சிம் கார்டு போல் ஸ்லிம் சிம்ரன் குப்தா!



‘சன் பிக்சர்ஸ்” தயாரிப்பில் விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் குத்துப் பாடலுக்கு தலைகாட்டியவர் சிம்ரன் குப்தா. இப்போது ‘வித்தைக்காரன்’ படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். சிம் கார்டு மாதிரி சிலிம்மாக இருக்கும் சிம்ரன் குப்தாவின் பதில்களும் அவர் போல் சிம்பிள்!

யார் இந்த சிம்ரன் குப்தா?

என் அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே எதிர்காலத்தில் பிரபலமாகி சாதித்துக் காட்டுவேன்னு கனவு கண்டேனா என்று தெரியவில்லை. சின்ன வயசுலேர்ந்தே சினிமா மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுடுச்சு.படிப்பு முடிஞ்சதும் சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். சிம்ரன் குப்தாவுக்கு சினிமாவில் சாதித்துக் காட்டணும்னு பெரிய கனவுகள் இருக்கிறது. அந்த கனவுகளை எல்லாம் எட்டிப்பிடிக்கும் நாள் வெகு தூரமில்லை என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

கனிம பூமியான ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி என்னுடைய சொந்த ஊர். எங்கள் ஊரிலிருந்து சென்னை சரியா 1679 கிலோ மீட்டர். நீண்ட தூரம் பயணித்து நம்பிக்கை
யுடன் தமிழ் சினிமாவின் கதவுகளைத் தட்டினேன்.அந்த இரும்புக் கதவுகள் சீக்கிரத்தில் திறக்க தொடர் முயற்சியும் நம்பிக்கையும்தான் காரணம்.

உங்கள் முதல் சினிமா?

இந்தி, தெலுங்கு மொழிகளில்தான் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பிச்சது. ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்த ‘சர்க்கார்’ என்னுடைய முதல் தமிழ் சினிமா. அந்தப் படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு டான்ஸ் ஆடினேன்.‘கனவு மெய்ப்படும்’ என்ற பொன் மொழி என் வாழ்க்கையில் நிறைவேறிய அந்தத் தருணத்தை வாழ்நாளில் மறக்க முடியாது. விஜய் சார் படத்தில் நானும் ஓர் அங்கமா இருந்ததில் மிக்க மகிழ்ச்சி.

விஜய் சார், ரொம்ப அடக்கமானவர். எல்லோருக்கும் மனிதநேயத்துடன் உதவிக் கரம் நீட்டக்கூடியவர். அந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் சில பெரிய பட வாய்ப்புகள் வந்துச்சு. சில காரணங்களால் என்னுடைய கனவிலும் ஆசையிலும் காலதாமதம் ஏற்பட்டுச்சு. ஆனாலும் என்னுடைய தேடலை நிறுத்தாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

‘வித்தைக்காரன்’ படத்தில் என்ன மாதிரி சவால்கள் இருந்தன?

நம்முடைய வேலையில் சவால்கள் இருந்தால்தான் சிறப்பான ரிசல்ட் தர முடியும். அப்படி படத்தில் எனக்கான சவால்கள் நிறையவே இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் நான் விருப்பத்தோடு பண்ணியதால் எதுவுமே கஷ்டமா தெரியல. டயலாக் பேப்பரை பலமுறை மனப்பாடம் பண்ணிய பிறகே கேமரா முன்னாடி போய் நின்றேன். பெரும்பாலான காட்சிகளை சிங்கிள் டேக்கில் ஓகே பண்ணினேன். ‘முடியாது’ என்ற வார்த்தை என்னுடைய அகராதியில் இல்லைனு சொல்லலாம். சாத்தியமில்லாதவைகளை சாத்தியப்படுத்துவது எனக்கு பிடிக்கும்.  

தமிழ் மொழியைக் குறித்து சுத்தமாக எதுவும் தெரியவில்லை என்றால் புரிந்துகொண்டு பேசுவது மிகவும் கடினம். அந்த வகையில் தமிழ் மொழியைப் புரிந்து நடிப்பதிலும் சவால் இருந்துச்சு. அந்த மாதிரி சவால்கள்தான் எனக்கு பிடிக்கும். தடைகளும், சவால்களும் இல்லாத வாழ்க்கை இல்லையே!

சதீஷ் என்ன சொன்னார்?

சதீஷ் சாருடன் நடிச்சது நல்ல அனுபவம். சதீஷ் பன்முகத் தன்மை கொண்டவர் என்பதோடு ‘பார்ன் டூ ஆக்ட்’ என்பதுபோல் நடிப்பதற்காகவே பிறந்தவர்னு சொல்லலாம். எவ்வளவு கடினமான காட்சியா இருந்தாலும் மிக எளிதா பண்ணுவார். அவரிடமிருந்து நடிப்பை கற்றுக்கொண்டேன்னு சொல்லலாம்.

