இந்தியாவின் முதல் தனியார் அமரர் அறை!



இந்தியாவின் ஆம்புலன்ஸ் மனிதர் எனப் பெயரெடுத்தவர் சாந்தகுமார். கடந்த 1981ம் ஆண்டே சென்னையில் முறைப்படுத்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் சேவையை முதன்முதலில் தொடங்கி, அதில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தியவர்.
அதுமட்டுமல்ல; உலகில் முதன்முதலாக இறந்த உடல்களை வைக்கும் ஃப்ரீசர் பாக்ஸை கண்டுபிடித்தவரும் இவர்தான். ஆம்புலன்ஸ் சேவையில் ‘ஃபிளையிங் ஸ்குவாடு’ என்ற பெயரில் தனித்துவமாகப் பிரகாசிப்பவர். பல்வேறு விவிஐபிகள் மறைவின்போது ஃப்ரீசர் பாக்ஸும், இறுதி ஊர்வல ஆம்புலன்ஸ் வண்டியும் அனுப்பி பலரின் கவனம் பெற்றவர்.

கடந்த 23.9.2022ல் ‘குங்குமம்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியின் நிறைவில் தன்னுடைய கனவு தனியார் மார்ச்சுவரி தொடங்குவது என்றும், அதற்காக அரசிடம் விண்ணப்பம் கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.அவர் சொன்னதுபோலவே இதோ இந்தியாவில் முதல்முறையாக தனியார் மார்ச்சுவரியை தொடங்கி புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார் சாந்தகுமார்.

சென்னை கிழக்கு அண்ணாநகரின் நியூ ஆவடி சாலையில் இருக்கிறது இந்த அரசு அங்கீகாரம் பெற்ற ‘லெவல் ஒன் மார்ச்சுவரி வித் ஃபியூனரல் ஹோம்’. அதாவது அமரர் அறையுடன் கூடிய இறுதிச் சடங்கு மற்றும் அஞ்சலி செலுத்தும் இடம். இதற்கு ‘ஃபிளையிங் ஸ்குவாடு ப்ராமிஸ்’ எனப் பெயர் வைத்துள்ளார் சாந்தகுமார்.
கீழே அலுவலகத்துடன் கூடிய அமரர் அறையும், மாடியில் இறுதிச் சடங்கு அறையும் உள்ளன. இதற்குள் செல்லும் எவருக்கும் நிச்சயம் ஓர் அமரர் அறைக்குள் வந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தாது. ஏனெனில், இது முழுவதும் குளிரூட்டப்பட்ட, 99.99 சதவீத ஜெர்ம்ஸ் ஃப்ரீயுடன்கூடிய ஓர் கார்ப்பரேட் அலுவலகம்போல இருப்பதுதான்.   

‘‘இப்ப சென்னை மாதிரியான நகரங்கள்ல ஃப்ளாட் கலாசாரம் பெருகிடுச்சு. பசங்களும் வெளிநாடுகள்ல வேலைகள் செய்றாங்க. அதனால, அவங்க வீட்டுகள்ல யாராவது இறந்தால் அவங்க அங்கிருந்து வரும்வரை மூணு நாட்கள் உடலை வைக்கமுடியாது. பக்கத்து வீடுகள்லயும் வேலைகள் நடக்காது.இழப்பு நடந்த வீட்டிலும் ரெண்டு நாட்களுக்கு எதுவும் செய்யமுடியாது. அப்ப மார்ச்சுவரியைத் தேடுவாங்க.

இன்னைக்கு சென்னையாகட்டும் அல்லது தமிழ்நாடு ஆகட்டும் சரியான மார்ச்சுவரி யார்கிட்டயும் கிடையாது. அதனால ஒண்ணு அவங்க அரசு மருத்துவமனைக்குப் போகணும். அல்லது பெரிய தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லணும்.அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனால் நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. அதேபோல பெரிய தனியார் மருத்துவமனைகளின் மார்ச்சுவரிகளில் வைக்க வாடகை அதிகம். அதேநேரம் அங்க எல்லா நேரமும் பார்க்கவிடமாட்டாங்க.

