செல்லப்பிராணிகளுக்கு ஷெட் அமைத்த இசைக் கலைஞர்!



சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதே மனிதநேயம். அதை மனிதர்களிடம் மட்டுமில்லாமல் சகல ஜீவராசிகளிடமும் காட்டுபவர்கள் இன்னும் ஒருபடி உயர்ந்து நிற்கிறார்கள். அப்படி ஒருவராக இருப்பவர், ‘கலை வளர்மணி’ இசக்கியப்பன்.
கொரோனா நேரத்தில் சாலைகளில் அடிபட்டும், உணவின்றியும் தவித்த 25 நாய்கள், 30 பூனைகளை தன் வீட்டிலேயே நான்கு ஆண்டுகள் பராமரித்தவர். இப்போது அவற்றுக்காக ஆறு சென்ட் நிலம் வாங்கி ஒரு ஷெட்டை உருவாக்கியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

‘‘இதில் முதல்ல ஒண்ணை தெளிவுபடுத்திக்கிறேன். இது செல்லப் பிராணிகளுக்கான கேர் சென்டரோ அல்லது கேர் டேக்கர்ஸ் இடமோ கிடையாது. என்னால் வீட்டில் வச்சு பராமரிக்க முடியாததால இந்த இடத்தை நண்பர்களிடம் கடன் வாங்கி உருவாக்கியிருக்கேன். இதை சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அய்யாவை வச்சு திறக்க வச்சேன். அவர் முகநூல்ல இந்தப் பதிவைப் போட அது வைரலாகிடுச்சு. 
சிலர் போன் பண்ணி என் நாயை பராமரிக்க முடியுமானு கேட்குறாங்க. அதனாலதான் இது கேர் சென்டர் இல்லனு சொல்றேன்...’’ என்ற இசக்கியப்பன் ஓர் இசைக்கலைஞர். சுமார் 200க்கும் மேற்பட்ட சுயாதீனப்பாடல்களை எழுதி இசையமைத்தவர். பல்வேறு விருதுகள் பெற்றவர். இசை ஆசிரியராகவும் இருப்பவர்.
‘‘சொந்த ஊர் தூத்துக்குடி. ஏழாம் வகுப்புக்கு மேல் படிப்பு வராததால் நின்னுட்டேன். பிறகு, ஷிப்பிங் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன்.

சின்ன வயசுலயே இசை மீது ஓர் ஆர்வம். அதனால, 2000ம் ஆண்டு உத்திராபதினு இசை ஆசிரியர் ஒருவரிடம் கர்நாடக சங்கீதம் படிச்சேன். அவர் என் ஆர்வத்தைப் பார்த்திட்டு 2003ல் தூத்துக்குடி இசைப் பள்ளியில் எனக்கு அட்மிஷன் போட்டுக் கொடுத்தார். அவர் அங்கு நாதஸ்வர ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

அது சான்றிதழ் பயிற்சி. அங்க காலையில் 10 மணியிலிருந்து 4 மணி வரை வகுப்புகள் நடக்கும். ஆனா, நான் காலையில் ஷிப்பிங் கம்பெனி வேலைக்குப் போறதால 2 டூ 4 வரை உள்ள உணவு இடைவேளையில் இசைப் பள்ளிக்குப் போவேன். எனக்காக சிறப்பு அனுமதியை அந்த இசை ஆசிரியர், துறை சார்ந்த இயக்குநரிடம் வாங்கியிருந்தார்.

அப்புறம், இரவு இசை ஆசிரியர் வீட்டிலேயே தங்கி பாடங்களைக் கத்துப்பேன். அவர் இசையில் அதீத ஞானம் உள்ளவர். அவர்கிட்ட வாய்ப்பாட்டும், புல்லாங்குழலும் கத்துக்கிட்டேன்.
பிறகு, 2006ல் இசைப் பள்ளி முடிக்கும்போது தனித்தேர்வாக எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணினேன். பிறகு, அந்தச் சான்றிதழ் கோர்ஸான வாய்ப்பாடு படிப்பில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.

