கூகுள் இமேஜ் ஆப்ஷன் உருவாகக் காரணமாக இருந்தது வெர்சாச்சேதான்!
உலகப்புகழ் பெற்ற இளவரசி டயானா முதல் பாப் இசையின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் வரை பல பிரபலங்களின் ஆடைகளை வடிவமைத்த நிறுவனம், ‘வெர்சாச்சே’.
இத்தாலியின் நம்பர் ஒன் ஆடம்பர ஃபேஷன் பிராண்ட் இது. ரெடிமேட் ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், வாசனைத் திரவியங்கள் என இதன் தயாரிப்புப் பட்டியல் நீள்கிறது.மட்டுமல்ல; ஆரம்பித்த ஐம்பது வருடங்களுக்குள் உலகின் முன்னணி ஆடம்பர ஃபேஷன் பிராண்டுகளில் ஒன்றாக இடம்பிடித்தது இதன் தனிச்சிறப்பு. இதனை உருவாக்கியவர், ஜியான்னி வெர்சாச்சே.
இத்தாலியில் உள்ள ரெக்கியோ எனும் நகரில், 1946ம் வருடம் பிறந்தார், ஜியோவன்னி மரியா வெர்சாச்சே. சுருக்கமாக ஜியான்னி வெர்சாச்சே. அப்பா, அம்மா ஃபிரான்செஸ்கா, அண்ணன் சாண்டோ, அக்கா டினா, தங்கை டோனாடெல்லா என ஆறு பேர் கொண்ட குடும்பத்தின் செல்லப்பிள்ளையே ஜியான்னிதான். நோய் காரணமாக டினா, 12 வயதிலேயே இறந்து விட்டார்.
அம்மா தையல் கடையை நடத்தி வந்தார். பத்துக்கும் அதிகமான பெண்கள் அந்தக் கடையில் வேலை செய்துவந்தனர். பத்து வயதிலேயே அம்மாவின் கடையில் தையல் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார் ஜியான்னி. 11 வயதிலிருந்தே தனியாக துணிகளைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.
பெண் தையல் கலைஞர்களுக்கு மத்தியில் தையல் பயின்றதால், ஜியான்னியின் டிசைன்கள் பெரும்பாலும் ஒரு பெண் டிசைனர் வடிவமைத்ததைப் போலவே இருக்கும். அத்துடன் பெண்களின் மனதைக் கவரும் ஆடைகளை பெண்களைவிட, ஜியான்னியால் துல்லியமாக வடிவமைக்க முடியும். அம்மாவின் தையல் கடையில் வேலை செய்வதற்கு முன்பு ஒரு கட்டடக் கலைஞன் ஆக வேண்டும் என்பதுதான் ஜியான்னியின் விருப்பமாக இருந்தது. ஆனால், தையல் அவரைத் தன்
வசம் ஈர்த்துவிட்டது. இருபது வயதில் ரெக்கியோவிலேயே முக்கியமான ஒரு தையல் கலைஞனாகப் பரிணமித்தார் ஜியான்னி. ஃபேஷன் துறையில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் மிலன் நகருக்கு இடம் பெயர்ந்தார்.
அப்போது ஜியான்னியின் வயது 26. 1973ல் ‘ஜென்னி’ எனும் ஃபேஷன் நிறுவனத்தில் டிசைனராக வேலை செய்ய ஆரம்பித்தார்.ரோம், கிரேக்க தொன்மங்கள் மற்றும் கலைகளின் மீது பேரார்வம் கொண்டவர் ஜியான்னி. அவற்றை தனது டிசைனில் வெளிப்படுத்தினார்.
ஜியான்னியின் டிசைனுக்கு என்று வாடிக்கையாளர்கள் வட்டம் உருவானது. 1977ல் பெண்களுக்கான பிரத்யேகமான ஆடைகளை டிசைன் செய்து, மிலன் நகரில் உள்ள ஒரு மியூசியத்தில் காட்சிப்படுத்தினார். இதே வருடத்தில் தனது முதல் ஃபேஷன் ஷோவை நடத்தினார்.
