பல படங்களின் கலவையா எனது படம்?! இயக்குநர் அட்லி Open Talk
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது ‘ஜவான்’ இந்திப் படத்தின் வசூல் நிலவரம் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும். இதுவரையிலான இந்திப் பட வசூலில் ஷாருக்கானின் ‘பதான்’தான் முன்னிலையில் இருக்கிறது. இந்த ரிக்கார்டை அதே ஷாருக்கானின் ‘ஜவான்’ முறியடிக்குமா இல்லையா என்பது குறித்த ஒரு சித்திரம் கிடைத்திருக்கும்.  விஷயம் இது மட்டுமே அல்ல. ‘ஜவான்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறாரே அட்லி... அதுதான் மேட்டர். தமிழ்த் திரையுலகின் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக வலம் வரும் அட்லியின் முதல் இந்திப் படமான இதுவும் பாலிவுட் வசூலில் சாதனை புரியுமா என்பதெல்லாம் இந்நேரம் தெரிந்திருக்கும்.  சிறந்த ஃபிளாஷ்பேக் எழுத்தாளர்... இந்த வார்த்தைகளுக்கு ஏற்பவே எப்போதும் தனது படங்களில் ஒரு ஃபிளாஷ்பேக்கில் எமோஷன் அல்லது சோகம் என ஏதோ ஒரு உணர்வை கடத்தி பார்வையாளர்களை கட்டிப் போடுவதில் வல்லவர் இயக்குநர் அட்லி. ‘ஜவான்’ படத்தில் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட ஃபிளாஷ்பேக்குகள். அத்தனையும் பார்வையாளனின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
 படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்து வரும் நிலையில் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆக சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் அட்லி. ஃபிளாஷ்பேக் சம்பவங்கள் மேல் அப்படி என்ன ஆர்வம்?
 எங்கேயாவது தனியா உட்கார்ந்து சிந்தனையிலே மூழ்கினோம்னா நம்ம மனசுக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது முன்பு நடந்த சம்பவங்கள்தான். நிகழ்காலத்தில் என்ன நடக்குது... ஏன் நடக்குது... எதிர்காலத்தில் என்னவா இருக்கப் போறோம்... என்ன நடக்கப் போகுது... இதெல்லாம் விட நமக்கு எப்போதும் ஏதோ ஒரு உணர்வையோ, மகிழ்ச்சியையோ கொடுக்கறது மெமரீஸ்தான்.
 மெமரீஸுக்கு எப்பவுமே வலிமை அதிகம். அதனாலேயே ஃபிளாஷ்பேக் காட்சிகள் எழுதும்போது கூடுதல் கவனம் செலுத்துவேன். சர்வதேச அளவில் ‘ஜவான்’ படத்திற்கு எத்தனை ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டது?
 உலக அளவில் எனக்குத் தெரிந்து 11,000 ஸ்கிரீன்களுக்கு மேலே இருக்கலாம். அமெரிக்காவில் மட்டுமே முதல்முறையா 1500க்கும் மேலான ஸ்கிரீன்களில் ‘ஜவான்’ திரையிட்டு இருக்காங்க.எவ்வளவு மெனக்கெட்டாலும் பல படங்களின் கலவையாக படம் எடுக்கிறீர்கள் என்ற நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துக்களும் இருக்கிறதே... இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
 என்னைப் பொறுத்தவரை அதுதான் என்னை இந்த அளவுக்கு ஓடவெச்சிருக்குன்னு நான் நினைக்கிறேன். அதனால்தான் நான் இங்கே வந்து நிற்கறேன்னு கூட சொல்லலாம். ஒருசில கருத்துக்கள் ஏற்புடையதா இருந்தா ஏத்துக்குவேன், இல்லன்னா அதற்கு பெரிதா ரியாக்ட் செய்யறது இல்லை.
 பொதுவா நாம எல்லாரையும் திருப்திப் படுத்த முடியாது இல்லையா... கண்டிப்பா பாசிட்டிவ் விமர்சனங்கள், கருத்துகள் வருதுன்னா இன்னொரு பக்கம் இருந்து நெகட்டிவ் விமர்சனங்களும் கருத்துகளும் வரத்தான் செய்யும். அதையும் நான் ஏத்துக்கறேன். அதுதான் என்னை ஓட வைக்கிற சக்தியா பார்க்கறேன்.
அவ்வளவு பெரிய நடிகரான ஷாருக் படத்தின் ஷூட்டிங்கை தமிழ்நாட்டில் நடத்த என்ன காரணம்..? அதுவும் கோடிக்கணக்கில் செட்டு போட்டு..?
ஷாருக் சார்கிட்ட ஒரு விஷயம்தான் சொன்னேன். ‘நம்ம படம் இல்லைன்னாலும் மும்பைல ஏதோ ஒரு பாலிவுட் பட ஷூட்டிங் நடந்துட்டுதான் இருக்கும். அதன் வழியா பாலிவுட் சினிமா தொழிலாளர்களுக்கு வேலை இருந்துகிட்டுதான் இருக்கும். அதுவே இந்த செட்டை தமிழ்நாட்டில் அமைத்தால் சுமார் 300 குடும்பங்கள் இதனால் பலன் அடையும். 300க்கும் மேலான பணியாளர்கள் பயன்பெறுவாங்க. இதுக்கு உங்க சம்மதம் வேணும்’ அப்படின்னு சொன்னேன்.
