ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயி!



இந்தியா முழுவதும் நவீன விவசாயம், துல்லிய விவசாயம், இயற்கை விவசாயம் என பலவிதமான விவசாய முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்ற முறை பிரபலமாகி வருகிறது. 
வழக்கமான நவீன விவசாயத்தில் கெமிக்கல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்காக ஒரு தொகையை செலவு செய்வோம். இந்தச் செலவு இல்லாமல் மாட்டுச் சாணம், கோமியம்  போன்றவற்றைக் கொண்டு  விவசாயம் செய்யும் முறைக்கு ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்று பெயர். இதில் முக்கிய விவசாயியாகத் திகழ்கிறார் கிருஷ்ணப்பா தாஸப்பா கவுடா.

கர்நாடகாவில் உள்ள பன்னூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணப்பா. அங்கே பல வருடங்களாக, அவரது முன்னோர்கள் கற்றுத்தந்த முறையில் கெமிக்கல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி நெல் விவசாயம் செய்து வந்தார். 
25 ஏக்கர் என்பதால் முதலீடு அதிகமாக இருந்தது. ஆனால், விளைச்சல் பெரிதாக இல்லை. இருந்தாலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கான வருமானம் கிடைத்து வந்தது. சில வருடங்கள் அந்த வருமானமும் கிடைக்காமல் அவதிப்பட்டார். விவசாயத்தைக் கைவிட்டு, வேறு வேலை பார்க்கலாம் என்றுகூட அவருக்குத் தோன்றியது.

இந்நிலையில்  2005-ம் வருடம்  ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையை உருவாக்கியவரான சுபாஷ் பலேக்கரின் அறிமுகம் கிருஷ்ணப்பாவுக்குக் கிடைத்தது. இருவரும் நீண்ட நேரம் உரையாடினார்கள். 

கிருஷ்ணப்பாவை ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறை வெகுவாகக் கவர்ந்தது. பழைய நெல் விவசாயத்தை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, பரிசோதனை முயற்சியாக ஒரு ஏக்கரில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தார். இயற்கை முறையில் வீட்டில் உருவாக்கிய உரங்கள் பயன் தரவில்லை. அத்துடன் 50 சதவீத பயிர்கள் சேதமடைந்தன. முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தாலும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை அவர் கைவிடவில்லை.

மீண்டும் சுபாஷுடன் தொடர்பு கொண்டார். அவர் சொல்வதை, வழிகாட்டுவதை தனது நிலத்தில் செயல் படுத்தினார் கிருஷ்ணப்பா. சில மாதங்களுக்கு சுபாஷின் வழிகாட்டல் தொடர்ந்தது. இந்தமுறை கிருஷ்ணப்பா ஜெயித்துவிட்டார். ஆம்; அவர் நினைத்துப்பார்த்ததைவிட அதிக விளைச்சல் கிடைத்தது. அத்துடன் மண்ணும் வலிமை பெற்றது.

முதலீடும் குறைவு. இதுபோக ஒரே இடத்தில் காய்கறிகளும், பழங்களும் வளர்வது அவருக்கு ஆச்சர்யமளித்தது. ஒரு ஏக்கரிலிருந்து ஐந்து ஏக்கரில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தார். ஐந்து ஏக்கரையும் ஐந்து அடுக்குகளாகப் பிரித்து, பல்வகை விவசாயம் செய்யத் தொடங்கினார். இந்த ஐந்து ஏக்கரும் ஒரு பண்ணை போல இல்லாமல், பல்வகையான தாவரங்களால் நிரம்பியிருக்கும் காடு போல காட்சியளித்தது.  

இப்போது முதல் அடுக்கில் 30 தென்னை மரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தென்னையும் வருடத்துக்கு குறைந்தபட்சம் 300  இளநீர் அல்லது தேங்காய்களைக் கொடுக்கிறது. இதன் மூலம் மட்டுமே வருடத்துக்கு 1.80 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இரண்டாம் அடுக்கில் 30 ஆரஞ்சு மரங்கள் வீற்றிருக்கின்றன.  ஒவ்வொரு மரமும் குறைந்த பட்சம் 15 கிலோ முதல் 100 கிலோ வரையிலான  ஆரஞ்சுகளைக் கொடுக்கின்றன. இதில் மட்டுமே வருடத்துக்கு 1.50 லட்சம்  வருமானத்தை ஈட்டுகிறார்.

