கச்சேரிகளில் 3 1/2 அடி நீளமுள்ள புல்லாங்குழல் வாசிக்கும் முதல் கர்நாடக இசைக் கலைஞர்!



ஒன்றோ, இரண்டோ அல்ல. சுமார் 1,850 இசைக் கச்சேரிகள். இதில் 28 சர்வதேச இசைப் பயணங்கள். தவிர, இந்தியா முழுவதும் தொடர் இசை நிகழ்ச்சிகள் எனப் புல்லாங்குழலில் இளம் கர்நாடக இசைக் கலைஞராக ஜொலிக்கிறார் ஜெ.ஏ.ஜெயந்த்.
பொதுவாக இசை வாத்தியங்களில் புல்லாங்குழல் இசை பலருக்கும் பிடித்தமான ஒன்று. இதில், ஜெயந்த்தின் வாசிப்பும், நுணுக்கங்களும் பலரையும் வியக்க வைக்கிறது. குறிப்பாக, உலகம் முழுவதுமுள்ள கர்நாடக இசை ரசிகர்களும், பிரியர்களும் இவரின் வாசிப்பைக் கேட்டு நிரம்பப் பாராட்டுகின்றனர்.

அடுத்த வாரம் உலகப் புகழ்பெற்ற மொரோக்கோவின் ‘Fes’ இசைத் திருவிழாவிலும், நவம்பர் மாதம் ஃபிரான்சில் நடக்கும் உலகின் டாப் டென் இசை நிகழ்வான, ‘Theatre de la villa’ அமர்விலும் புல்லாங்குழல் இசைக் கச்சேரியை நிகழ்த்த இருக்கிறார் ஜெயந்த். இதனால், இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட முதல் இளம் கர்நாடக இசைக் கலைஞராக மிளிர்கிறார் முப்பது வயதே நிரம்பிய ஜெயந்த்.

‘‘என் பூர்வீகம் தஞ்சாவூர் ஜில்லா திருவாவடுதுறை. என் கொள்ளுத் தாத்தா டி.என்.சாம்பசிவ அய்யர் திருவாவடுதுறை ஆதீனத்துல ஆஸ்தான புல்லாங்குழல் வித்வானாக இருந்தவர். என் தாத்தா டி.எஸ்.சங்கரன் புல்லாங்குழலில் கலைமாமணி, சங்கீத நாடக அகடமி விருது பெற்ற மாபெரும் கலைஞர். அவங்க மரபில் வந்த எனக்கும் சிறுவயதிலிருந்தே புல்லாங்குழலில் அதீத ஆர்வம். அந்த ஆர்வமே இப்போது என்னை பலர் அறிய செய்திருக்கு...’’ என மெல்லிய புன்னகையுடன் பேசுகிறார் ஜெயந்த்.

‘‘நான் பிறந்தது மதுரையில. என் அப்பா ஜெயராமன், பாதுகாப்பு அமைச்சகத்துல வேலை செய்தார். இதனால் என்னுடைய பத்து வயசு வரைக்கும் மும்பை, நாசிக், கொல்கத்தானு சுத்திக்கிட்டே இருந்தோம். ஆனா, நான்கு வயசுலயே புல்லாங்குழல் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். என் தாத்தாதான் என் முதல் குரு. புல்லாங்குழல் வாசிக்கிறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனால, நான்தான் தாத்தாகிட்ட படிக்கணும்னு ஆசைப்பட்டு கேட்டேன். என் ஆசையைப் பார்த்து அவர் எனக்குக் கத்துத் தந்தார்.

