ஜென் Z தலைமுறையினரா... வேலைக்கு வேண்டாம் சாமி!



குடும்பம், நண்பர்கள், காதல், உறவு, திருமணம், சமூகப் பார்வை... என அனைத்திலும் பலதரப்பட்ட சிக்கல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் தற்போதைய இளம் தலைமுறையான ஜெனரேஷன் Z . 
போதாக்குறைக்கு 10ல் 6 நிறுவனங்கள் 2கே தலைமுறைப் பணியாளர்களை பணியமர்த்திய ஒரு சில மாதங்களில் வெளியேற்றுகிறார்கள் அல்லது வேலையில் எடுக்கவே தயக்கம் காட்டுகிறார்கள். நிறுவனத்தின் பதவி உயர்வுகளிலும் கூட இவர்களுக்கு வாய்ப்புக் கிடையாது என்கிறது அமெரிக்க இன்டெலிஜென்ட் ஆய்வு முடிவு.  

உண்மையில் என்ன பிரச்னை? இப்படியே சென்றால் இவர்களின் எதிர்கால நிலை என்ன ஆகும்? பொதுவாகவே 2கே தலைமுறையில் தென்படும் பிரச்னைகள் என்ன? என்ன தீர்வு ?
1000 அமெரிக்க நிறுவன உரிமையாளர்கள், முதலாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தி அமெரிக்காவின் பிரபல ஆய்வுக் குழுவான ‘intelligent.com’ ஆராய்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இன்றைய தலைமுறை பணியாளர்களிடம் பொதுவாகவே மூன்று பிரச்னைகள் இருப்பதாகவும் இது பணியிட சூழலையும், வேலையில் உற்பத்தியையும் பாதிப்பதாக தெரிவிக்கின்றனர். அந்த மூன்று பிரச்னைகள் இவைதான்.

சுற்றத்தால் உண்டான சுய ஊக்கமின்மை

பொதுவாகவே 2கே தலைமுறையிடம் சுயமாக தன்னைத் தானே தன்னம்பிக்கையாக உந்தித் தள்ளும் சக்தி குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் முந்தைய தலைமுறையில் நடந்த ஏற்ற இறக்கங்கள்தான். அதாவது 2008ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் இணைந்து தங்களது பெற்றோர்கள் மற்றும் மூத்த சந்ததியினர் பொருளாதார மற்றும் பண அடிப்படையில் ஏராளமான போராட்டங்களை சந்தித்ததை 2கே பார்த்தனர். 

இடையே இயற்கைச் சீற்றம், அதிகரித்த விலைவாசி, இதற்கிடையில் கொரோனா தாக்கம் வேறு இடையூறு செய்தது. மேலும் தொடர் பணியிடை நீக்கம்,  பணி உயர்வுக்காக பல வருட காத்திருப்பு, சம்பள உயர்வின்மை... இப்படி பலவற்றையும் கண்கூடாக பார்த்து இந்தப் போராட்டங்கள் தேவையா என்னும் மனநிலைக்கு இந்தத் தலைமுறையினர் மாறியிருக்கிறார்கள்.

உடன் இந்த கரியருக்கான போராட்டத்தில் கிட்டத்தட்ட வாழ்நாளில் சந்தோஷமாக இருக்க வேண்டிய வயது, வருடங்கள் அத்தனையும் செலவிட வேண்டிய நிலை இருப்பதை பார்த்ததன் வழியாக தங்களுக்குத் தாங்களே இப்படியான நீண்ட நாள் கடின உழைப்பு மூலம் கிடைக்கும் கரியர் மீதான நம்பிக்கை இல்லாமல் மாறி இருக்கிறார்கள்.

இதனை ஸ்கெப்டிசிசம் (Skepticism) என வரையறுக்கின்றனர் மனநலம் சார்ந்த நிபுணர்கள். அதாவது ஒன்றின் மீது நம்பிக்கை இன்மை அல்லது அதன் மேல் கேள்விகள் கேட்டுக்கொண்டே ஒதுக்கி வைக்கும் மனநிலை.

