மலையாளத்தில் 95% படங்கள் ஃபெயிலியர்தான்!
மல்லுவுட்டில் வருகிறது சினிமா ஸ்டிரைக்
ஜூன் 1, 2025 அன்று மலையாள சினிமாவுக்கு மறக்க முடியாத வரலாற்று நாளாக மாறலாம். ஆம். அன்றைய தினம் ஒரு சில காரணங்களை முன்வைத்து மலையாள சினிமா உலகம் படப்பிடிப்புகளையும் தயாரிப்புகளையும் காலவரையின்றி நிறுத்த இருக்கிறார்கள். இதற்கு காரணமாக கழுத்தை நெரிக்கும் வரி மற்றும் நடிகர்களின் சம்பளம் என இரண்டு காரணங்களை முன் வைக்கிறார்கள்.  முழுமையான காரணம் என்ன... வரி பிரச்னை என்ன... நடிகர்கள் அப்படி என்ன சம்பளம் வாங்குகிறார்கள்... இந்த படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு நிறுத்தம் மாற்றத்தை கொண்டு வருமா... உள்ளிட்ட வினாக்களுக்கு விடை சொல்கிறார்கள் கேரள சினிமாவின் முக்கிய தயாரிப்புத் தரப்புகள்.  ‘‘ சென்ற ஆண்டு ‘ஏ ஆர் எம்’, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’, ‘பிரேமலு’, ‘ஆவேசம்’ உள்ளிட்ட ஒன்றிரண்டு ஹிட் படங்களைத் தவிர்த்து மற்றவை வசூல் ரீதியாக பெரிய அளவில் வருமானம் ஈட்டிக் கொடுக்கவில்லை...’’ என்று ஆரம்பித்தார் சுரேஷ்குமார்.இவர் 1978ல் ‘திறனோட்டம்’ என்னும் படம் மூலம் துணை இயக்குநராக தனது பயணத்தை துவக்கியவர். தனது ‘சூர்யோதயா கிரியேஷன்ஸ்’ மூலம் 30க்கும் மேலான மலையாள திரைப்படங்களை தயாரித்தவர்.
 நடிகர், கேரள மாநில கலாசார நல வாரியம் தலைவர் (2011 - 2016), கேரள திரைப்பட வர்த்தக சபைத்தலைவர் (2021 - 2023), இந்திய திரைப்படக் கூட்டமைப்பு துணைத் தலைவர் (2022 முதல்), கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலைவர் (2008 - 2010 மற்றும் 2014 - 2019), கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொது செயலாளர் (2010 - 2012), திருவனந்தபுரம் திரைப்படம் & டிவி கூட்டுறவு சங்கத் தலைவர், திருவனந்தபுரம் திரைப்பட சகோதரத்துவம் தலைவர்... என எண்ணற்ற பொறுப்புகளை வகித்தவர்; வகிப்பவர்.
‘‘பொழுதுபோக்கு வரி, பொருள் மற்றும் சேவை வரி ஆகிய இரண்டு வரிகளும் சேர்த்து ஒரு படத் தயாரிப்பில் 30% வரியாக மட்டுமே கட்ட வேண்டி இருக்கிறது.
அதேபோல ஒரு படத்தின் தயாரிப்புச் செலவில் 60% நடிகர்களுக்கான சம்பளமாக கொடுக்கப்படுகிறது. புதிய நடிகர்கள் மற்றும் ஓரிருண்டு படங்கள் நடித்த, இயக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சம்பளம் கேட்கிறார்கள்.
இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடு வேண்டும். நடிகர்களுக்கான சம்பளம் முன்பு போலவே தயாரிப்பாளர்களாலும் படத்தின் வசூல் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்பட வேண்டும். மலையாள சினிமாவின் மார்க்கெட் அடிப்படையில் கணக்கிட்டால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கேட்கும் சம்பளம் 10 மடங்கு அதிகமாக இருக்கிறது. மலையாளத் திரைப்படங்கள் கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டில் மட்டுமே வசூலிக்கிறது. ஏனைய மற்ற மொழிகள் அல்லது பான் இந்தியா மார்க்கெட் இன்னமும் மலையாள சினிமா காணவில்லை.
அப்படியிருக்க பான் இந்தியா சம்பளத்தை நடிகர்கள் கேட்கின்றனர். மற்ற படங்கள் நல்ல படம் என பெயர் வாங்கினால் கூட படம் வெளியான நாட்களில் பெரிய அளவில் வசூல் கிடையாது. மற்ற மாநிலங்களில் சினிமா ரசிகர்கள் மற்றும் மலையாள சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே இந்தத் திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். மற்றவை ஓடிடியில் பார்க்கப்பட்டுத்தான் கொண்டாடப்படுகின்றன.
