புற்றுநோயை வென்று ஜிம்முக்கு செல்லும் 76 வயது இரும்பு மனுஷி!



வயது ஆக ஆக நம் உடலும், மனமும் வேகத்தைக் குறைத்து சோர்வாகத் துவங்கிவிடும். இதில் நீரிழிவு, தைராய்டு, உடல் பருமன், இதயப் பிரச்னை, இரத்த அழுத்தப் பிரச்னைகள் சேர்ந்தால் இன்னும் நம் வாழ்வியலில் சிக்கல் உண்டாகும்.
மருந்து , மாத்திரிகைகள், மருத்துவமனை இதற்கிடையில் பிடித்த உணவுகளையும் ஓரம் கட்ட வேண்டிய சூழல் மேலும் மன உளைச்சலைக் கொடுக்கும். ஆனால், கேரளா எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த பி.பி. சாந்தகுமாரி 76 வயது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று அத்தனையும் கடந்து ஆரோக்கியமாக இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?!

உண்மைதான். பி.பி.சாந்தகுமாரி கொச்சியில் உள்ள இந்திய மசாலா வாரியத்தில் (Indian Spices Board) பணியாற்றி ஓய்வுபெற்றவர். திடீரென தனது மார்பகத்தில் வித்தியாசமான மாற்றங்களை கவனித்தவர் பரிசோதனையில் அவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்திருக்கிறது. உடனடியாக கீமோதெரபி செய்தாக வேண்டும், இல்லையேல் உயிருக்கே ஆபத்து என்கிற நிலை உருவாக சாந்தகுமாரியின் குடும்பத்தார் அனைவரும் தீரா சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால், சாந்தகுமாரி இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவர் ஆலோசனைகளை தொடர்ந்து பெற்று கீமோதெரபிக்கு மாற்று என்ன என யோசிக்கத் துவங்கினார். அவருடைய தேடலுக்கு பதில் கிடைத்தது. 

யோகா, இயற்கையான மசாஜ், எண்ணெய்க் குளியல்கள், வெப்பக் குப்பிகள் தெரபி என பழங்கால மருத்துவத்தை தேர்வு செய்தார் சாந்தகுமாரி.

எனினும் புற்றுநோய்க்கு முதல் சிகிச்சையாக அறுவை சிகிச்சை மூலம் மார்பகங்களை நீக்க வேண்டும். அதன்பிறகு மீண்டும் புற்றுநோய் வராமல் இருக்க தொடர்ந்து கீமோ தெரபி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மார்பக நீக்கத்திற்குப் பிறகான ரேடியேஷன் கீமோதெரபியைதான் சாந்தகுமாரி தவிர்த்து ஆயுர்வேத முறைகளுக்கு தன்னை மாற்றிக் கொண்டார். அத்தனையும் இயற்கையான பழங்கால கேரள மருத்துவமுறைகள், உணவுப் பழக்கங்கள் உடன் யோகா, ஹீலிங் தெரபிகள் எடுத்துக் கொண்டார். 

‘‘2002ம் ஆண்டு இந்த சிகிச்சை எடுத்துக்கிட்டேன், இப்போ 22 வருடங்கள் ஓடிடுச்சு. என்னால் இப்ப ஜிம்மில் வெயிட் கூட தூக்க முடியும்...’’ பெருமையுடன் சொல்கிறார் சாந்தகுமாரி. ‘‘என் கணவர் சி.ஆர்.என்.பனிக்கர். என்னுடைய எந்த முடிவுக்கும் செவி சாய்த்து பக்கபலமாக நின்றார். உண்மையில் அவர் கொடுத்த ஊக்கம்தான் இன்று நான் இவ்வளவு வலிமையுடன் நிற்கக் காரணம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். ஆனால், இறக்கும் நொடி வரை எனக்கு அவர் கொடுத்த ஊக்குவிப்பு, அவருக்குப் பிறகு என் மகள்கள் இருவர் ஷாலினி ராக்கேஷ் மற்றும் மாலினி எஸ் ஒன்றிணைந்து என்னை பாதுகாத்து வருகிறார்கள். 

இருவரும் என் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறை எனக்கே என் மீது நான் காட்டியதில்லையோ எனத் தோன்றும்...’’ நெகிழ்கிறார் சாந்தகுமாரி. சாந்தகுமாரி தனது புற்றுநோய் முழுமையாகக் குணமான பிறகும் சும்மா இல்லை. தனது மகள் ஷாலினியுடன் இணைந்து திருப்புனித்துறாவில் இருக்கும் ஜிம்மிற்கு தினமும் செல்கிறார்.

அவருக்கு பயிற்சியாளராக அஜீஸ் மற்றும் சாந்தகுமாரியின் மகள் ஷாலினி இருவரும் உதவ சாந்தகுமாரியின் உடல் முன்பை விட இன்னும் ஆரோக்கியமாகவும்,
வலிமையாகவும் மாறியிருக்கிறது. நோயிலிருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் தனது வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், மன வலிமையுடனும் வாழ முடிவு செய்து கொச்சியில் நடக்கும் அத்தனை மாரத்தான் போட்டிகளிலும் கலந்து கொள்கிறார் சாந்தகுமாரி.

பல புற்றுநோய் மருத்துவ மனைகள், மறுவாழ்வு மையங்களில் பேச்சாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்படுகிறார். ‘‘ஆரம்பத்தில் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய அம்மா தயக்கம் காட்டினாங்க. ஆனால், ஒன்றிரண்டு முறை நான் வற்புறுத்தி அழைத்துச் செல்லத் துவங்கினேன். அவங்க உடலிலும் மனதிலும் மாற்றங்கள் உருவாவதையும், நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதையும் அவங்களே கண்கூடாகத் கவனித்து ரசிக்க ஆரம்பிச்சாங்க.  

இந்த வயதிலும் தன் உடல் அவர் சொல்வதைக் கேட்டு நடப்பதைப் பார்த்து ஆச்சரியமடைஞ்சாங்க. இப்போதெல்லாம் நானே ஒண்ணு ரெண்டு நாட்கள் ஜிம்மிற்கு செல்லவில்லை என்றாலும் என் அம்மா நிறுத்துவதில்லை...’’ அம்மா குறித்து பெருமையாக சொல்கிறார் மகள் ஷாலினி. ‘‘புற்றுநோயுடன் போராட உடல் வலிமை மட்டும் போதாது, மன வலிமையும் அவசியம். அதை எனக்குக் கொடுத்தது ஆரோக்கியமான உணவும், ஜிம் உடற்பயிற்சியும்தான்.

வயது வெறும் நம்பர்தான். எந்த ஒரு நல்ல காரியத்தைத் துவக்கவும் வயது ஒரு தடையே கிடையாது. இப்ப இந்த நொடில கூட நீங்க ஆரம்பிக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுக்கு சாத்தியப்படும்...’’ முகம் மலரச் சொல்கிறார் இந்த 76 வயது இரும்பு மனுஷியான பி.பி.சாந்தகுமாரி.

கவின்