இதனை சரி செய்ய பெற்றோர்கள் தொடர்ந்து செய்த கடின உழைப்பால் கிடைத்த நன்மைகள் குறித்து அதிகம் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும். பணியிடத்தில் இருக்கும் சீனியர் பணியாளர்கள் தனக்குக் கிடைத்த இந்தப் பணியின் காரணமாக அவர்கள் அடைந்த நன்மைகள் என்ன என்பதை அதிகம் பேச வேண்டும்.

சுருக்கமாகச் சொன்னால் பெற்றோர்களும் சரி, சீனியர் பணியாளர்களும் சரி, உயரதிகாரிகளும் சரி... புலம்புவதை நிறுத்தினாலே இதற்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்கிறது உலக பிரபல டிலாய்ட் (Deloitte) ரிப்போர்ட்.

டிஜிட்டல் மொழி பேசும் தலைமுறை அமெரிக்க ஹார்வர்டு சட்டப் பள்ளி ஆய்வு தரவுகளின் முடிவுபடி 2கே தலைமுறையில் பலரும் படிப்பு, வேலை என சகலத்திலும் கொரோனா காலத்தில் ஒரு மாற்றத்தை சந்தித்தார்கள். 

அதாவது பணியிடத்துக்காக தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ளும் கால அவகாசம் அவர்களுக்கு மிகக் குறைவாக இருந்தது.

நிறுவனங்களுக்கும் பணியிட சூழல் குறித்த பயிற்சிகள் அல்லது பணிக்குத் தேவையான திறமை சார்ந்த வகுப்புகளை எடுத்து ஜென் Z தலைமுறையினரை வேலைக்கு எடுக்கும் நிலை
இல்லாமல் போனது.

இதனால் குறைந்த சம்பளத்தில் பணியாளர்கள் என்கிற போக்கில் அனுபவம் இல்லாத பணியாளர்களை எந்தக் கேள்வியும் இல்லாமல் சேர்க்கத் துவங்கினார்கள்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவம் வாய்ந்த முந்தைய தலைமுறைப் பணியாளர்கள்தான். புதிதாக இணைந்த பணியாளர்களுக்கு வேலையும், சம்பளமும் கிடைக்க... ஏற்கனவே அதிக சம்பளத்தில் இருந்தவர்களுக்கு பணியிடை நீக்கம் நிகழ்ந்தது. 

இதன் காரணமாக பணியிடச் சூழலில் எப்படிப் பேச வேண்டும்... எப்படி நடந்து கொள்ள வேண்டும்... என்ன உடை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்... என்கிற எந்தப் பயிற்சியும் இல்லாமல் நேரடியாக வேலைக்கு வந்தனர்.

இவர்கள் அத்தனை பேருமே டிஜிட்டல் பிறப்பிடத்தைக் கொண்டவர்கள் என்பதால் அத்தனை தகவல்களும் whatsapp அல்லது ஏதேனும் டிஜிட்டல் சார்ந்த தளத்தில் குறுஞ்செய்திகள் ஆக அல்லது சுருக்கப்பட்ட வார்த்தைகளாக அனுப்பும் பழக்கத்திற்கு மாறி இருக்கிறார்கள். எனவே இவர்களின் மொழி, டிஜிட்டல் லேங்வேஜாக -  எதுவும் யாருக்கும் புரியாமல் அவர்களுக்கு மட்டுமே புரிந்த மொழியில் இருந்தது இன்னொரு பிரச்னை.

ஒரு வேலைக்கு வந்தால் அங்கே அலுவலக சந்திப்புகள், கலந்துரையாடல்கள், கஸ்டமர்களிடம் பக்குவமாக மற்றும் பணிவாக பேச வேண்டிய சூழல்... இப்படி அத்தனையும் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இத்தலைமுறையிடம் இல்லை. 

