்...’’ என முத்தாய்ப்பாக முடிக்கிறார்
ஜெ.மனோகர்.

பேராச்சி கண்ணன்