‘நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்யலாம்’ அப்படின்னு சொன்னார். படத்தின் மிக முக்கியமான காட்சிகள், படத்தின் மையக்கரு எல்லாமே இந்த ஜெயில் செட்தான். இந்த செட்டை ஒருவேளை மும்பையிலேயே அமைச்சிருந்தா சுமார் 10 முதல் 20 கோடி வரையிலும் ஷாருக் சாருக்கு பணம் மிச்சமாகியிருக்கும். ஆனால், அதையெல்லாம் அவர் பெருசா எடுத்துக்கலை. தமிழ், இந்தி என பயணம் செய்தாச்சு... தெலுங்கு நடிகர் யாரையாவது இயக்கும் எண்ணம் இருக்கிறதா?
யார் கேட்டாலும் கதை பொருத்தமாக இருந்தால் நிச்சயம் இயக்கத் தயாராக இருக்கிறேன். இந்தப் படத்திற்கு நிறைய பேர் கூப்பிட்டு வாழ்த்துகள் சொல்லியிருக்காங்க, அல்லு அர்ஜுன் உட்பட.
எந்த நடிகராக இருந்தாலும் அவர்களுக்கான கதை எழுதணும். அந்தக் கதை அவங்களுக்குப் பிடிக்கணும். அதுதான் முக்கியம். குறிப்பா அந்தக் கதை அவங்களுக்கு செட் ஆகணும். தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட் சினிமாவை பார்ப்பதற்கும், பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவைப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?
நான் இந்திக்குப் போனதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது. என்றைக்கோ எஸ்.எஸ்.வாசன் சார், ஸ்ரீதர் சார், கே.பாலச்சந்தர் சார், பாக்யராஜ் சார், ஷங்கர் சார், பி.சி.ஸ்ரீராம் சார்லாம் மாஸ் காண்பிச்சுட்டாங்க. அவங்கல்லாம் செய்த சாதனைக்கு முன்னாடி நான் எல்லாம் எம்மாத்திரம்..? என்ன.. இப்போ இந்த மாற்றம் நம் தமிழ் டெனீஷியன்கள், சினிமா மேக்கர்களுக்கு அவங்களுடைய எல்லைகளை உடைச்சு வெளியே வர ஒரு வாய்ப்பா இருக்கும்னு நம்பறேன்.
இந்தக் கலப்பு மூலம் இங்கே இருக்கும் நல்ல கலைஞர்கள் இந்திய அளவிலே அங்கீகாரம் பெறுவாங்க. பான் இந்தியா டாக் மூலமா பலருக்கும் மொழிகள் கடந்து வேலை செய்கிற வாய்ப்பு கிடைக்குது.
ஒரு வசதியான இடத்தை விட்டு வெளியே போயி வேலை செய்யும்போது நிச்சயம் அதிலே ரிஸ்க் இருக்கும். அதெல்லாம் தட்டிவிட்டு மேலே போனாதானே நமக்கான இடம் கிடைக்கும்..? நம்ம கதைகளையும், திரைக்கதைகளையும் இந்தியா முழுக்கவே விரும்ப ஆரம்பிச்சிடுச்சு. நான் ஜெயிக்கும்போது கூடவே ஒரு கூட்டமே ஜெயிக்கும். விஜய் என்ன சொன்னார்?
ஷாருக் சாரை இயக்குவது பெரிய வாய்ப்பு... யோசிக்காம தைரியமா செய்னு அண்ணன் சொன்னார். அவரால்தான் இந்த அட்லி... அவரால்தான் இந்த அங்கீகாரம். அவருக்கு வெறும் நன்றி எல்லாம் பத்தாது. இந்திய அளவில் மிகப்பெரிய இயக்குநராக அவதாரம் எடுத்தாச்சு... ஷாருக்கானையும் இயக்கியாச்சு... அடுத்து என்ன திட்டம்?
என் மகனுக்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறேன்! ஒரு நாலு மாசம் பிரேக் எடுத்துக்கிட்டு அவன்கூட நேரம் செலவிடணும்னு நினைக்கிறேன். அவன் பிறந்து ஏழு மாசம் ஆச்சு. இப்போ வரையிலும் என் மகன் கூட சரியா நேரம் செலவிட முடியலை. அடுத்த திட்டம் அதுதான். நான்கு மாதங்கள் முடிந்துதான் என்ன செய்யப் போறேன்னு எனக்கே தெரியும்.
என் மனைவியையும்கூட ரொம்ப மிஸ் பண்றேன். அவங்க டெலிவரி டைம்லகூட அவங்களுக்கு சப்போர்ட் கொடுக்க முடியாம இருந்தேன். அவங்களுக்கும் நேரம் கொடுக்கணும். அதுதான் இப்போதைக்கு ஒரே திட்டம்.
ஷாலினி நியூட்டன்
|