இயக்குநர் வெங்கி சார் கொடுத்த கேரக்டரை என்னால் சிறப்பாக பண்ணமுடியும் என்று என் மீது முழு நம்பிக்கை வைச்சிருந்தார். இந்தப் படத்துக்காக முதன் முதலாக அவரை சந்திச்சபோது, அடுத்த ஐந்தாவது  நிமிடத்தில் நீங்கதான் ஹீரோயின் என்று முடிவு பண்ணிட்டார். நகைக் கடைக்காரரின் கண்கள் எப்படி தங்கத்தை எடை போடுமோ அதுபோன்றது வெங்கி சாரின் கண்கள்.

எந்த மாதிரி கதைகளில் நடிக்க ஆர்வமா இருக்கிறீர்கள்?

திறமையை வெளிப்படுத்தக்கூடிய எந்தக் கேரக்டராக இருந்தாலும் பண்ணுவதற்கு நான் ரெடி. கவர்ச்சிக்காகவும், பாடலுக்காகவும் வந்து போகும் ஹீரோயினாக மட்டுமல்லாமல் வெர்சடைல் நடிகையாகவே என்னை  வெளிப்படுத்த விரும்புகிறேன்.குறிப்பாக, ஒரு படத்திலாவது நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடிக்கணும். குயவன் கையில் இருக்கும் களிமண் போல் என்னை நினைத்து பல்வேறு கதாபாத்திரங்களை வடிவமைக்க ஆயத்தமா இருக்கிறேன். அந்த வகையில் என்னை இயக்குநரின் நடிகைனு சொல்லலாம்.

சினிமாவில் என்ன கத்துக்கிட்டீங்க?

நான் அதிகம் பேசமாட்டேன். என்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனிப்பேன்.

நிஜ வாழ்க்கையில் நீங்க எப்படி?

நான் மிகவும் எளிமையானவள். அந்த எளிமைதான் எந்தவித சச்சரவுகளுமின்றி என்னை நடத்துகிறது.

ஆண்களைக் குறித்து உங்கள் பார்வை என்ன?

ஆண்கள் எப்போதும் தலை நிமிர்ந்து நடக்கவேண்டும். அதன் அர்த்தம், அவர்களின் புத்திசாலித்தனம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் இருக்க
வேண்டும்.

உங்கள் பலம், பலகீனம்?

லட்சியத்துக்காக எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். கஷ்டப்படுகிறவர்களைப் பார்த்தால் என் மனம் இளகிவிடும்.

புத்தாண்டு சபதம் ?

லட்சியங்கள் நமக்காகக் காத்திருக்காது. நாம்தான் லட்சியத்தை நோக்கி ஓட வேண்டும்.

தமிழ் சினிமாவில் பிடிச்ச நடிகர்?

ரஜினி சார். வாய்ப்பு கிடைத்தால் எல்லா நடிகருடனும் நடிக்க ஆசை. இது எனக்கு மட்டுமல்ல, நடிக்க வரும் அனைவருக்கும் இருக்கும் ஆசை. ஆனால், யாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற இடத்துக்கு நான் இன்னும் வரவில்லை. ஒரு நாள் முடிவு எடுக்கக் கூடிய இடத்துக்கு வருவேன் என்ற நம்பிக்கை இருக்கு. ஆனா, தமிழ் சினிமாவில் எனக்கு பெரிய ஆதரவு கிடைச்சிருக்கு. கடவுளும் குடும்பத்தினரும் எப்போதும் துணையாக இருக்கிறார்கள்.

ஆரோக்ய வாழ்க்கைக்கு உங்கள் நடைமுறை என்ன?

இரவு சீக்கிரம் உறங்கச் செல்வேன். அதிகாலை ஐந்து மணியிலிருந்து என்னுடைய நாள் துவங்கிவிடும்.

நடிகையாக உங்கள் வாழ்க்கையில் சந்திச்ச கசப்பான அனுபவங்கள்?

நல்லது நடக்கும்போது துள்ளிக் குதிக்கவும்மாட்டேன். அதேபோல் கெட்டது நடக்கும்போது மனதைத் தளரவிடவும்மாட்டேன். கடிகாரம் சரியாக ஓடவில்லை என்றால் அதை அப்படியே விட்டுவிடுவதில்லை. நேரத்தை திருத்தி சரியாக ஓட வைக்க முயற்சி செய்வோம். அதுபோல்தான் வாழ்க்கையில் நடக்கும் கசப்புகளிலிருந்து பாடம் கற்றவர்களாக நம்மைத்
திருத்தி முன்னேற வேண்டும்.

இரண்டு உண்மைகள், ஒரு பொய் சொல்லுங்களேன்?

வாழ்க்கையும் மரணமும் உண்மை. என் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் என்பது பொய்!  

எஸ்.ராஜா