உதாரணத்துக்கு, இறந்தவரின் மகனோ, மகளோ வெளிநாட்டுல இருந்து இரண்டு நாட்கள் கழிச்சு இரவுல வருவாங்க. அப்ப உடனே பார்க்கணும்னு சொன்னால் அனுமதிக்கமாட்டாங்க. காலையில் வாங்கனு சொல்வாங்க. அவங்க விதிமுறைகள் அப்படி.இதெல்லாம் நாங்க பார்த்து பார்த்து அவங்க துயர் துடைக்கணும்னு நினைச்சோம். இதுதான் இந்தத் தனியார் மார்ச்சுவரி ஆரம்பிப்பதற்கான நோக்கம்...’’ என்ற சாந்தகுமார் நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘அரசுகிட்ட தனியார் மார்ச்சுவரிக்கான அனுமதி கேட்டோம். அவங்க பரிசீலனை பண்ணி சுடுகாட்டிற்குள் இடம் தரலாம்னு சொன்னாங்க. ஆனா, இரவில் உறவினர்கள் அங்கு வந்து பார்ப்பது சிரமம். அதனால் வெளியே சாலையின் ஓரத்தில் கொடுங்கனு கேட்டேன். அப்படியாக இந்த அமரர் அறை உருவானது.

இதை நாங்களும் சென்னை பெருநகர மாநகராட்சியும் ஃபார்ட்னர்ஷிப்ல பண்றோம். அவங்க இடம் தந்தாங்க. நாங்க பில்டிங் அமைச்சிருக்கோம். மாத வாடகைதான். ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 40 ஆயிரம் ரூபாய் கட்டணும். மற்றபடி மின்சாரக்
கட்டணம் எல்லாம் நாங்க பார்த்துக்கணும்.

அப்புறம், இதுக்கான ஒருநாள் கட்டணமாக எங்களை முடிவு பண்ணச் சொன்னாங்க. நாங்க 3 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கலாம்னு சொன்னோம். அவங்க கட்டுப்படியாகுமானு கேட்டாங்க. ‘எனக்கு இது போதும் சார். இதை நான் லாப நோக்கில் பண்ணல. மக்களின் பிரச்னையை நாங்க தினமும் பார்க்குறோம். அவங்க கஷ்டத்தைப் போக்கவே செய்றோம்’னு
சொன்னேன். பாராட்டினாங்க...’’ என்றவர், உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்.

‘‘இது அமரர் அறை. நாங்க பிணம்னு சொல்றதில்ல. ஏன்னா, அது ஓர் ஆத்மா. அதனால, அமரர் அறைனு உச்சரிக்கிறோம். இங்க பத்து உடல்களை பராமரிக்கிற மாதிரி ஃப்ரீசர் பாக்ஸ் வச்சிருக்கோம். பத்து உடல்களுக்குத்தான் இப்ப அனுமதியும் தந்திருக்காங்க.

நார்மலாக ரெண்டு நாட்களுக்குப் பிறகு எம்பாமிங் பண்ணுங்கனு சொல்வாங்க. அதாவது உடலைப் பதப்படுத்துறது. அந்தக் கஷ்டத்தை நாங்க வாடிக்கையாளர்களுக்கு வைக்கக்கூடாதுனு நினைச்சோம்.அதனால, எம்பாமிங் பண்ணாமலேயே முப்பது, நாற்பது நாட்கள்னு லிமிட் இல்லாமல் அந்த ஆத்மாவை இங்க வச்சு பாதுகாக்கலாம். அந்தளவுக்கு மைனஸ் 25 டிகிரி வரை கொடுக்குறோம். அந்த டிகிரியில் இந்த ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கும்போது ஆத்மா எந்த சிதைவும் இல்லாமல் அப்படியே இருக்கும்.