மறுபடியும் அங்க மூன்று ஆண்டுகள் தேவாரம் சான்றிதழ் படிப்பில் சேர்ந்தேன். அங்க சந்திரசேகர் சார் சிறப்பாக கத்துக்கொடுத்தார். அதிலும் டிஸ்டிங்ஷன் வாங்கினேன். இதுக்கிடையில் தூத்துக்குடியில் இருக்கிற சின்னச் சின்னப் பள்ளிகளில் இசை வகுப்புகள் எடுத்தேன். 2008ம் ஆண்டு ஷிப்பிங் கம்பெனியிலிருந்து வெளியே வந்துட்டேன்.
பிறகு, தேவாரம் கோர்ஸ் முடிக்கும்போதே பத்தாம் வகுப்பும் முடிச்சேன்.

அடுத்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்துல இசை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சியானேன்.தொடர்ந்து பிஏ மியூசிக் திருநெல்வேலி சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பண்ணினேன். இப்ப எம்ஏ மியூசிக் அண்ணாமலை பல்கலைக்கழகத்துல முடிக்கப் போறேன். இதுதவிர, புல்லாங்குழல்ல டிப்ளமோ முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கேன்.

கடந்த 15 ஆண்டுகளாக ‘ஸ்ரீசாரதா கலைக்கூடம்’னு வச்சி நடத்திட்டு வர்றேன். இப்ப அதன்பெயரை ‘நெய்தல் கலைக்கூடம்’னு மாற்றி செயல்படுறேன். இதன் வழியாக கர்நாடக இசைக் கச்சேரிகள் நிறைய பண்றேன். அதுக்காக பல்வேறு ஊர்களுக்கும் மாநிலங்களுக்கும் பயணிக்கிறேன். அடுத்து இசைக்கருவிகள் சார்ந்த இசைக் கச்சேரிகளும், அரசு விழாக்கள், கோயில் மற்றும் திருமண நிகழ்ச்சிகள்லயும் இசைக்கச்சேரிகள் செய்றேன்.

தவிர, இசை வகுப்புகளும் எடுத்திட்டு வர்றேன். என்னிடம் படித்தவர்கள் நிறைய பள்ளிகள்ல இசை ஆசிரியர்களாக வேலை செய்றாங்க. நிறைய மாணவர்கள் இசைக் கச்சேரிகளுக்கும் போறாங்க. 

நானே பாடல்கள் எல்லாம் எழுதுறதால வீட்டுல ரெக்கார்டிங் ஸ்டூடியோ வச்சிருக்கேன்.இதுபோக, பெரிய பாடல்கள் எல்லாம் சென்னை சாலிகிராமத்துல உள்ள நண்பர் ஸ்டூடியோவில் பண்ணுவேன். 2012ல் தூத்துக்குடிக்கென டைட்டில் பாடல் எழுதி இசையமைச்சேன். இதை அனுராதா ஸ்ரீராம் பாடினாங்க.

இதுவே அரசால் அங்கீகரிக்கப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட்ட தூத்துக்குடியின் டைட்டில் பாடலாக இருக்கு. இதேபோல திருநெல்வேலி டைட்டில் பாடலும் நான்தான் எழுதி இசையமைச்சேன். இதையும் அனுராதா ஸ்ரீராம்தான் பாடினாங்க.இதுக்கிடையில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜீவகாருண்யம் பக்கம் போனதால் கச்சேரிகள் செய்றது குறைஞ்சிடுச்சு. அதுக்காகவும் இந்த ஷெட்டை உருவாக்கினேன்னு சொல்லணும்...’’ என்றவர், செல்லப் பிராணிகள் ஷெட் குறித்து நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘ஆரம்பத்துல சாலையோரம் வாழும் மனிதர்களுக்கும், தெருவோரப் பிராணிகளுக்கும் உணவளிச்சேன். இப்பவும் சுமார் 60 தெருவோர நாய்களுக்கு உணவளிக்கிறேன். அதுவே கொரோனா காலத்துல அதிகமாச்சு.கொரோனா லாக்டவுன் போடுவதற்கு சில நாட்களுக்கு முன்னாடி 101 பாடல்களுக்கு இசையமைக்க சென்னைக்கு வந்திருந்தேன். 

அதாவது, தூத்துக்குடி சிவன் கோயிலில் உள்ள அம்மனின் பெயர் பாகம்பிரியாள். இந்த அம்மன் மீது ஒரு புலவர் 101 பாடல்கள் எழுதியிருக்கார். இதை சிற்றிலக்கியத்தில் பிள்ளைத் தமிழ்னு சொல்வாங்க. இதில் அவர் தன்னை ஒரு பெண்ணாகவும், அம்மனை குழந்தையாகவும் பாவித்து பாடியிருக்கிறார்.

