இந்தியாவின் சாதனைக்கு காரணம் No Perfume!
இந்தியாவின் அடுத்தடுத்த சாதனைகள் என்ன..?
சட்டென சந்திரயான் 3; சூரிய ஆராய்ச்சிக்காக ஆதித்யா L1... என பள்ளி மாணவ மாணவியர் கூட சொல்லிவிடுவார்கள். இவை அனைத்தும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், தெரியாத விஷயம், வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அனுமதியில்லை என்பது!பலவிதமான மக்களும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்த விரும்புவார்கள்தான். ஆனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் அவர்களே விருப்பப்பட்டு பயன்படுத்த நினைத்தாலும் அனுமதியில்லை என்பது செய்தியல்ல... வரலாறு!

முக்கியமாக ‘கிளீன் ரூம்’ என்ற அழைக்கப்படுகிற அறையிலிருக்கும் விஞ்ஞானிகளுக்கு அனுமதியே கிடையாது.ஏன்?‘கிளீன் ரூம்’ என்று விஞ்ஞானிகளால் சொல்லப்படுவது ஆதித்யா L1 என்ற விண்கலத்தை தயாரித்த அந்த அறைதான்.  பொதுவாகவே விண்ணில் செலுத்தப்படும் எந்த ஒரு விண்கலன் என்றாலும் பல சோதனைகளுக்குப் பிறகுதான் விண்ணில் ஏவப்படும். அப்படி தயாரிக்கும்போதும், சோதனைக்கு உட்படுத்தப்படும் போதும் பல தொழில்நுட்பக் கோளாறுகளை தாண்டி, சுற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத துகள்களால் கூட எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும்.
 Indian Institute of Astrophysics (IIA) என்று அழைக்கப்படுகிற அமைப்பின் கீழ்தான் ஆதித்யா L1 பேலோட் உருவாக்கப்பட்டது.Visible Emission Line Coronagraph (VELC)- இந்த குழுதான் தூய்மை மற்றும் எந்த வெளித் துகள்களால் கூட எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது‘கிளீன் ரூம்’ என்று சொல்லப்படுகிற இந்த அறை மருத்துவமனையில் ஐசியு (ICU) எந்த அளவுக்கு சுத்தமாக இருக்குமோ அதைவிட ஒரு லட்சம் மடங்கு அதிக அளவில் சுத்தமாக பராமரிக்கப்படும் என்கிறார்கள்.
 இத்தனை சுத்தமாக இருப்பதால் அங்கு வாசனைத் திரவியங்களுக்கு அனுமதி இல்லை. வாசனைத் திரவியங்களிலிருந்து வெளிவரும் கண்ணுக்குத் தெரியாத வாசனைத் துகள்கள் அந்த அறையின் தூய்மையைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.அந்த அறைக்குள் செல்லவே சிறப்பு உடைகள் அணிந்திருக்க வேண்டும். எல்லோராலும் அத்தனை எளிதாக அந்த அறைக்குள் சென்றுவிட முடியாது. இந்த அறையின் தூய்மை அல்ட்ராசோனிக் ஒலியலைகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன.

இந்த அல்ட்ராசோனிக் அலைகள் மிக மிகச் சிறு இடங்களையும் சுத்தப்படுத்தும் வல்லமை படைத்தவை. உலோகங்கள், கண்ணாடி, ரப்பர், செராமிக், பிளாஸ்டிக் என எந்த பரப்பையும் அதனால் சுத்தம் செய்ய முடியுமாம்.
இத்தனை சுத்தமாக இருக்கக் கூடிய இடத்தில் வாசனைத் திரவியங்களின் துகள்கள் அசுத்தம் செய்துவிடும் என்பதால் அனுமதியில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஒரு சிறு துகள்கூட விண்கல உருவாக்கத்தைப் பாதித்துவிடும் என்பதால் இத்தனைக் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியுள்ளது. ஒரு துகள் வெளியேற்றம் கூட பல நாட்கள் கடின உழைப்பை முறியடித்துவிடும். ஆம். சந்திராயனும் ஆதித்யாவும் அத்தனை எளிதாக உருவாகவில்லை!
ஜான்சி
|