எப்படி நாங்க அவங்ககிட்ட இருந்து வாங்கிட்டு வந்தோமோ அப்படியே கொடுப்போம். அந்த ஆத்மாவும் வாடாது. அவங்களுக்கு போட்ட பூமாலையும் வாடாது. அதனால்தான் இதை ‘ஃபிளையிங் ஸ்குவாடு ப்ராமிஸ்’னு சொல்றோம்.

அடுத்து இந்த ஃப்ரீசர் பாக்ஸ்ல கேமிரா வைக்க இருக்கோம். இதற்கான லிங்க்கை அவங்க உறவினர்களிடம் கொடுத்திடுவோம். அவங்க வெளிநாட்டுல இருந்தே உடலைப் பார்க்கலாம். பிறகு, உறவினர்கள் வெளிநாட்டுல இருந்து எந்நேரம் வந்தாலும் நாங்க அனுமதிப்போம்.

அப்புறம் மேலே இறுதிச் சடங்கு மற்றும் அஞ்சலி செலுத்துகிற இடத்தை உருவாக்கியிருக்கோம். இப்ப வெளிநாடுகள்ல எல்லாம் இறுதிச் சடங்கு அறைனு தனியாகவே இருக்கும். அதை ஏன் இங்க வைக்கக்கூடாதுனு தோணுச்சு.ஏன்னா, வீட்டுல இறுதிச் சடங்கு முடிச்சபிறகு சிலர் பார்க்கணும்னு விரும்புறாங்க. அஞ்சலி செலுத்த நினைப்பாங்க. அதுக்காக இங்க மாடியில் அறை உருவாக்கினோம். இங்க கடைசியாக அஞ்சலி செய்ய விருப்பப்படுறவங்க வந்து செய்யலாம்.

அவங்க வீட்டுல இருந்து ஃப்ரீசர் பாக்ஸ்ல கொண்டு வந்து மேல வச்சிடுவோம். இதுக்காக 100 சேர்கள் போட இருக்கோம். உட்கார்ந்து ஃப்ரீயா அஞ்சலி செலுத்தலாம். தேவைப்பட்டால் சடங்கும் செய்யலாம்.இதுக்கு பின்னாடி எரியூட்டும் மையம் இருக்கு. அங்க எரிச்சிட்டு அந்த அஸ்தியை பின்னாடி கங்கையில் கரைக்கணும், காவிரிக்குக் கொண்டு போகணும்னு நினைச்சால் அதுக்காக லாக்கர் தனியாக வச்சிருக்கோம். எவ்வளவு நாள் வேணும்னாலும் இதுல வைக்கலாம். இதுக்கு தனியாக கட்டணம் எல்லாம் நிர்ணயிக்கல.

அதேபோல, கஸ்டமர் இங்க வந்தால் அமரர் அறை என்கிற உணர்வே வரக்கூடாது. அதனால, 99.99 ஜெர்ம்ஸ் ஃப்ரீ வச்சிருக்கோம். அதாவது எந்த வைரஸ், பாக்டீரியா இல்லாத இடமாக இது இருக்கும். அதுக்கான நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தியிருக்கோம்.இதையெல்லாம் வருமானத்திற்காக செய்யல. எங்க சேவைகளை பக்காவாக தரணும். அப்புறம், அந்த ஆத்மாக்கள் நம்மை ஆசீர்வதிக்கணும். அவ்வளவுதான்...’’ என்ற சாந்தகுமார், பல வெளிநாடுகளுக்குச் சென்று இதற்கான மாடலைப் பார்த்து வந்துள்ளார்.

‘‘இந்தியாவுல இதுதான் முதல் அமரர் அறை. உலக அளவில் எல்லா நாடுகளிலும் இருக்கு. வெளிநாடுகள்ல அந்த ஆத்மாவை வீட்டிற்குக் கொண்டு போறதில்ல. ஆஸ்பத்திரியிலிருந்து நேராக ஃபியூனரல் ஹோமிற்குக் கொண்டு போய் ஸ்டோர் பண்ணிடுவாங்க. 