பிறகு, ஏழு வயசுல என் முதல் கச்சேரியை மயிலாப்பூர்ல இருக்கிற சாஸ்திரி ஹால்ல பண்ணினேன். இதன்பிறகு சென்னையில் நான் வாசிக்காத இடமே கிடையாது. இந்தியாவிலும் வாசிக்காத ஊர் இல்ல. அந்தளவுக்கு இப்பவரை என் சுவாசமாகவே புல்லாங்குழல் இசைக் கச்சேரியை செய்திட்டு வர்றேன். என் பத்தாவது வயசுலதான் இதை புரொஃபஷனலாக, அதாவது இதுதான் நம்முடைய வாழ்க்கைனு எடுத்திட்டு போனேன். ஆனா, தாத்தா நான் படிச்சு நல்லதொரு வேலைக்குப் போகணும்னும், இந்தக் கலையை பகுதி நேரமாக வச்சுக்கணும்னும் அறிவுறுத்தினார்.
இருந்தும் நான் இந்தக் கலையை சிறப்பாகக் கத்துக்கிட்டு பிரமாதமாக பிரகாசிக்கணும்னு பிடிவாதமாக இருந்தேன்.

சிறந்த கலைஞனாகி, அதன்வழியாக இந்தக் கலையை இன்னும் பிரபலப்படுத்தணும்னு நினைச்சேன். அப்படியாக என்னை நானே டெவலப் பண்ணிக்கிட்டேன். இன்னும் டெவலப் பண்ணிக்கிட்டும் இருக்கேன். என் தாத்தா இருக்கிற வரை நிறைய உதவிகள் செய்தார். அப்புறம், என் அப்பா ஜெயராமனும், அம்மா ஜெயஸ்ரீயும் பக்கபலமாக இருந்தாங்க. இப்ப என் மனைவி ப்ரியம்வதா எனக்கு உறுதுணையாக இருக்காங்க.

கல்லூரி படிக்கிறப்பவே நான் கொஞ்சம் பாப்புலராகிட்டேன். தில்லி, புனே, மும்பைனு பல மாநிலங்களுக்கும் பயணமாகி கச்சேரிக்குப் போறதும் வர்றதுமாக இருந்தேன். மாசம் ஏழெட்டு கச்சேரிகளாவது செய்திடுவேன். தாத்தாவுக்காகவே பி.இ எஞ்சினியரிங் முடிச்சேன். பிறகு, முழுநேரமும் புல்லாங்குழல் இசைக்கலைஞராக மாறினேன்.

இதுக்கிடையில் 2013ம் ஆண்டு சஞ்சய் சுப்ரமணியன் சார்கிட்ட சேர்ந்தேன். அவர்தான் என் இரண்டாவது குரு. அவர்கிட்ட நிறைய தமிழ் கீர்த்தனைகள் படிச்சேன். இப்பவும் அவர் ஃப்ரீயாக இருக்கிறப்ப போய் கத்துக்கிறேன். இதுவே என்னை நல்லதொரு கலைஞராக ஆக்கியது...’’ என்கிறவர், புல்லாங்குழலில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வைத்திருக்கிறார்.

‘‘புல்லாங்குழல்ல நிறைய நுணுக்கங்கள் இருக்கு. ஆரம்பத்துல இதை நிறைய இசைகள் கேட்டுக்கேட்டுத்தான் தெரிஞ்சுகிட்டேன். இதுதவிர, நாமே நமக்கு ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கணும்னு சொல்லி எனக்குனு ஒரு ஸ்டைலை 2011 - 2012 காலகட்டத்தில் உருவாக்கினேன்.

என்னுடைய தனித்துவம்னு பார்க்கிறப்ப என் புல்லாங்குழல் தொனியும், blowing techniqueனு சொல்லப்படுற ஊதும் நுட்பமும்தான். இதை நீங்க கேட்கும்போதுதான், மற்றவங்கள்ல இருந்து நான் ப்படி மாறுபடுறேன்னு உங்களுக்குப் புரியும்.முதல்ல சத்தம். 

அடுத்து வேகமாக வாசிக்கிறது. என் புல்லாங்குழல் இசையையும், வாசிக்கிற வேகத்தையும் வச்சே இது ஜெயந்த்னு கண்டுபிடிச்சிடுவாங்க. இதுதவிர, கல்பனா ஸ்வரங்கள்னு ஒரு பிரிவு இருக்கு. 