ஓடிடி மார்கெட்டும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கிட்டத்தட்ட அடிமாட்டு விலைக்கு படத்தை கேட்கிறார்கள். ஒரு படத்தின் வசூல் மற்றும் பட்ஜெட் தாண்டி அதன் பிரபலம், டிரெண்ட் அடிப்படையில்தான் தற்சமயம் வாங்கப்படுகிறது. மற்ற மொழி சினிமா போல் இசை உரிமமும் இங்கே சரியாகச் சீரமைக்கப்படவில்லை.
இதனால் மலையாள சினிமா மார்க்கெட் ரீதியில் இன்னமும் தடுமாற்றத்துடன்தான் இருக்கிறது. இதையெல்லாம் சீர் செய்ய நடிகர்கள் ஒத்துழைக்க வேண்டும். தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள அவர்கள் முன்வந்தால் எளிமையான பட்ஜெட்டில் நல்ல வருமானம் ஈட்டும் படங்களை தயாரிக்கலாம். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கேரள திரைப்படப் பணியாளர்கள் சம்மேளனம் ஒன்றிணைந்துதான் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறோம். 2024ம் ஆண்டு மலையாளத்தில் 178 திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.110 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. 60% பணியாளர்கள் வீட்டில் பசியில் வாடுகிறார்கள். பலருக்கும் வேலை இல்லை.
இவை அத்தனையும் முன்வைத்து வரிகளை குறைக்கவும் நடிகர்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் வேண்டி அனைத்துத் தயாரிப்புப் பணிகளையும் திரையிடல்களையும் ஜூன் ஒன்று முதல் நிறுத்த மலையாள சினிமா முடிவு செய்து இருக்கிறது...’’ என்கிறார் சுரேஷ்குமார்.
‘‘வாரத்துக்கு மூன்றுக்கும் மேலான படங்கள் வெளியாவதும் இந்த இழப்புக்குக் காரணம்...’’ என்றபடி தொடர்ந்து பேச ஆரம்பித்தார் சசி அயன்சிரா. இவர் மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்ல... 15க்கும் மேற்பட்ட படங்களின் விநியோகஸ்தரும் கூட.
‘‘இந்த வேலை - பணி நிறுத்தம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் திரைப்படங்களை வெளியிடவும், அடுத்தடுத்து திரைப்பட வெளியீடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் உதவும்.
ஒரு படம் ஓடி இரண்டு நாட்களை கடப்பதற்குள் அதனுடன் வெளியான மற்ற படங்களை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் அல்லது இன்னொரு வாரம் முடிந்து அடுத்த படங்களுக்கான வெளியீட்டு வேலைகள் துவங்கி விடுகின்றன. இதில் தனியாக வந்தால் ஓரளவு வருமானம் ஈட்டும் படங்கள் வசூலை ஈட்ட முடியாமல் தத்தளிக்கின்றன.
இவற்றையெல்லாம் சரிசெய்ய இந்த இடைவேளை நிச்சயம் அவசியம். நடிகர்கள் பான் இந்தியா மார்க்கெட் அளவுக்கு தற்போது தங்கள் சம்பளத்தை நிர்ணயிக்கத் துவங்கிவிட்டனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான மார்க்கெட் நிலவரம் இருக்கும் பட்சத்தில் இந்திய அளவில் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளமும், வெறும் மலையாள சினிமாவில் வெளியாகப் போகும் படத்திற்கு
வாங்கும் சம்பளமும் எப்படி ஒன்றாக முடியும்?
இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. முன்பு போலவே படத்தின் வெளியீடு, நடிகர்களின் சம்பளம் மற்றும் மார்க்கெட் நிலவரம் என அனைத்தும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்தால்தான் செலவு செய்யும் பணத்திற்கு தகுந்த வருமானத்தை ஈட்ட முடியும்.
நடிகர்கள் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் தென்னிந்தியாவிலேயே கேரளாவில்தான் குறைவு. இங்கேயே இந்த நிலையெனில் மற்ற மொழிகளின் நிலை என்ன? நினைக்கவே பயமாக இருக்கிறது.மற்ற மொழிகளில் வாரத்துக்கு சுமார் எட்டு படங்கள் கூட வெளியாகின்றன. கேரளா சினிமா போல் மற்ற தென்னிந்திய மொழிகளும் இப்படியான முடிவுகளை எடுக்க வேண்டும்...’’ என்கிறார் சசி அயன்சிரா.
ஷாலினி நியூட்டன்
|