அந்தப் புலவரின் பெயர் வீரபாண்டிய புலவர். அவரின் நிஜப்பெயர் சங்கரமூர்த்தி புலவர். அவர் வீரபாண்டிய கட்டபொம்மனின் அரசவைப் புலவராக இருந்திருக்கார். அதனால் அவருக்கு வீரபாண்டிய புலவர்னு பெயர் வந்ததாக சொல்றாங்க. இறுதியில் அவர் ஜீவசமாதி ஆனதாகவும் சொல்லப்படுது.

இந்த பிள்ளைத்தமிழ்ல தூத்துக்குடியின் சிறப்பம்சங்கள் எல்லாம் வருவதுதான் ஆச்சரியம். தூத்துக்குடியின் கடல்வளம், மீன்வளம், முத்துவளம், தாமிரபரணியின் வளம்னு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாடி என்னென்ன வளங்கள் காணப்பட்டதோ அதையெல்லாம் வச்சு அம்மனை நினைத்து உருகி எழுதியிருக்கார்.

இதுல தூத்துக்குடியில் காணப்பட்ட 16 முத்துக்களின் பெயர்கள் இருக்கு. அதை எப்படி தரம் பிரிச்சு எடுப்பாங்க, அதற்கான சல்லடைகளின் பெயர்கள் என்ன, எத்தனை வகையான மீன்கள் காணப்பட்டன, பெர்னாண்டஸ் மக்களின் அணிகலன்கள், அவர்களின் உணவுமுறை, நடை, உடை, பாவனை, வீட்டின் அமைப்பு எல்லாமே சொல்லப்பட்டிருக்கு.

அப்படியான பாடல்கள் காணாமல் போயிடுச்சு. பிறகு, 1958ல் உத்தண்டராம பிள்ளை என்கிற ஐஏஎஸ் அதிகாரிதான் ரசபதினு ஒரு எழுத்தாளர் தலைமையில் இதுக்காக ஒரு குழுவை ரெடி பண்ணியிருக்கார்.

அந்தக் குழு தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலியில் அலைஞ்சு திரிஞ்சு ஓலைச்சுவடியைக் கண்டுபிடிக்கிறாங்க. எல்லாவற்றையும் சரியாக தட்டச்சு பண்ணி 1960ல் வெளியிடுறாங்க. இந்தப் பாடலுக்கு டியூன் கிடையாது.நான் இசைப்பள்ளியிலிருந்து வெளியேறும்போதே இந்த 101 பாடலுக்கும் இசையமைக்கணும்னு முடிவெடுத்தேன். அதுக்கு டியூன் போடுகிற வேலையாகவே 2020ல் சென்னைக்கு வந்தேன். ஆனா, அடுத்த பத்து நாட்கள்ல கொரோனா லாக்டவுன் வந்திடுச்சு.

அந்நேரம் தூத்துக்குடிக்கு வந்துட்டேன். அப்ப கடைகள் எதுவும் கிடையாது. யாரும் வெளியே போகமுடியாது. அந்நேரம், நிறைய நாய்கள், மாடுகள் உணவு கிடைக்காமல் இறந்துபோனது. சில சாலைகள்ல அடிபட்டுக் கிடந்தன.எனக்கு மாவட்ட ஆட்சியர் நல்ல பழக்கம். கொரோனாவில் உதவி செய்வதற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. 

அதனால், வெளியில் போய் சாலைகள்ல அடிபட்டுக் கிடக்கிற நாய்களை எடுத்திட்டு வந்தேன். அது ஒன்று, ரெண்டுனு சேர்ந்து ஒருகட்டத்துல 25 நாய்களாகிடுச்சு. எல்லாமே கை, கால்களில் அடிபட்டவை. இதுல 13 நாய்களைத்தான் காப்பாத்த முடிஞ்சது. மற்றது இறந்துபோச்சு.

இதுபோக, 30 பூனைகள். தினமும் இவற்றின் கழிவுகளை அள்ளிப்போடணும். வீடு முழுவதும் சிறுநீர் கழித்திருக்கும். அதை சுத்தம் செய்யணும். அடிபட்டதை எடுத்திட்டு வந்ததால் சில நாய்களிடமிருந்து ரத்தம் வெளியேறும். அதையும் துடைக்கணும். இதை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க முடியாது. இதனுடன் நாய்களுக்கும், பூனைகளுக்கும் உணவுகள் வழங்கணும். பல கஷ்டங்கள், செலவுகள். இருந்தும் கடந்த நான்கு ஆண்டுகளாக செல்லப் பிராணிகளுடன்தான் என் வாழ்க்கை கடந்தது.