எதுவானாலும் உடனுக்குடன் அந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன மொழி தோன்றுகிறதோ அதைத்தான் பேசுவார்கள்; அதைத்தான் குறுஞ்செய்திகள் ஆகவும் அனுப்புவார்கள். ஆக பணியிட கட்டுப்பாடுகளுக்கான மொழிகளை கற்றுக் கொள்ள இந்த 2கே தலைமுறை தவறியிருப்பது இரண்டாவது காரணம்.

அதிக நேரத்தை கேட்கும் பணியிட சூழலை ஒதுக்கும் தலைமுறை

2023ம் ஆண்டு டிலாய்டு ஆய்வின் முடிவு 50% ஜெனரேஷன் Z தலைமுறையினர் முந்தைய தலைமுறை கடைப்பிடித்த ‘Work Life Balance’ முறைகளை முற்றிலுமாகவே விரும்புவதில்லை என்கிறது.

அதாவது வாரத்தில் 5 முதல் 6 நாட்கள் வேலை... அதுவும் பகல் நேரம் முழுக்க பணியிடத்திலேயே கழிப்பது... வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை... அதில் தனிமனித வாழ்க்கை.

இந்தக் கடின உழைப்பையும் வேலைக்காகக் கொடுக்கும் அதிக நேரத்தையும் 2கே தலைமுறை கேள்வி கேட்கத் துவங்கியது. ‘இப்படி என்னுடைய இளமைக்காலம் முழுக்க பகல் நேரத்தை பணியிடத்திலேயே கழித்தால் எனக்கான வாழ்க்கை எப்போது... எனக்கான தனிமனித வாழ்க்கை எப்படி வாழ்வது... மொத்த வயதையும் தொலைத்துவிட்டு 45 வயதிற்கு மேல் நான் எவ்வளவு பணம் சேர்த்தாலும் என்ன வாழமுடியும்..?’

இப்படியான கேள்விகள் அவர்களிடம் உருவாகி இருக்கிறது. ஆனால், இந்தக் கேள்விகள் கேட்காமல் தங்களது தனிமனித வாழ்க்கையைப் பற்றி பொருட்படுத்தாமல் முந்தைய தலைமுறையினர் ஓடினார்கள். அதற்கும் இன்னொரு காரணமாக அன்று 90% பெண்கள் வீட்டில் இருப்பர். ஆண்கள் வேலைக்குச் செல்வார்கள், வீடு திரும்பும் பொழுது குழந்தைகளும் மனைவியும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான குடும்ப நேரம் என்பது சீராக கிடைத்தது.

ஆனால், இன்று ஆண் பெண் இருவரும் படிப்பு வேலை என சரிசமமாக முன்னேறும் நிலையில் யாரேனும் ஒருவர் வீட்டிற்கு வந்தால் இன்னொரு துணை தாமதமாக வருவது அல்லது வேலைப் பளு காரணமாக சோர்வாகி தனக்கான மகிழ்வான நேரத்தில் கலந்துகொள்ளாமல் தங்களை ஒதுக்கி வைத்துக் கொள்வது என இருப்பதும் இன்னொரு காரணம். இதனாலேயே மிக விரைவில் எப்படியாவது சம்பாதித்து தனக்குக் கிடைத்திருக்கும் இளமையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்கிற மனநிலையால் இளம் தலைமுறையினர் வேலையில் இருந்து வெளியேறுகிறார்கள்.

இப்படி மூன்று முக்கிய காரணங்கள் இன்றைய தலைமுறை பணியிடத்தில் சந்திக்கும் பிரச்னைகளை ஆய்வுப் பட்டியலிடுகிறது.