பிறகு, அங்கேயே இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிச்சிட்டு அடக்கம் பண்ணிடுவாங்க.நாம அப்படியில்ல. ஆஸ்பத்திரியிலிருந்து நேராக வீட்டுக்குக் கொண்டு போய் அங்கே சடங்குகள் செய்வோம். பிறகு, சுடுகாட்டில் சடங்குகள் நடக்கும். அப்புறம் எரியூட்டுவோம்.

ஆம்புலன்ஸ் சர்வீஸ் கேட்குறவங்க இந்த மாதிரி ஆத்மாவை வைப்பதற்கான சர்வீஸ் செய்யக்கூடாதா... எல்லா சேவைகளையும் ராயலாக தர்றீங்க... இந்தக் கான்செப்ட்டை ஏன் விட்டீங்கனு கேட்டாங்க. அப்ப அரசுகிட்ட அனுமதி கேட்டிருக்கோம்னு சொன்னோம்.2021ல் அரசிடம் அனுமதி கேட்டோம். 

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி தந்தாங்க. இதிலும் டெண்டர் விட்டாங்க. ரெண்டு பேர் கலந்துகிட்டோம். இதுக்காக அரசு சில விதிமுறைகள் வச்சிருந்தாங்க. நாங்க எல்லா சான்றிதழ்களையும் கொடுத்து தேர்வானோம்.

இந்த மாடல் எல்லாம் வெளிநாடுகளைப் பார்த்தே செய்தேன். அங்க நிறைய நண்பர்கள் இருக்காங்க. அவர்கள் மூலம் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பாக பாலி, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று பார்த்தேன். இப்ப அதைவிட இங்க நாங்க ரொம்ப சிறப்பாகவே செய்திருக்கோம்.

இதுக்கு முதல்ல நான் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி.என்.பிரகாஷ் சாருக்கே நன்றி சொல்லணும். அவர்கிட்ட பேசும்போது இந்த விஷயத்தை சாதாரணமாகச் சொன்னோம். உடனே அவர் அப்போது சென்னை பெருநகர கமிஷனராக இருந்த ககன்தீப்சிங் பேடி சாருக்கு போன் செய்தார்.அவர் அடுத்த நிமிடமே அந்தக் கருத்தை உள்வாங்கி நடவடிக்கை எடுத்தார். 

இப்ப கமிஷனர் ராதாகிருஷ்ணன் சார் இடத்திற்கு அனுமதி கொடுத்தார். இவங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்...’’ என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்ட சாந்தகுமார், எதிர்காலத் திட்டம் பற்றி பேசினார்.

‘‘இப்ப இரண்டு கேஸ் இதுல பண்ணியிருக்கோம். முதல் ஆத்மா டாக்டர் அமரேசன் சார். இவர் சிறுநீரகவியல் மருத்துவர். எம்ஜிஆருக்கு சிறுநீரகப் பிரச்னைக்கான சிகிச்சை அளிச்சவர். அவர் சமீபத்தில் தவறிட்டார். அவரின் உறவினர்கள் வெளிநாட்டில் இருந்தாங்க. அவர் ஆத்மாவை இங்க இரண்டு நாட்கள் வச்சிருந்தோம். 

அடுத்து இன்னொருவர் ஆத்மாவை அவங்க உறவினர்களின் வருகைக்காக வச்சோம். எல்லோருக்குமே ரொம்ப திருப்தி.இனி, அடுத்தகட்டமாக செல்லப் பிராணிகளுக்கு பண்ணலாம்னு இருக்கோம். ஏற்கனவே செல்லப் பிராணிகளுக்கு இறுதி ஊர்வல ஆம்புலன்ஸ் வச்சிருக்கோம். இப்ப இதேபோல செல்லப் பிராணிகளுக்கும் மார்ச்சுவரிக்கு அனுமதி கேட்டிருக்கோம்.