அதுல வாசிக்கிறப்ப தாளம் சார்ந்து வாசிப்பதும், ஜாலங்கள் செய்வதும் எனக்கான தனித்துவமாக இருக்கும். இதைக் கேட்டும் ரசிகர்கள் இது ஜெயந்த் இசைனு புரிஞ்சுப்பாங்க...’’ என்கிறவர், ஒரு புல்லாங்குழலை எடுத்து நமக்காக வாசித்துக் காட்டினார். அது 106 செமீ நீளமுள்ள (மூன்றரை அடி) மிகப்பெரிய புல்லாங்குழல்.  

‘‘இதை நீளமான டபுள் பாஸ் பன்சூரி புல்லாங்குழல்னு சொல்வாங்க. இந்தப் புல்லாங்குழல் நம்மூரில் பரிச்சயம் கிடையாது. இதை  இந்துஸ்தானி இசையில் ஒருவர் வாசிக்கிறதைக் கேட்டேன். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. இதை நம்முடைய கர்நாடக இசையில் பயன்படுத்திப் பார்த்தால் என்னனு தோணுச்சு. 

இது நடந்தது எட்டாண்டுகளுக்கு முன்பு. உடனே, எனக்கு புல்லாங்குழல் உருவாக்கித் தருபவரிடம் சொன்னேன். அவர், ‘நான் இந்த மாதிரி உருவாக்கினதே கிடையாதே’னு சொன்னார். பிறகு, எனக்காக முதல்முறையாக டபுள் பாஸ் பன்சூரி புல்லாங்குழலை உருவாக்கித் தந்தார். இதை உருவாக்கவே ஆறு மாசங்கள் ஆச்சு.

கர்நாடக இசையில் 106 செமீ நீளமுள்ள (மூன்றரை அடி) புல்லாங்குழலை, அதுவும் கர்நாடக இசைக் கச்சேரிகளில் வாசிக்கிறது நான் மட்டும்தான். இதை 2015ல் இருந்து வாசிக்கிறேன்.
ஆரம்பத்துல கச்சேரிகளில் இந்த மூன்றரை அடி புல்லாங்குழலை எடுத்ததும் பார்வையாளர்கள் எல்லோரும் ஆச்சரியமாகப் பார்த்தாங்க. 

பிறகு வாசிக்கத் தொடங்கினதும் ரொம்ப சந்தோஷமாகக் கேட்டாங்க. அப்புறம், அவங்களுக்கு இந்தப் புல்லாங்குழல் சைஸ் ஆகட்டும், அதுல இருந்து வர்ற இசையாகட்டும் எல்லாமே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. இதுவும் இப்ப நான் தனித்துவமாகத் தெரிய ஒரு காரணமாகியிருக்கு...’’ என நெகிழ்ந்தவரிடம், பிடித்த இசைக் கலைஞர்கள் பற்றிக் கேட்டோம்.

‘‘டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பற்றி என் தாத்தா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கேன். பிறகு, அவரின் ஆடியோ இசையைக் கேட்டேன். அவர்மேல எனக்கு பெரும் மதிப்பு உண்டானது. இப்போதும் அவரின் இசையைக் கேட்கக் கேட்க அவ்வளவு பிரமாதமாக இருக்கு. அப்புறம், புல்லாங்குழலில் மாலி ரொம்பப் பிடிக்கும். இவர் என் தாத்தாவின் குரு. அவரின் முதன்மை மாணவராக இருந்தவர் என் தாத்தா.

அதனால நானும் சின்ன வயசுல மாலி மாதிரி வாசிக்கணும்னு நினைச்சு வாசிச்சிருக்கேன். கேட்குறவங்ககூட மாலி வாசிக்கிற மாதிரியே இருக்குனு சொல்வாங்க. அதைக் கேட்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். ஆனா, போகப்போகத்தான் தெரிஞ்சது, வெறுமனே காப்பி மட்டும் பண்ணினால் போதாது. நமக்கென ஒரு தனித்துவம் வேணும்னு. அதற்காகவே ஸ்டைல் கிரியேட் பண்ணினேன்.