இந்நிலையில் எதிர்கால சந்ததியை எப்படி பணியிடங்களுக்கு ஏற்ப மாற்றுவது? என்ன செய்தால் இந்த நிலை மாறும்? ஆலோசனைகள் கொடுக்கிறார் ‘லைஃப் கோச்’ கார்ப்பரேட் டிரைனரான ஜெயந்தி முத்தையா. ‘‘நெருக்கடியான காலகட்டத்தில்தான் ஜெனரேஷன் Z படித்து. அதாவது பரீட்சை எழுதினாலும் இல்லாவிட்டாலும் ‘தேர்ச்சி’ என்பதற்குப் பழக்கமாகி விட்டார்கள். 

எதிலும் உடனடியாக அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் ஒரு சூழல் இருந்தது. அதாவது எதுவானாலும் உடனுக்குடன் ஒரு மெசேஜ் மூலமாகவோ அல்லது உடனடியான போன் அழைப்பு / வீடியோ கால் மூலம் எதையும் அப்போதே செய்துகொள்ளும் வசதியுடன் அதிகம் பழக்கமானார்கள்.  

படிக்கும் படிப்பே கைகளில் இருக்கும் சின்ன மொபைலில் கிடைக்கும் என்கிற சூழலின் விளைவுதான் இன்று பணியிடத்திலும் அதே நிலையை எதிர்பார்க்க வைக்கிறது.படிப்பையே வீட்டில் இருந்து படித்தவர்கள், ‘வேலையை வீட்டிலிருந்து பார்க்க முடியாதா? ஏன் இப்படி 8 முதல் 12 மணி நேரம் நாங்கள் வேலையில் உட்கார வேண்டும்? உங்களுக்கு வேலை நடந்தால் போதும், அதை எங்கே எப்படி செய்தால் என்ன? நாங்கள் என்ன உடை உடுத்தினால் உங்களுக்கு என்ன...’ இப்படி பல கேள்விகள் கேட்கும் தலைமுறையாக மாறி இருக்கிறார்கள்.

2020 முதல் 2025 காலகட்டத்தில் பணிக்கு வந்த ஜெனரேஷன் Z , நிறுவனங்கள்  மாற்றம் மூலம் தங்களது சம்பளத்தை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்த்திக்கொள்ளும் திறமையை கையாளத் துவங்கினர். ஆனால், அதற்கேற்ப வேலை செய்வதில்லை. இவர்கள் வாழ்க்கை முறையில் இருக்கும் சிக்கல்களுக்கு அவர்களை மட்டுமே நாம் குறை சொல்லிவிட முடியாது. பிறக்கும்போதே அனைத்து வசதிகளுடன் பிறந்திருக்கிறார்கள். 

அம்மா துவைப்பதை பார்த்து அவருடன் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிற நிர்பந்தம் முந்தைய தலைமுறைக்கு இருந்தது. இப்போது வாஷிங் மெஷின்தானே துவைக்குது, அடுப்பு சமைக்குது, திரையரங்கையே டிவி வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டது...

இப்படி எண்ணுகிறார்கள்.இதற்கு ஒரே தீர்வு படிக்கும் பள்ளியில் இருந்து கடின உழைப்பு, அதன் மூலம் கிடைக்கும் எதிர்கால வாழ்க்கை குறித்து பாடங்கள், வகுப்புகள் அதிகரிக்க வேண்டும். சரியான பயிற்சிகள் கொடுத்து நிறுவனங்கள் பணியாளர்களை வேலையில் அமர்த்த வேண்டும்.

முக்கியமாக முந்தைய அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு எந்த அளவுக்கு நிறுவனங்கள் அங்கீகாரம் கொடுக்கிறதோ அதைத்தான் அடுத்து வரும் தலைமுறையினர் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்வார்கள். பெற்றோர்களும் புலம்புவதை விட்டுவிட்டு எதையும் வார்த்தைகளில் வகுப்பெடுக்காமல் செய்முறை பயிற்சியாக வீட்டில் சிறு வேலைகள் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்...’’ அழுத்தமாக சொல்கிறார் ஜெயந்தி முத்தையா.

ஷாலினி நியூட்டன்

Visuals: AI