கோடிகளைக் குவிக்கும் போஜ்புரி படங்கள்!



இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் பீகாரைச் சேர்ந்த இராஜேந்திர பிரசாத். அப்போது பாலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் நசீர் ஹுசைன்.
போஜ்புரி மொழியிலும் சினிமா எடுக்கப்பட வேண்டும் என்பது இராஜேந்திர பிரசாத்தின் எண்ணம்.

அதனால் நசீரைச் சந்தித்து, போஜ்புரி மொழியில் ஒரு படத்தை எடுத்துக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்தார் இராஜேந்திர பிரசாத். நசீர் கதை, திரைக்கதை எழுதி நடிக்க, உருவானது போஜ்புரியின் முதல் படமான ‘கங்கா மையா டோஹே பியாரி சதாய்போ’. 1963ல் வெளியான இப்படத்திலிருந்து போஜ்புரி சினிமாவின் வரலாறு ஆரம்பிக்கிறது. இதனை இயக்கியவர் குண்டன் குமார்.

இன்று இந்தியத் திரைப்படத்துறையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது, போஜ்புரி திரைப்படத்துறை. இதன் இப்போதைய மதிப்பு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்.

அமிதாப் பச்சன் உட்பட பெரிய நடிகர்கள்கூட போஜ்புரி மொழிப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். 
பீகாரின் மேற்குப் பகுதியையும், உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியையும் உள்ளடக்கிய போஜ்புரி திரைப்படத்துறையின் தயாரிப்பு மையங்களாக செயல்படுகின்றன லக்னோவும், பாட்னாவும். மட்டுமல்ல; பீகாரி சினிமாவின் முதன்மைப் பகுதியே போஜ்புரி சினிமாதான்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கயானா, பிஜி, தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் என முக்கிய இடங்களில் எல்லாம் போஜ்புரி பேசுபவர்கள் இருப்பதால், உலகளவில் அதன் சினிமா சந்தை விரிவடைந்துள்ளது. அதனால் போஜ்புரி படங்களும் கோடிகளில் வசூலை அள்ளுகின்றன. அப்படி வசூலை அள்ளிய முக்கிய படங்களின் விவரங்கள் இதோ...

சசுரா படா பைசாவாலா (2003)

இதுவரை வெளியான போஜ்புரி படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் இதுதான். சுமார் 40 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, ரூ.35 கோடியை அள்ளிய படம் இது.
படத்தின் கதை ரொம்பவே எளிமையானது. கதையின் நாயகன் எதேச்சையாக ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். அந்தப் பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான்.

ஆனால், அவர்களின் காதலுக்கு நிறைய எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்த எதிர்ப்புகளை எப்படி நாயகன் சமாளிக்கிறான்... அவனது காதல் என்னவாகிறது... என்பதை சுவாரஸ்யமாகச் சொல்கிறது திரைக்கதை.போஜ்புரி பட விரும்பிகள் தவறவிடக்கூடாத படம் இது. முக்கிய கதாபாத்திரங்களில் மனோஜ் திவாரியும், ராணி சட்டர்ஜியும் நடித்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் அஜய் சின்ஹா. முழுப்படமும் யூடியூபில் காணக்கிடைக்கிறது.

பிரதிக்யா (2008)

போஜ்புரி படங்களில் பெரிய ஹிட் அடித்த படம் இது. அதிக வசூலைக் குவித்த போஜ்புரி படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது இப்படம்.ஹர்னம் சிங்கும், பைரவ் சிங்கும் அண்ணன் - தம்பி உறவுக்கு உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். 

இருவருக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு நாள் அண்ணன் ஹர்னம் சிங்கின் மனைவியான மாதவி மீது குற்றம் சுமத்துகிறான் தம்பி பைரவ் சிங். சொத்தை அடைவதற்காக இந்தக் குற்றத்தை வைக்கிறான் பைரவ். அத்துடன் ஹர்னம் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள ஏற்பாடும் செய்கிறான் பைரவ்.