அப்புறம், இந்துஸ்தானி புல்லாங்குழல் மேதை ஹரிபிரசாத் சௌராசியாவை ரொம்பப் பிடிக்கும். இவர் சம்பூர்ணமான ஒரு புல்லாங்குழல் கலைஞர். இப்ப அவருக்கு 85 வயசாகுது. 70 ஆண்டுகளாக கச்சேரி பண்ணிட்டு இருக்கார். இன்னும் பண்றார். 

சினிமா இசையிலும் ஜொலித்தவர்.இதேபோல நானும் சினிமா, ஆவணப்படங்களுக்கு எல்லாம் புல்லாங்குழல் வாசிக்கிறேன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஸ்பைடர்’ படத்திற்கு வாசிச்சிருக்கேன். இளையராஜா சாரும் என்னைப் பாராட்டியிருக்கார். அவர் வீட்டுல நவராத்திரி கச்சேரி நடக்கும். அதுல எட்டாண்டுகளுக்கு முன்னாடி அழைப்பின்பேரில் போய் வாசிச்சேன். ரொம்பப் பிரமாதமாக இருந்ததுனு என் அம்மாவிடம் சொன்னார்.

இந்தக் கர்நாடக சங்கீதம் தவிர்த்து நான், ‘ஃப்ளூட் ஜெயந்த் அண்ட் பேண்ட்’னு ஒரு மியூசிக் பேண்டும் வச்சிருக்கேன். இதன்வழியாக கமர்ஷியல் மியூசிக் பண்றேன்...’’ என்கிறவருக்கு எதிர்காலத்தில் இசைப் பள்ளி அமைக்க வேண்டும் என்பதே திட்டம். ‘‘அடுத்த ரெண்டு ஆண்டுகளுக்கு வெளியூர், வெளிநாடுகள்னு பயணங்கள் நிறைய இருக்கு. குறிப்பாக, இந்த செப்டம்பர் 15ம் தேதியிலிருந்து நவம்பர் மாசம் வரை இலங்கை, துபாய், மொரோக்கோ, ஃபிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, ஸ்வீடன், பெல்ஜியம்னு ஒரு சர்வதேச டூர் புரோகிராம் பண்றேன்.

இதுல சர்வதேச திருவிழாக்கள் சிலவற்றில் வாசிக்கிறேன். இந்தியாவுல இருந்து நிறைய பேர் போகாத சில திருவிழாக்கள்லயும் கலந்துக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு.
அதுல முக்கியமாக Fez அல்லது Fes ஃபெஸ்டிவல்னு மொரோக்கோ நாட்டுல நடக்கும். இந்தத் திருவிழாவுல முதல்முறையாக இளம் கர்நாடக இசைக்கலைஞராக நான் கலந்துக்கிறேன். இதன்பிறகு, ஃபிரான்ஸ் நாட்டுல ‘Theatre de la villa’னு ஒரு தியேட்டர் நிகழ்வு நடக்கும். அதிலும் நான் பங்கேற்று வாசிக்கிறேன்.

 என் எதிர்காலத் திட்டம்னா அது ஒரு இசைப் பள்ளி அமைக்கணும் என்பதுதான். அதன்வழியாக நிறைய பேருக்கு புல்லாங்குழல் இசையைக் கொண்டு போய்ச் சேர்க்கணும்னு நினைக்கிறேன். அப்புறம், நிறைய புல்லாங்குழல் இசைக் கலைஞர்களை உருவாக்கணும்னும் நினைச்சிருக்கேன். இதுதவிர, இசையின் வழியாக சமூக சேவைகள் நிறைய பண்ணணும்னு மனசுல ஓர் ஆசையும் இருக்கு. நிச்சயம் செய்வேன்...’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெ.ஏ.ஜெயந்த்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்