பொதுவாக செல்லப் பிராணிகளை எப்படி அடக்கம் பண்ணணும், தகனம் செய்யணும்னு தெரியாமல் மக்கள் முழிக்கிறாங்க. அதுக்கு ப்ளூ கிராஸ் இருக்குது. ஆனா, அது பலருக்குத் தெரியிறதில்ல. அதனால, எங்கள மாதிரி ஆட்களிடம் சொன்னால் அடக்கமோ, தகனமோ செய்து தருவோம். இப்ப நாங்க அந்த ஃபீல்டைத் தொட்டுட்டு இருக்கோம். ஏன்னா, மனித இறப்பைவிட செல்லப் பிராணிகளின் இறப்பு ரொம்ப கஷ்டமான சூழலாக இருக்கு.

இன்னைக்கு இருக்கிற வெளிநாடு கலாசாரத்துல அப்பா, அம்மாவை தனியாக விட்டுட்டு பசங்க வௌிநாடு போயிடுறாங்க. தனியாக இருக்கிற அவங்களுக்கு செல்லப் பிராணிகள்தான் துணையாக இருக்குது. அது இறந்தால் அதன் இழப்பை தாங்கிக்கிற சக்தி அவங்ககிட்ட இருக்கிறதில்ல.அதை அவங்ககிட்ட இருந்து வாங்கி அடக்கம் பண்ணவே நாங்க படாதபாடு படுகிறோம். சமீபத்துல 85 வயசு உள்ள ஒரு அம்மாவின் பக் நாய் இறந்திடுச்சு. 

அதை அவங்ககிட்ட இருந்து கலெக்ட் பண்ண ஒரு நாளாச்சு. அவங்க அதை தரவேமாட்டேன்னு அடம்பிடிக்குறாங்க. ‘இல்லங்க... நாற்றம் வர ஆரம்பிச்சிடுச்சு, கொடுத்திடுங்க’னு சொல்றோம். குடியிருப்புல உள்ளவங்களும் சொல்றாங்க. ஆனா, அவங்க இது என் பெட்னு சொல்லி அழுறாங்க.

அந்தமாதிரி சூழ்நிலையில் இதுமாதிரி செல்லப் பிராணிகளுக்குப் பண்ணினால் என்னனு தோணுச்சு. இப்ப செல்லப் பிராணிகளுக்கு ஃப்ரீசர் பாக்ஸும், இறுதி ஊர்வல ஆம்புலன்ஸும் இருக்கு. ஒரு போன் பண்ணினால் போதும்.சமீபத்துலகூட சிங்கப்பூர்ல இருந்து ஒரு பெண் போன் செய்தாங்க. ‘என் செல்லப் பிராணி இறந்திடுச்சு. 

அம்மாவும், அப்பாவும் அங்கதான் இருக்காங்க. என்ன சார்ஜ் பண்ணுவீங்களோ வாங்கிக்கோங்க. என் செல்லத்தை அப்படியே வச்சிருங்க. நான் வந்துடுறேன். ஆனா, வர இரண்டு நாட்கள் ஆகும். அதுவரை வைக்கமுடியுமானு’னு கேட்டாங்க. நான் ஐந்து நாட்கள் கூட வச்சுத்தர்றேன். அதுக்கான ஃப்ரீசர் பாக்ஸ் இருக்குனு சொல்லி வச்சுக் கொடுத்தேன்.

அதனால, அடுத்ததாக இதேபோல அரசு தனிஇடம் ஒதுக்கித் தந்தால் வெளிநாடு போல இங்கேயும் பெட் மார்ச்சுவரியை உருவாக்கலாம்னு இருக்கோம். அதுக்கான அனுமதி கிடைச்சால் அது ஒரு சிறந்த மாற்றமாக இருக்கும். என் கனவும் முழுமை அடைஞ்சிடும்...’’ என உற்சாகமாகச் சொன்னார் சாந்தகுமார்.   

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்