மூன்றாவது அடுக்கில் 200 வாழை மரங்கள்  மற்றும் 400 பாக்கு மரங்கள் அழகாக காட்சியளிக்கின்றன. வருடத்துக்கு பாக்கு  மரங்களின் மூலம் 2.4 லட்சமும், வாழை மூலம் 60 ஆயிரமும் கிடைக்கிறது.  நான்காம் அடுக்கில் சீமைக் கிளுவை, கோகோ, காப்பி, கருமிளகு, வெண்ணிலா என  பல்வகை தாவரங்கள் நிரம்பியிருக்கின்றன. இதன் மூலமும் வருடந்தோறும் சில லட்சங்கள் கிடைக்கிறது. கடைசி அடுக்கில் இஞ்சி மற்றும் மஞ்சளைப்  பயிரிட்டிருக்கிறார்.

வருடந்தோறும் 10 குவிண்டால் மஞ்சளையும், இஞ்சியையும்  அறுவடை செய்து வருமானத்தை அள்ளுகிறார் கிருஷ்ணப்பா. இதுபோக முருங்கைக்காய்,  கீரை வகைகள், சுரைக்காய், கத்தரிக்காய், எலுமிச்சை, பருப்பு வகைகள் என  கிருஷ்ணப்பாவின் விவசாயப் பட்டியல் நீள்கிறது. ஒட்டு மொத்தமாக ஒரு ஏக்கருக்கு 5  லட்ச ரூபாய் வீதம், 5 ஏக்கரில் வருடத்துக்கு 25 லட்ச ரூபாயைக் குவிக்கிறார்  இந்த இயற்கை விவசாயி. இத்தனைக்கும் பத்தாவது வரை மட்டுமே படித்தவர்  கிருஷ்ணப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறையால் உற்பத்தி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணும் வலிமையாகிறது. இப்போது என்னுடைய பண்ணையில் 177 வகையான மரங்கள், செடிகள் இருக்கின்றன.

இப்படி பல்வகையான விவசாயம் செய்வதால், ஒரு பயிரை மட்டுமே நம்பி என் வருமானம் இல்லை. அத்துடன் கெமிக்கல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தியபோது தேவைப்பட்ட தண்ணீரைவிட, இப்போது ரொம்பவே குறைவான தண்ணீர்தான் தேவைப்படுகிறது. மட்டுமல்ல, என் உடல் நலமும் ஆரோக்கியமாக உள்ளது. 

முன்பு கெமிக்கல் பயன்படுத்தியதால் தோல் பிரச்னை ஏற்பட்டிருக்கின்றது...’’ என்று சொல்கிற கிருஷ்ணப்பா, ஒவ்வொரு மாதமும் ஒரு ஏக்கர் நிலத்துக்கு பத்து கிலோ மாட்டுச் சாணத்தை உரமாகப் பயன்படுத்துகிறார். கிருஷ்ணப்பாவின் விவசாய முறையைப் பார்த்து அருகிலிருந்தவர்களும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தில் இறங்கிவிட்டனர். 

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொள்ள கிருஷ்ணப்பாவைத் தேடி நிறைய பேர் வருகை புரியும் சம்பவமும் நடக்கிறது. ‘‘காடுகள் தானாகவே செழித்து வளரும். அதற்கு கெமிக்கல் உரங்களோ, பூச்சிக்கொல்லிகளோ தேவையில்லை. இயற்கையாக கிடைக்கும் மழையை வைத்து, விலங்குகளின் கழிவுகளைக் கொண்டு காடுகள் செழித்துக் காணப்படும்.

இதே முறையைத்தான் என் பண்ணையிலும் நான் பின்பற்றுகிறேன். அதனால் உரம், பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு அப்படியே மிச்சமாகிறது. இப்போது புது விதைகளை வாங்கவும், விவசாய வேலை செய்ய வருபவர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் மட்டுமே செலவு செய்கிறேன்...’’ என்கிற கிருஷ்ணப்பா, ‘‘ஒரு காட்டைப் போல பண்ணையை நடத்த வேண்டும். இதுதான் கடந்த 15  வருடங்களில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம்...’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார்.  

த.சக்திவேல்