இதில் கிடைத்த வரவேற்பு, தனியாக தொழில் தொடங்குவதற்கான உற்சாகத்தை ஜியான்னிக்குக் கொடுத்தது. 1978ல் சாண்டோ மற்றும் டோனாடெல்லாவின் உதவியுடன் மிலனில் ‘வெர்சாச்சே’வை ஆரம்பித்தார் ஜியான்னி. மைக்கேல் ஜாக்சன், மடோன்னா போன்ற இசைக்கலைஞர்களுக்கான ஆடைகளை வடிவமைத்தார். இதற்கு முன்பு எந்தவொரு ஆடம்பர ஃபேஷன் நிறுவனங்களும் இசைக் கலைஞர்களின் ஃபேஷனில் கவனம் செலுத்தவில்லை. இது ஜியான்னியின் பிசினஸ் விரிவாக்கத்துக்குப் பெரிதும் உதவியது. 1982ல் தங்கத்தினால் ஆன கவுனை வடிவமைத்தது ‘வெர்சாச்சே’. இப்படி உலோகங்களினால் ஆடைகளை வடிவமைத்த முதன்மை பிராண்டும் இதுவே.
ஆடைகளுடன், வாசனைத் திரவியங்கள், தோல் பொருட்கள் உட்பட பலவிதமான ஃபேஷன் பொருட்களையும் தயாரிக்க ஆரம்பித்தது ‘வெர்சாச்சே’. பொதுவாக ஃபேஷன் ஷோக்களை நடத்தும் டிசைனர்கள் பெரும் செல்வந்தர்களைத்தான் அழைப்பார்கள்; அவர்களைத்தான் முன்னிருக்கையில் அமர வைப்பார்கள்.
ஆனால், ஜியான்னியோ மைக்கேல் ஜாக்சன், மடோன்னா, டயானா உட்பட உலகப் பிரபலங்களையும், நடிகர், நடிகைகளையும் அழைத்து முன்னிருக்கையில் அமர வைத்தார். இப்படி பிரபலங்களை ஃபேஷன் ஷோவுக்கு அழைத்த முதல் டிசைனர் ஜியான்னியாகத்தான் இருக்கக்கூடும். ஜியான்னியின் ஃபேஷன் ஷோக்களுக்கு வருகை தந்த பிரபலங்கள் மூலம் ‘வெர்சாச்சே’வுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. இதையே மற்ற ஃபேஷன் நிறுவனங்களும் பின்பற்ற ஆரம்பித்தன. பாலே நடன நிகழ்வுகள், இசை நாடகங்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் என பல துறைகலைஞர்களுக்கும் ஆடை வடிவமைப்பு செய்ய ஆரம்பித்தார் ஜியான்னி. ‘வெர்சாச்சே’ ஆரம்பித்த பத்து வருடங்களுக்குள்ளேயே உலகப்புகழ் அடைந்துவிட்டது.
இதற்கிடையில் ஜியான்னியை காது புற்றுநோய் தாக்கியது. புற்றுநோய் காரணமாக ரொம்ப நாட்கள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று ஜியான்னி நினைத்துக்கொண்டார். அதனால் நிறுவனத்தின் 50 சதவீத பங்கை தனது தங்கையின் மகளான அல்லீக்ராவுக்கு உயில் எழுதி வைத்துவிட்டார்.
அப்போது அல்லீக்ராவுக்கு வயது 11தான். இன்று ‘வெர்சாச்சே’வின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் அல்லீக்ரா. மீதி 50 சதவீத பங்கை டோனாவுக்கும், சாண்டோவுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
புற்றுநோய்க்கு நடுவிலும் அயராது உழைத்தார் ஜியான்னி. ஓரினச்சேர்க்கையாளரான ஜியான்னி, திருமணம் செய்துகொள்ளவில்லை. 1997ல் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்தார்.
ஜியான்னியின் மரணம், அதற்குப் பிறகான ‘வெர்சாச்சே’வின் வீழ்ச்சி, எழுச்சி, வேறு ஒரு நிறுவனம் ‘வெர்சாச்சே’வை கையகப்படுத்துதல் எல்லாமே தனிக்கதை.