இதனுடன் இசைக்கச்சேரிகளுக்குப் போறதும், சுயாதீனப்பாடல்களை உருவாக்கி இசையமைக்கிறதும், இசை வகுப்புகள் எடுக்குறதுமாக இருந்தேன். ஒருகட்டத்துல இதனை பராமரிக்க முடியாமல் என் மனைவி வெறுத்துட்டாங்க. வீடு முழுவதும் நாய்களும், பூனைகளுமாக இருந்தால் எப்படியிருக்கும்? இதனாலயே ஒன்பது லட்சம் ரூபாய் கடன் பெற்று தூத்துக்குடி பக்கத்துல ஆறு சென்ட் நிலத்தை வாங்கி செல்லப் பிராணிகளுக்காக அமைச்சேன்.

உண்மையில் சங்கீதத்துல எனக்கு எவ்வளவு மரியாதை கிடைச்சதோ அதே அளவுக்கு அவமரியாதையை இந்த ஜீவகாருண்யத்தால சந்திச்சேன். அதுக்காக நான் வருத்தப்படல. சக உயிர்களிடத்தில் அன்பு காட்டு என்ற எண்ணமே என் மனதில் இப்பவரை மேலோங்கி நிற்குது.

சமீப வெள்ளத்துலகூட ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், கட்டில்னு எல்லாம் தண்ணீர்ல வீணாகிடுச்சு. அப்ப இந்த பிராணிகளை வச்சு ரொம்ப சிரமப்பட்டேன். இப்ப ஊருக்கு வெளியில் ஷெட் போட்டுட்டதால இவற்றை அங்கே போய் விட்டுட்டு வீட்டை வொயிட்வாஷ் பண்ணணும். இதுதான் இப்போதைக்கு போயிட்டு இருக்கு.

எதிர்காலத்துல நிறைய சம்பாதிச்சு கடன் எல்லாம் அடைச்சபிறகு உடல்நிலை சரியில்லாத நாய்கள், பூனைகளை தத்தெடுக்கலாம்னு ஒரு யோசனை இருக்கு. இருந்தும் சாலைகள்ல ஆடு, மாடு, நாய், பூனை அடிபட்டுக் கிடந்தால் என்னால் சும்மா இருக்கமுடியல.

அதனால, என் வண்டியிலேயே முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகள் வச்சிருக்கேன். அதைக் கொண்டு முதலுதவி செய்து அங்கே விட்டுட்டு வந்திடுவேன். வீட்டுக்கு கொண்டு வர்றதில்ல. ஏன்னா, என்னால் தனியாக பராமரிக்க முடியல. அதுக்கான ஆட்கள் போட்டு பராமரிக்கவும் பொருளாதார வசதி இடம்கொடுக்கல.

அப்புறம், கொரோனா காலத்துல எட்டு லட்ச ரூபாய்க்கு நலிந்த வில்லிசை, நாதஸ்வரம் உள்ளிட்ட கிராமியக் கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு எல்லாம் வாங்கித் தந்தேன். இதுல என் மாணவ - மாணவிகள் கொஞ்சம் உதவினாங்க. மற்றபடி எல்லாம் என் சொந்த செலவுல செய்தேன். என் கனவு இசைத்துறையில் நிறைய சம்பாதித்து தரமான உணவுக்கூடம் அமைச்சு ஆதரவற்றவர்களுக்கும், தெருவோரப் பிராணிகளுக்கும் இலவசமாக உணவுகள் வழங்கணும் என்பதுதான்.

இப்பவே ஷெட் கட்டினது, வீட்டுக்காக வாங்கினதுனு அடைக்க வேண்டிய கடனே நிறைய இருக்கு. தவிர இந்த நாய்கள், பூனைகளுக்காக மாசம் 30 ஆயிரம் ரூபாய் உணவுக்காகவும், மருத்துவத்திற்காகவும் செலவழிக்கிறேன். இதெல்லாம் சரியான பிறகே கனவை நோக்கி நகரமுடியும்...’’ எனப் புன்சிரிப்புடன்  விடை கொடுத்தார் இசக்கியப்பன்.  

பேராச்சி கண்ணன்