தன் மீதான எல்லா பொய்க்குற்றங்களையும் தாங்கிக்கொண்டு சூரஜ் என்ற மகனைப் பெற்று எடுக்கிறாள் மாதவி. சூரஜ் வளர்ந்து பெரியவனாகி, எப்படி அம்மாவின் மீதான களங்கத்தைப் போக்குகிறான் என்பதே மீதிக்கதை. சுமார் ரூ.35 கோடியை அள்ளிய இப்படம் யூடிபில் காணக்கிடைக்கிறது. இதன் இயக்குநர் சுசீல் குமார் உபாத்யாய்.

கங்கா (2006)

அமிதாப் பச்சன், ஹேம மாலினி, நக்மா என பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த போஜ்புரி படம் இது. 21 கோடி ரூபாயை வசூல் செய்து, போஜ்புரி படங்களிலேயே அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தப் படம். யூடியூபில் பார்க்கலாம். நன்றாகப் படித்தவளும், புத்திசாலியுமான கங்கா ஒரு குக்கிராமத்தில் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறாள். கங்காவுக்கு நடக்கிவிருந்த ஒரு அசம்பாவிதத்திலிருந்து அவளைக் காப்பாற்றுகிறான் சங்கர்.

இந்நிலையில் கங்காவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்கிறார் அவளுடைய தந்தை. ஆனால், கங்காவோ சங்கரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள். கங்கா யாரை திருமணம் செய்துகொள்கிறாள் என்பதே கிளைமேக்ஸ். பழைய கதையாக இருந்தாலும், திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் அபிஷேக் சத்தா.

பார்டர் (2018)

கடந்த சில வருடங்களில் வெளியான போஜ்புரி படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் இது. அதாவது 19 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது இந்தப் படம்.ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறான் அபய். அவனுடைய அண்ணன் இராணுவத்தில் கேப்டனாக இருக்கிறார். உள்ளூரில் இருக்கும் இஸ்லாமிய பெண்ணைக் காதலிக்கிறான் அபய். இந்த காதலுக்கு அபயின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார். அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருக்கிறான் அபய்.

இந்நிலையில் அண்ணன் விஜய்க்கு நிகழும் ஒரு சம்பவம், தம்பி அபயை இராணுவத்தில் சேர்ந்து பாகிஸ்தானை எதிர்க்கத் தூண்டுகிறது. அபய் இராணுவத்தில் சேர்ந்தானா... இஸ்லாமிய பெண்ணைத் திருமணம் செய்தானா... என்பதற்கு பதில் தருகிறது திரைக்கதை.யூடியூபில் காணக்கிடைக்கும் இப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் மிஸ்ரா.

நிராஹுவா ரிக்‌ஷாவாலா (2008)

சுமார் 7.5 கோடி ரூபாயை வசூல் செய்து, அதிக வசூலை அள்ளிய போஜ்புரி படங்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது இப்படம். நகரத்திலிருந்து கிராமத்துக்கு வருகிறாள் ஒரு பெண். அந்த ஊரில் இருப்பவர்களை அவளுக்கு பெரிதாகத் தெரியாது. அவளுக்கு நிறைய பிரச்னைகள் வருகின்றன. அந்தப் பெண்ணின் அவல நிலையைக் கண்டு, அவளுக்கு உதவ முன்வருகிறான் உள்ளூர்க்காரன் ஒருவன்.

அந்தப் பெண் தொடர்ந்து அந்தக் கிராமத்திலேயே இருந்தாளா... அவளது பிரச்னைகள் தீர்க்கப்பட்டதா... என்று அவளைச் சுற்றிச் செல்கிறது திரைக்கதை.
போஜ்புரி படங்களைப் பார்க்கத் தொடங்குபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் தின்கர் கபூர்.

த.சக்திவேல்