ஜியான்னியின் இறுதிச்சடங்கில் உலகப்புகழ் பெற்ற இளவரசி டயானா உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். டயானா கலந்துகொண்ட கடைசி பொதுநிகழ்வும் இதுவே.
இன்று ஜெர்மனி, ஜப்பான், சிகாகோ, லண்டன் உட்பட உலகின் முக்கிய மியூசியங்களில் எல்லாம் ‘வெர்சாச்சே’வின் தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இருநூறுக்கு மேற்பட்ட இடங்களில் ஷோரூம்கள் இருக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனையாளர்கள் ‘வெர்சாச்சே’வின் தயாரிப்புகளை விற்பனை செய்கின்றனர். ஜியான்னி நினைவைப் போற்றும் விதமாக இன்றும் ஃபேஷன் ஷோக்கள் அரங்கேறுகின்றன.
பாசமலர்
அண்ணன் ஜியான்னியும், தங்கை டோனாடெல்லாவும் மிக நெருங்கிய நண்பர்கள் போல இருந்தனர். அண்ணனின் ஆலோசனைகளைத் தங்கையும், தங்கையின் ஆலோசனைகளை அண்ணனும் தட்டியதே இல்லை. உதாரணத்துக்கு, டோனாவிற்கு 11 வயதாக இருந்தபோது, தன்னுடைய கூந்தலுக்குப் பொன்னிறத்தில் சாயம் பூசிக்கொண்டார். காரணம், இந்த வண்ணம் உன் கூந்தலுக்கு நன்றாக இருக்கும் என்று ஜியான்னி கொடுத்த ஆலோசனை.
இந்த பொன்னிறத்தின் தாக்கத்தால்தான், ஜியான்னி உருவாக்கிய வாசனைத் திரவியத்துக்கு ‘பிளாண்ட்’ என்று பெயர் வைத்தார். ஜியான்னி ‘வெர்சாச்சே’வை ஆரம்பித்ததும், அவருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தவர் டோனாதான்.
கூகுள் இமேஜ்
கூகுள் இமேஜ் தளத்துக்கு வித்திட்டது ‘வெர்சாச்சே’தான். ஆம்; 2000ல் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிஃபர் லோபஸ் கலந்துகொண்டார். அந்த விழாவில் ஜெனிஃபர் அணிவதற்காக ஸ்பெஷலான ஓர் ஆடையை அனுப்பியிருந்தார் டோனா. அந்த ஆடையில் கழுத்துப்பகுதி ரொம்பவே இறக்கமாக இருக்கும்.
அதை தவறுதலாக ஜெனிஃபருக்கு அனுப்பிவிட்டார் டோனா. இருந்தாலும் அந்த ஆடையை அணிந்து விழாவில் கலந்துகொண்டார் ஜெனிபர். உலகளாவிய ஊடகங்களின் முக்கிய பேசுபொருளாக மாறியது ஜெனிஃபரின் ஆடை. கோடிக்கணக்கானோர் கூகுளில் அந்த ஆடையைத் தேடினார்கள். ஆனால், அப்போது புகைப்படங்களை மட்டுமே காட்டும் கூகுள் இமேஜ் இல்லை. மக்கள் எழுத்து வடிவத்தை மட்டுமல்லாமல், புகைப்படங்களையும் தேடுகின்றனர் என்ற விஷயம் ஜெனிஃபரின் ஆடை மூலம் கூகுளுக்குத் தெரிய வர, கூகுள் இமேஜ் உருவானது.
மெடூசா
கிரேக்க தொன்மங்களின் மீது பேரார்வம் கொண்டவர் ஜியான்னி. அதனால்தான் கிரேக்க தொன்மத்தில் வருகின்ற மெடூசா என்ற பேரழகியின் முகம் ‘வெர்சாச்சே’வின் லோகோவை அலங்கரிக்கிறது. மெடூசாவைக் கண்ட ஆண்கள் எல்லோரும் அவள் மீது காதலில் விழுந்தனர். இதுபோல ‘வெர்சாச்சே’வின் டிசைனைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் அதன்மீது காதலில் விழவேண்டும் என்பதற்காகவே மெடூசாவை லோகோவாக்கினார் ஜியான்னி.
த.சக்திவேல்
|