பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன்... ஆனா, ரொம்ப நாள் தயாரிப்புல இருந்த படம் இப்பதான் ரிலீஸ்!



உற்சாகத்தில் நாயகன் வருண்!

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான படம் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’.
‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் உருவாகிய இந்தப் படத்தில் வருண், ராஹி, நடிகர் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட காத்திருப்புக்குப் பின் தற்சமயம் இப்படம் வெளியீட்டிற்குத்தயாராகியிருக்கிறது.

‘‘இந்தப் படத்துக்காக பிரத்யேகமா பார்கோர் (parkour - தாண்டோட்டக் கலை) கலையை அமெரிக்கா சென்று கத்துக்கிட்டேன். இது மார்ஷியல் கலையில் ஒரு பகுதி. கட்டடங்கள், உயரமான சுவர்கள் அத்தனையையும் அசால்ட்டா நினைச்சு தாண்டிக் குதிச்சு ஓடணும். இந்தக் கதைக்கு தேவைப்பட்டதால் அதற்குரிய பயிற்சியை எடுத்துக்கிட்டேன்...’’ கௌதம் வாசுதேவ் மேனன் நாயகன் என்னும் சந்தோஷமும், உற்சாகமும் ஒருசேர புன்னையுடன் பேசுகிறார் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’ நாயகன் வருண்.

கௌதம் மேனன் இயக்கத்தில் நீங்கள்?

அவருடைய அத்தனை படங்களும் பார்க்கும்போது, ப்ச்... இந்த ஹீரோவாக நான் இருந்திருக்கக் கூடாதா, ‘வாரணம் ஆயிரம்’ நாயகனா நான் நடிக்கற மாதிரி ஒரு மேஜிக் நடக்கக் கூடாதா, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸிய நான் காதலிக்கக் கூடாதா... இப்படி எல்லாம் பல நேரங்களில் ஆசைப்பட்டிருக்கேன். 
இப்ப அக்கனவு நினைவாகி, அதுவும் கௌதம் சார் எனக்காக ஒரு கதை உருவாக்கி, நான் அதில் ஹீரோ என நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, சாரைப் பொருத்தவரை எல்லாருமே நடிகர்தான். சூர்யா சாரா இருந்தாலும், சிம்பு சாரா இருந்தாலும் எல்லோரையும் ஒரே மாதிரிதான் நடத்துவார். யாரும் கீழே மேலே கிடையாது. ஜென்டில்மேன்.

என்ன கதை..?

ரொம்ப நாள் காத்திருப்பில் இருந்த படம். என்னுடைய கேரக்டர் பெயர்தான் ‘ஜோஷ்வா’. நான் கூலிக்காகக் கொலை செய்கிற நபர். பாடிகார்டாகவும் இருப்பேன். கௌதம் சார் படம்னாலே லவ் தூக்கலா இருக்கும். 

ஆனால் இந்தப் படத்தில் ஆக்‌ஷன், அதிரடி மாஸ் காட்சிகள் அதிகமா இருக்கும். ஒரு பணக்கார, அரசியல் பிரமுகருடைய மகள்... அவங்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருக்கு. அவங்க எங்க போனாலும் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிற பாடிகார்ட் ஒருவர் வேணும். அதற்காக வருகிறவன்தான் நான். எங்களுக்கு இடையிலே காதல்... அடுத்து என்ன என்பது மீதிக் கதை.

‘இன்செப்ஷன்’, ‘டன்க்ரிக்’ படங்களின் புகழ் ஸ்டண்ட் மேன் யானிக் பென் இப்படத்திற்குள் வந்தது எப்படி?  

ஆமா, ஹாலிவுட் ஸ்டண்ட் மேன் யானிக் பென் இந்தப் படத்திலே சண்டைக் காட்சிகள் அமைச்சிருக்கார். ‘எந்திரன்’, ‘7ம் அறிவு’, ‘மாற்றான்’, ‘மாவீரன்’ உள்ளிட்ட பல படங்களில் வேலை செய்திருக்கார். இந்தியில் ‘டைகர் ஸிந்தா ஹை’, ‘ஜவான்’, ‘ராயீஸ்’... என இவர் வேலை செய்த படங்கள் ஏராளம். இந்தப் படத்திலும் மிக்ஸ்ட் மார்ஷியல் கலை ஸ்டண்ட் நிறைய இருக்கு. செம ஸ்டைலான ஆக்‌ஷன் பேக் பார்க்கலாம். அதற்கு யானிக் தேவைப்பட்டார்.

எஸ்.ஆர்.கதிர் சினிமாட்டோகிராபி, ஆண்டனி சார் எடிட்டிங், மியூசிக் கார்த்திக். ‘டப்பாசு...’ பாடல் கடந்த ரெண்டு வருடங்களாக டிரெண்டிங்கில் இருக்கு.

எனக்கு ஜோடியாக ராஹெ நடிச்சிருக்காங்க. இவங்க நடிகர் ஆரவ் மனைவி. விசித்ரா மேடமுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம். நடிகர் கிருஷ்ணாவும் எதிர்பாராத சர்ப்ரைஸ் கேரக்டரில் வருகிறார். ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் ஐசரி கணேஷ் அங்கிள்தான் படத்துக்குத் தயாரிப்பு.

பெரிய தயாரிப்புக் குடும்பப் பின்னணி... இதனால் மைனஸ், பிளஸ் என்ன?

‘உனக்கென்னப்பா நீ நினைச்சால் ஒரு படமே தயாரிக்கலாம்...’ ரொம்ப சாதாரணமா சொல்கிற கமெண்ட் இதுதான். யார் யாரோ எப்படியாவது என் அங்கிள் (ஐசரி கணேஷ்) கிட்ட கதை சொல்லணும்னு என்னைக் கேட்பாங்க. நானே சொந்தமாக என்னை நிரூபிக்கணும்னு இத்தனை காலமும் முயற்சி செய்திட்டு இருக்கேன். அதனால்தான் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட கலந்துக்கிட்டேன்.

இதோ இந்தப் படம் முடிந்தே ரெண்டு வருடங்கள் ஆகிடுச்சு. எதுவுமே அந்தந்த நேரத்தில் நடக்கணும். அதற்கான பொறுமை ரொம்ப அவசியம். மைனஸ்னா... சின்ன தப்பு செய்தா கூட உடனே குடும்பப் பின்னணியைத்தான் சொல்வாங்க. என்ன செய்தாலும் டபுள் பொறுப்பு நமக்கு இருக்கும்.பிளஸ்னா... சுலபமாக சினிமா துறை கான்டாக்ட் கிடைக்கும். அதை நாம எப்படி பயன்படுத்துகிறோம் என்பதும் இங்க டாஸ்க்கா இருக்கும்.

உங்க அடுத்த படங்கள்..?

முதலில் ‘ஜோஷ்வா: இமை போல் காக்க’ ரிலீஸ். அதன் பிறகுதான் மற்ற படங்கள். ஆக்‌ஷன் அதிரடி காம்போவா, டெக்னிக்கலா நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக் கூடிய படம். என்னுடைய கனவு நிறைவேறின படம். நானும் காத்திருக்கேன்.  

ஷாலினி நியூட்டன்